தேவையானவை: கடலை மாவு – 200 கிராம், சர்க்கரை – 350 கிராம், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை – தலா 20, லவங்கம் – 8, டைமண்ட் கல்கண்டு – 15, பச்சைக் கற்பூரம் – ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் – 5, பால் – ஒரு டீஸ்பூன், கேசரி கலர் – சிறிதளவு.
செய்முறை:
சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு சூடாக்கவும். கொதிக்கும்போது பால் விட்டு அழுக்கு நீக்கி, கேசரி கலர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். கடலை மாவை நீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை லட்டு தேய்க்கும் கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்து பாகில் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து, சர்க்கரை பாகு – பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும். கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.
குறிப்பு: கடலைப்பருப்பை வெயிலில் காயவைத்து, மெஷினில் அரைத்தால்தான் லட்டு சூப்பர் சுவையில் அசத்தும். செய்து வைத்த பாகு உறைந்து கெட்டியாகிவிட்டால் கவலை வேண்டாம். லேசாக சுடவைத்தும் லட்டு பிடிக்கலாம்.