மரங்கள் இரண்டு வகை. நேர்முகப் பலன் தருபவை, மறைமுகப் பலன் தருபவை. நேர்முகப் பலன் தரும் மரங்கள் என்றால், பிறந்தவுடன் தொட்டில், நடை பழக நடைவண்டி, வளரும்போது நாற்காலி மேசை, வாழ வீடு, உண்ண உணவு, பழங்கள், கால்நடைகளுக்கு இலைதழைகள், நோய் தீர்க்க மருந்துகள் இப்படி ஏராளமான விஷயங்கள் பல மரங்கள் மூலமாகக் கிடைக்கிறது. ஜனனம் முதல் மரணம் வரையென மனிதனின் வாழ்வெங்கும் வருகிற தாவர வரம், மரம்.
ஒரு மரம் என்பது பூமிக்கு மேலே எப்படிக் குடை பிடிக்கிறதோ அதைப் போலவே வேர்களும் பூமிக்குக் கீழே குடை விரிக்கின்றன. தண்ணீரைச் சேமிக்க நாம் மேல்நிலைத் தொட்டியைக் கட்டுவது போல, மரங்கள் பூமிக்குக் கீழே கீழ்நிலைத் தொட்டியைக் கட்டியுள்ளன. தண்ணீர் அந்த வேர்த் தொட்டியில் சேமிக்கப்படுகிறது. நிலத்துக்குக் கீழே நீரைச் சேகரிக்கவும், சுத்தமான மழை நீரை மண்ணுக்கு வழங்கவுமாக, மரங்களால் ஏற்படும் மறைமுக நன்மைகள் இவை.
பூமியில் உள்ள நீர்நிலைகள் ஆவியாகி, மேகமாகும். மேகங்களைக் காற்று தள்ளிச்செல்லும். அது மறுபடியும் எங்கேயாவது குளிர்ச்சியாகும்போது, மேக நீர்த்திவலைகள் மழையாய் பொழியும். மேகக் கூட்டம் குளிர்ச்சியடைவது மரக்கூட்டம் அதிகமாய் பரவி உள்ள இடங்களில்தான்.
இந்தப் புரிதல் நமக்கு இல்லாமல் மரங்களையும் நீர்நிலைகளையும் பாதுகாக்கத் தவறினோம். வனப்பரப்பைக் குறைத்து, அணைகளும், சாலைகளும், மலைகளில் நகரங்களையும் அமைத்தோம். இந்த அறியாமை, மலைகளிலும் வனங்களிலும் வாழும் உயிரினங்களின் வாழ்க்கைக்கு உலைவைத்தது. குடிநீருக்கே அவை தடுமாறின.
ஆதிகாலத்தில் இந்த மரக்கூட்டங்களுக்குள்தான் மொத்த உயிர்க்கூட்டமும் வாழ்ந்தது. மனிதன் மனித இனமாய் தம்மை உணர்ந்து நாகரீகம் பெறும் முன்னர் மரங்களில் தாவித்தாவி வாழ்ந்திருக்கிறான். நாகரீகம் பெற்ற மனிதன் காட்டைவிட்டு வெளியேறி வந்து, காட்டை அழித்து உழவு செய்யத் தொடங்கினான். அங்கே ஆரம்பித்தது அழிவு, பேரழிவு.
கார்பன்-டை-ஆக்ஸைடு என்னும் கரிக்காற்றை உள்வாங்கி, மற்ற உயிரினங்களுக்கான ஆக்ஸிஜனை வெளிவிடும் மரங்களை வெட்டத்தொடங்கியது மனித சமூகம் செய்த மகத்தான தவறு.
பூமி தோன்றிய காலத்தில் இருந்ததில் 2% மரங்கள்கூட இப்போது இல்லை என்பது எத்தனை பெரிய துயரம்.ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவில் நீர்வளம் குறைந்த மாநிலம் தமிழ்நாடுதான்.