வெள்ளைச் சோளம், கம்பு, கேழ்வரகு எனச் சிறுதானியங்களைத் தினசரி உணவில் சேர்த்துக்கொண்ட உணவுமுறை இன்று மாறிவிட்டது. மூன்று வேளையும் அரிசி உணவையே பலரது வீடுகளிலும் சாப்பிடுகிறோம். இதனால் உடலுக்குத் தேவையான சரிவிகித சத்துக்கள் கிடைக்காமல் சிறு வயதிலேயே ஆரோக்கியக் குறைபாட்டுக்கு ஆளாகிறோம். சிறுதானிய உணவை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியம் கூடும் என்கிறார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன். வெள்ளைச் சோளத்தில் (மஞ்சள் மக்காச் சோளம் அல்ல) செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையை அவர் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
சோளப் புட்டு:
என்னென்ன தேவை?
முளைவிட்ட வெள்ளைச் சோளம் – 200 கிராம்
துருவிய வெல்லம்– 100 கிராம்
உப்பு – சிட்டிகை
துருவிய தேங்காய் – அரை மூடி
நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை – தேவைக்கு
ஏலக்காய்ப் பொடி – சிறிது
நெய் – 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
சோளத்தைக் கழுவி ஈரத் துணியில் முடிந்துவைத்தால் 24 மணி நேரத்தில் முளைவிட்டுவிடும். முளைவிட்ட சோளத்தை மிக்ஸியில் போட்டு ரவைபோல் அரைத்துக்கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து ஆவியில் 20 நிமிடங்கள் வேகவைத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் உதிர்த்துக்கொள்ளுங்கள். இதனுடன் துருவிய தேங்காய், வெல்லம், ஏலக்காய்ப் பொடி, நெய், வறுத்துவைத்துள்ள முந்திரி, திராட்சை ஆகியவற்றைக் கலந்து பரிமாறுங்கள்.