குறைந்த முதலீட்டுத் தொழில்கள்!

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

உங்களிடம் நல்ல தொழில்கரு (ஐடியா) இருக்கிறதா? அந்த தொழில் கருவைப் பயன்படுத்தி, இன்றே தொழிலைத் தொடங்கி விடலாம். இதற்கு ரூபாய் 10 ஆயிரம் கையில் இருந்தால் போதும்.

“நல்ல தொழில்கரு, நல்ல நிறுவனத்தை உருவாக்கும்; நல்ல நிறுவனம், நல்ல பணியாளர்களை உருவாக்கும்; நல்ல பணியாளர்கள், நல்ல வாடிக்கை யாளர்களை உருவாக்குவார்கள்; நல்ல வாடிக்கையாளர்கள் நல்ல சந்தையை உருவாக்குவார்கள்” என்பது புதிய தொழில் முனைவோருக்கான இலக்கணம்.

பில்கேட்ஸ் முதல், வால்ட் டிஸ்னி வரை, இப்படித்தான் உருவானார்கள். “உங்களால் கனவு காண முடிந்தால், உங்களால் செய்யவும் முடியும்” என்கிறார் வால்ட் டிஸ்னி. இங்கு, நம்மூரில் குறைந்த முதலீட்டில் என்னென்ன தொழில்களைச் செய்யலாம் என்பதைக் காணலாம்.

மொபைல் ஃபோன் ரீசார்ஜ் கடை

ஆன்லைனில் ரீசார்ஜ் செய்ய ஆயிரம் வழிகள் இருந்தாலும், இன்றும் பெரும் பாலான வாடிக்கையாளர்கள், பெட்டிக் கடைகளிலும், குட்டிக் கடைகளிலும்தான் ரீசார்ஜ் செய்கிறார்கள். இந்த வணிகம் செய்ய விரும்புபவர்கள், ஒரு குட்டிக் கடையை (இடத்தை) வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வாடகை, உங்களால் இயலும் தொகையாக இருக்க வேண்டும்.
பின்னர் உங்கள் பகுதியில் செயல்படும், ஏர்டெல், வோடாஃபோன், பீஎஸ்என்எல், ஜியோ – போன்ற நிறுவனங்களுடன் ஒரு வர்த்தக உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்படி, ரீசார்ஜ் செய்யப்படும் தொகையில் எத்தனை விழுக்காடு டேட்டா (கமிஷன்) கிடைக்கும் என்பதும் உடன்படிக்கையில் இருக்கும். பிறகு, தொழிலைத் தொடங்கி விட வேண்டியது தான்.

டிடிஎச் ரீசார்ஜ் கடை

மேற்கண்ட மொபைல் ஃபோன் ரீசார்ஜ் கடையில், டிடிஎச் ரீசார்ஜ் தொழிலையும் சேர்த்துக் கொள்ளலாம்; அல்லது தனியாகவும் செய்யலாம். தற்போது செயல்படும் டாட்டாஸ்கை, வீடியோகான், ஏர்டெல், டிஷ்-டிவி – முதலிய டிடிஎச் நிறுவனங்களுடன் இதுபோன்றே, தரகு (கமிஷன்) உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு, பட்டையைக் கிளப்பலாம்.

உணவுக் கடைகள்

நாம் வாழும் இடங்களில் எத்தனையோ குட்டி குட்டி உணவுக் கடைகளைப் பார்த்திருப்போம். அவற்றில் சாப்பிட்டும் இருப்போம்.
‘வயிற்றுக்கு தரமான உணவூட்டும் எந்தத் தொழிலும் தோல்வியடைந்த வரலாறு இல்லை’ என்பது நாம் அனுபவத்தில் கண்ட உண்மை.
நாமும் ஒரு சிறிய இடத்தை வாடகைக்குப் பிடித்து, அதில் இட்லி, தோசை, பூரி போன்ற காலை உணவு களையோ, அல்லது சப்பாத்தி, பரோட்டா போன்ற இரவு உணவுக் கடைகளையோ நடத்தலாம்.
தொடக்க காலத்தில், நமது உணவு தயாரிக்க, பரிமாற, நம்மோடு சேர்த்து, நம் குடும்ப உறுப்பினர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வர்த்தகம் சற்று சூடுபிடித்த பின்பு, வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்ளலாம்.
இதுவும் 10 ஆயிரம் ரூபாய்க்குள் அடங்கிவிடும், என்ன, உணவுத் துறை அலுவலர்களிடம் இதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். வெறும் 3000 – 5000 ரூபாய் பட்ஜெட்டில் தள்ளுவண்டியில் கடை நடத்தி, வெற்றி பெறுபவர்களும் நம்மூரில்தான் இருக்கிறார்கள்.

டிராவல் ஏஜென்சி

பெரிய பெரிய மனிதர்கள் எப்போதும் சுற்றுலா அல்லது பயணத்திலேயே ஆர்வம் காட்டுவார்கள். அதுபோல சாதாரண சிறிய சிறிய வணிகர்களும், வர்த்தகர்களும், முகவர்களும் அடிக்கடி பயணம் செய்ய வேண்டி இருக்கும்.
நாம் வீட்டிலேயே டிராவல் ஏஜென்சி தொடங்கி நடத்தலாம். இதற்கு ஹோஸ்ட் ஏஜென்சிகளைப் பிடித்து, அவர்களுடன் உடன்பாட்டை மேற்கொள்ள வேண்டும். நாம் ஏற்பாடு செய்யும் சுற்றுலா அல்லது பயணத்தைப் பொறுத்து கமிஷன் கிடைக்கும். இதற்கும் முதலீடு 10,000 ரூபாய்க்குள் இருந்தால் போதும்.

தனிப்பயிற்சி (டியூஷன்) நிலையம்

டியூஷன் மையத்தை நம் வீட்டில் இருந்தே நடத்தலாம். வீடுகளில் நடத்தினால் முதலீடு இல்லை. இதற்கு சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யலாம். அல்லது நம் வீட்டு வாயிலின் முன்னால், ‘இங்கு டியூஷன் எடுக்கப்படும்’ என்று அட்டையில் எழுதி தொங்க விடலாம்.
நாம் வாழும் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வருவார்கள்.
நமக்குத் தெரிந்த பாடத்தை மட்டுமே நடத்தலாம். ஆங்கிலப் பாடம், கணிதப் பாடம், கணினிப் பாடம் போன்ற துறைசார் பாடங்களை நடத்தலாம். முக்கியமாக கணிதப் பாடத்திற்கு மதிப்பு அதிகம். அதிகளவில் மாணவர்கள் வரும்போது, ஏதாவது ஓரிடத்தை வாடகைக்குப் பிடித்துக் கொள்ளலாம்.

பழச்சாற்றுக் கடை

இதுவும் எளிதாகத் தொடங்கிவிடும் தொழில்தான், இதற்கு பழச்சாறு பிழியும் எந்திரத்தை வாங்க வேண்டி இருக்கும்.
உங்கள் பகுதியில் சிறிய கடையைப் பிடித்து, பழச்சாற்றுக் கடையைத் தொடங்கி விடலாம். பத்து ஆயிரம் ரூபாய்க்குள் பழச்சாறு பிழியும் எந்திரங்கள் கிடைக்கின்றன.
தையற்காரர்கள்

சென்னை, மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களிலும், சிறிய நகரங்களிலும் நல்ல தையற்காரர்களுக்கு தேவை அதிகம். இதற்குத் தேவை நல்ல தையல் எந்திரம். 5000 ரூபாய் முதல் தையல் எந்திரம் கிடைக்கிறது.
விரைவாக தையல் செய்ய, மின்சார தையல் எந்திரத்தை வாங்கலாம். நம்மூரில் பெரும்பாலான வருமானம் குறைந்த பெண்களை வாழ வைத்து, அவர்களை ஓரளவு நடுத்தரக் குடும்பமாக உயர்த்தி வைப்பது தையல் தொழில்தான்.
தற்போது தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை இருப்பதால், துணியில், நல்ல டிசைன் போட்டு, வகை வகையான பைகளைத் தயாரித்து, பெரிய பெரிய கடைகளிலும், உணவகங்களிலும் விற்பனை செய்யலாம்.

ஆன்லைன் பேக்கரிக் கடை

ஓவன்பிரஷ் என்ற ஆன்லைன் பேக்கரிக் கடையைப் பற்றி நாம் கேள்விப்பட்டு இருக்கலாம். இதுபோல பலரும் இந்த துறையில் வெற்றி பெற்று உள்ளனர். கொல்கத்தாவைச் சேர்ந்த சாருலதா கோஸ், வெறும் 2000 ரூபாயில், 2013 இல், ஆன்லைன் பேக்கரிக் கடையைத் தொடங்கினார்.
இப்போது நாடு முழுவதும், கிளைகளைக் கொண்டு, சிறப்பாகச் செயல்படுகிறது. சென்னையில் கூட பல்வேறு கிளைகளைக் கொண்டு இயங்குகிறது.

இணையதளம்/பிளாக் தளங்கள்

இப்போது பல்வேறு பிளாக் தளங்கள் இலவசமாகவே தொடங்கி விடலாம். ஒரு மின்னஞ்சல் கணக்கைத் தொடங்கி, பிளாக் தளத்தில் நம் படைப்புகளை, சிந்தனைகளை எழுதத் தொடங்கி விடலாம்.
மேலும் இணையதளத்தைக் கூட தொடங்கி நடத்தலாம். இதற்கு ஹோஸ்டிங் மற்றும் வடிவமைப்பு என மொத்த செலவு 3600 – 5000 ரூபாய்க்குள் ஆகலாம்.
நம் தளத்தைப் பார்க்கும் பார்வையாளர் எண்ணிக்கை கூடும் போது, அதில் கூகிள் போன்ற நிறுவனங்கள் விளம்பரம் செய்யும், அந்த விளம்பரத்தை எத்தனை பேர் கிளிக் செய்கிறார்களோ, அதற்கேற்ப நம் வங்கிக் கணக்கில் காசு வந்துவிடும்.
இதற்கு ஃபேஸ்புக், வாட்சாப் போன்ற சமூக வலைத்தளங்களில் இலவசமாக விளம்பரம் செய்து, பார்வையாளர்களை அதிகளவில் ஈர்க்க முடியும். அதற்கேற்ப, நம் படைப்புகளையும் கவர்ச்சிகரமாக அமைத்தால்தான், மீண்டும் மீண்டும் வந்து படிப்பார்கள்.

யூடியூப் சேனல்கள்

யூடிப்பில் நமக்கென ஒரு சேனலைத் தொடங்கிக் கொண்டு, நம் மொபைல் ஃபோனில், நாமே நல்ல கருத்துகளை, நம் எண்ணங்களை, நம் சமையல், கலை, தொழில் குறிப்பு, சுடச்சுட செய்தி, விமர்சனம் என பேசி பதிவுசெய்து, இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
யூடியூப்பிலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பார்த்து, அதிகளவில் சப்ஸ்கிரைப் செய்திருப்பின் நம் வங்கிக் கணக்கில் பணம் அனுப்பி வைக்கப்படும். பார்வையாளர்கள் கூடும் போது, அந்த நிறுவனமே, நம் சேனலில் விளம்பரங்களைக் காட்டி, அதற்கான தொகையை நம் கணக்கில் சேர்த்து விடும்.

நிகழ்ச்சி அமைப்பு (ஈவன்ட் ஆர்கனைசிங்)

நிகழ்ச்சி அமைப்பு மேலாளர்கள் – எந்நேரமும் அலுவலகத்தில் இருப்பது இல்லை. எப்போதும் சுற்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் நகரில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்ற பட்டியல் இருக்கும். இதனை 24/7 துறை என அழைப்பார்கள்.
அந்த நிகழ்ச்சி நடத்துபவர்களைத் தொடர்பு கொண்டு, நிகழ்ச்சிக்குத் தேவையான ஒலிபெருக்கி, மேடை, நாற்காலிகள், விளக்கு வசதிகள், பங்கேற்பாளர்களுக்கான உணவு, எழுதும் டைரிக் குறிப்பு, பேனா – போன்றவற்றை ஏற்பாடு செய்வார்கள். அதற்கென ஒரு பில் போட்டு, நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் வாங்கி விடுவார்கள். அவர்களின் சேவை தரமாக இருந்தால், இவர்களுக்கான தேவையும், வரவேற்பும் அதிகமாக இருக்கும்.

திருமண இணையதளம்

இன்று திருமணம் என்பது, மிகப்பெரிய வர்த்தகமாக ஆகி விட்டது. அதற்கான தேவையும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இன்று ஆண் மற்றும் பெண்ணின் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால், பெரும்பாலும் இணையதளங்களிலேயே தங்களுக்கான துணைவரைத் தேடுகின்றனர்.
திருமண இணையதளம் நடத்துவதற்கு தொடக்க செலவு ஓர் இணையதளம் பதிவுசெய்து, வடிவமைப்பதுதான் இதற்கு 4000 – 6000 ரூபாய் தொடக்க முதலீடு இருந்தால் போதும்.
இந்த திருமண தளத்தை இலவசமாகக் கொடுத்து, அதில் விளம்பரங்களை வெளியிட்டும் வருமானம் ஈட்டலாம்; அல்லது திருமணப் பதிவு செய்பவர்களிடம் சிறிய சேவைக் கட்டணம் வாங்கியும் வருமானம் ஈட்டலாம்.

ஆன்லைன் கோர்ஸ்கள்

20 – 30 ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சல் வழியாக நடத்தப்பட்ட பயிற்சிகள், இப்போது ஆன்லைன் மூலமாக நடத்தப்படுகின்றன.
முன்பு அஞ்சல் வழியாக ஆங்கிலம், அக்கவுன்ட்ஸ், ஃபோட்டோகிராபி கற்றுக் கொடுத்தனர். இப்போது ஆன்லைன் மூலமாக பலரும் கற்றுக் கொடுக்கின்றனர்.
உங்களிடமும் தொழில் திறமை இருந்தால், ஆன்லைன் கோர்ஸ்களை நடத்தலாம். நீங்களே வீடியோ, ஆடியோ அல்லது எழுத்துப் பாடங்களைத் தயாரித்து, அதனை குறிப்பிட்ட கட்டணம் பெற்று, கொடுக்கலாம்.
இதற்கான ஓர் இணையதளத்தைத் தொடங்கி, உங்கள் ஆன்லைன் கோர்ஸ்களைக் கொடுக்கலாம். அல்லது, ஏற்கெனவே இத்தகைய ஆன்லைன் கோர்ஸ்களை நடத்தும் நிறுவனங்களில் நீங்கள் கமிஷன் அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொண்டு, அவர்கள் தயாரிப்புகளை (வீடியோ, ஆடியோ, டெக்ஸ்ட்) நீங்கள் வாங்கிக் கொடுக்கலாம்.

நிழற்படக் கலை

திருமணம், குடும்ப விழாக்களில் நிழற்படங்கள், வீடியோ எடுப்பது ஒருவகை தொழில்தான். ஆனால் அதையும் தாண்டி, உங்களிடம் நல்ல டிஎஸ்எல்ஆர் கேமரா இருந்தால், நல்ல நிழற்படங்களை எடுத்து, ஆன்லைனில் சில தளங்களுக்கு விற்பனை செய்யலாம்.
உங்கள் நிழற்படத்தின் தரத்தைப் பொறுத்து, அதனைத் தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட நிழற்படத்தை, அந்த தளங்களில் இடம்பெறச் செய்வார்கள்.
யாராவது, சர்ச் செய்யும் போது, உங்கள் நிழற்படத்தை விரும்பினால், அதனை பணம் கொடுத்து பதிவிறக்க வேண்டும். அந்தப் பணத்தில் இணைய நிறுவனத்தின் கமிஷன் போக, மீதி பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்துவிடும். ­­ஷட்டர்-ஸ்டாக், அலாமி, அடோப்-ஸ்டாக், புளூ-மெலான் போன்றவை இத்தகைய பணிகளைச் செய்கின்றன.
அவ்வாறு வாடிக்கையாளர்கள் பதிவிறக்கிய உங்கள் படத்தை, வாடிக்கையாளர்கள், தங்களது விளம் பரங்களில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

மறுசுழற்சி புத்தகக் கடை

சென்னை முதல் குமரி வரை, தமிழகத்தின் அனைத்து நகர்களிலும், நீங்கள் ஏதாவது பழைய புத்தகக் கடையைப் பார்த்திருப்பீர்கள். உங்களால் இயலும் வாடகையில் கடையைப் பிடித்து, மறுசுழற்சி புத்தகக் கடையை நடத்தலாம்.
நூலகங்களில் மிகவும் பழைய புத்தகங்களை ஆண்டுதோறும் ஏலம் விடுவார்கள். அந்த ஏலத்தை நீங்கள் எடுக் கலாம். அல்லது, பழைய புத்தகங்களை மொத்த வணிகர்களிடம் இருந்தும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
அல்லது, நீங்களே வீடுவீடாகச் சென்று, பழைய புத்தகங்களை எடைபோட்டு எடுக்கலாம். வணிகம் கொஞ்சம் சூடுபிடிக்கும் போது, பழைய புத்தகம் எடுக்க ஆள் வைத்துக் கொள்ளலாம்.
அல்லது வீடுவீடாக சென்று பழைய நாளிதழ், புத்தகங்கள் எடுக்கும் தொழிலாளர்களிடம் நீங்கள் உடன்பாடு வைத்துக் கொள்ளலாம்.

இன்று ஓஎல்எக்ஸ் போன்ற விற்பனை இணையதளங்களில் கூட, பழைய புத்தகங் களையும், பாடப் புத்தகங்களையும், பலர் விற்பனை செய்வதைப் பார்த்து இருக்கலாம். அவர்களை சாட் அல்லது மொபைல் ஃபோனில் தொடர்பு கொண்டு, உங்களுக்கு தேவைப்பட்டதை வாங்கிக் கொள்ளலாம்.
பெரும்பாலும் மாணவர்களும், பத்திரிகையாளர்களும், ஆய்வு செய்பவர்களும், உங்கள் வாடிக்கையாளர் களாக இருப்பார்கள். சில பதிப்பகங்கள், விற்காமல் மிகவும் பழையதான புத்தகங்களைக் கூட மொத்த விலைக்கு தரும். அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்று, ‘ஒரு கிலோ புத்தகம் இத்தனை ரூபாய்’ என எடைக்கு எடை போட்டு புத்தகங்களை விற்பனை செய்யும் மறுசுழற்சிக் கடைகள் இப்போது அதிகளவில் காணப்படுகின்றன.
ஏதாவது திருமண மண்டபம் அல்லது சமூகக் கூடத்தை, சீசன் இல்லாத காலத்தில் வாடகைக்குப் பிடித்து மூன்று நாள் விற்பனை, ஏழு நாள் விற்பனை என பலரும் விற்பனை செய்கின்றனர்.

நேரடி சமையல்/தொழில் வகுப்புகள்

என்னதான் யூடியூபில் சமையல் வீடியோக்கள் கொட்டிக் கிடந்தாலும், பலர் நேரடி சமையல் பயிற்சி பெறவே விரும்புகின்றனர்.
நம்மிடம் நல்ல சமையல் திறமை இருந்தால், சமையல் வகுப்புகளை நடத்தலாம். இதற்கு ஃபேஸ்புக், வாட்சாப் போன்ற சமூக ஊடகங்களில் விளம்பரம் போட்டு, வாடிக்கையாளர்களைப் பிடிக்கலாம்.
சமையலில் கூட, அசைவ உணவுகள், சைவ உணவுகள், சமைக்காத உணவுகள், இயற்கை உணவுகள் என தரம்பிரித்து, பயிற்சியை நடத்தலாம்.
இதுபோல தையல் பயிற்சி, ஓவியப் பயிற்சி, இசை/கீபோர்ட் பயிற்சி எனவும் நடத்தலாம்.

தேநீர் கடை

காலையில் எழுந்த உடன் பெரும் பாலான இந்தியர்கள் தேநீர்/காபிக் கடையை நோக்கியே ஓடுவார்கள். வருமானத்திற்கு வஞ்சகம் செய்யாத தொழிலில் இதுவும் ஒன்று.

காலை/மாலை இருவேளைகளிலும் சுவையான, தரமான தேநீர் அல்லது காபி தயாரித்துக் கொடுத்தால், நல்ல வருமானத்தைப் பெறலாம்.
மக்கள் அதிகமாகப் புழங்கக் கூடிய இடத்தில் சிறிய கடையைப் பிடித்து, ஒரு தேநீர் மாஸ்டரை பணிக்கு அமர்த்தி, நேர்மையாக செய்தால், நம்மை வாழ வைக்கும்.
விற்பனை சூடுபிடித்த பின்பு, தேநீருடன் சுக்கு காபி, மூலிகைத் தேநீர், வடை, பஜ்ஜி – என வணிக எல்லையை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இங்கு குறிப்பிடப்பட்ட எல்லா தொழில்களும் 5000 – 10,000 ரூபாய்க்குள் தொடங்கக் கூடியவை.

Related Posts

Leave a Comment

Translate »