குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.
* துளசி கஷாயம்
சில துளசி இலைகளை அலசி வைத்துக்கொள்ளவும். 10 மிளகை பொடித்து வைத்துக்கொள்ளவும். சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும். 600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும். 200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும். பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம்.
* பனங்கற்கண்டு பால்
ஒரு டம்ளர் பாலில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து, அதனுடன் பொடி செய்த மிளகு 10, மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பால் ஒரு டம்ளர் அளவுக்கு வற்றியதும் இறக்கி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.
* பொட்டுக்கடலை மிக்ஸ்
புழுங்கல் அரிசி, பொட்டுக்கடலை, பனங்கற்கண்டு தலா இரண்டு ஸ்பூன்கள், சிறிது கல் உப்பு, 5 மிளகு அனைத்தையும் பொடி செய்து வைத்துக்கொண்டு, அவ்வப்போது வாயில் எடுத்துப் போட்டுக்கொள்ளவும். இது வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் தரும்.
மேற்கூறிய கை வைத்தியங்களைச் செய்து பாருங்கள்… சளி, இருமல் கட்டுப்படுவதுடன், வெளியேறிவிடும்….