குழந்தை பெற்ற தாய்மார்கள் இனி எளிமையான வழியில் தங்கள் தொப்பையைக் குறைத்து, உடல் ஆரோக்கியத்தையும் காத்து நல்ல அழகான தோற்றத்தைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பின்பற்றிப் பெறலாம். இவை உங்களுக்கு எளிமையானதாக இருக்கும். மேலும் இதன் பலனை நீங்கள் முயற்சி செய்யத் தொடங்கிய முதல் சில நாட்களிலேயே தெரிந்து கொள்வீர்கள்.இங்கே உங்களுக்காக சில எளிய மற்றும் பலன் தரக்கூடிய குறிப்புகள்.
தேன் மற்றும் எலுமிச்சை சாறு (Honey and lemon)
இந்த முறையில் நீங்கள் செய்ய வேண்டியது மிகவும் எளிமையான ஒன்றுதான். இதமான சுடு தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை பழச் சாற்றைப் பிழிய விட்டு,அத்தோடு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி அளவு தேனையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உங்கள் தொப்பை சில நாட்களிலேயே குறைவதை நீங்கள் காணலாம். மேலும் இதனை சுகப் பிரசவம் மற்றும் அறுவைசிகிச்சை பிரசவம் செய்து கொண்ட பெண்கள் அருந்தலாம்.மேலும் தேன் மற்றும் எலுமிச்சை பழத்தில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால் இது மேலும் பல நன்மைகளை உங்கள் உடலுக்குத் தரும்.
தாய்ப்பால் (Breastmilk)
தாய்மார்கள் தினம் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்து வர,அவர்களின் எடை மேலாண்மை அடையும்.இது எப்படி என்று பலரும் வியப்பு அடையலாம்!ஆனால் ஒரு அன்னை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் அவளது உடலிலிருந்து தினம் 500 கலோரிகள் எரியப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
சரியான உணவு (Balanced diet)
உங்கள் உணவில் சில மாற்றங்களை நீங்கள் செய்யும் போது நீங்கள் விரும்பிய அல்லது எதிர்பார்த்த பலன்களைப் பெறத் தொடங்குவீர்கள். குறிப்பாக உங்கள் உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.மேலும் சோடா மற்றும் கார்போனேட் கலந்த பானங்களை தவிர்ப்பது நல்லது. அதிகம் பப்பாளி, மாம்பழம், திராட்சை, போன்ற நீர்ச் சத்து நிறைந்த பழ வகைகளை அதிகம் உண்ணுங்கள். நார்ச் சத்து நிறைந்த கீரை வகைகள் மற்றும் காய்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கொழுப்புச் சத்து மற்றும் எண்ணை நிறைந்த உணவுப் பொருட்களையும், நொறுக்குத் தீனிகளையும், சிற்றுண்டிகளையும் தவிர்ப்பது நல்லது. அவை மேலும் உங்கள் உடல் எடையை அதிகரிக்கக் கூடும்.
குறைவாக அவ்வப்போது சாப்பிடுங்கள் (Eat at intervals)
இது எதை குறிக்கிறது என்றால் ஒரே சமயத்தில் அதிக அளவு உணவை உண்பதை விட, கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது உண்பதால் உங்கள் தொப்பை குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.அதாவது பொதுவாக மூன்று வேளைகளில் உண்ணும் உணவை குழந்தைப் பேறு பெற்ற தாய்மார்கள் ஆறு வேளையாகப் பிரித்து உண்ணலாம். மேலும் பிரசவத்திற்குப் பின் இது ஒரு நல்ல உணவு முறையாகவும் இருக்கும்.
உடற்பயிற்சி செய்யுங்கள் (Do exercise)
பிரசவத்திற்குப் பின் எளிமையான உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள்.வயிற்றுச் சதைகளைக் குறைக்கும் யோகாசனங்கள் மற்றும் உடற்பயிற்சி முறைகளை ஒரு நல்ல பயிற்சியாளரின் ஆலோசனைப்படி செய்யும் போது எதிர்பார்த்த நற்பலன்களை விரைவில் பெறுவீர்கள். எனினும் அறுவைசிகிச்சை பிரசவம் மேற்கொண்ட பெண்கள் சிறிது காலம் அதிகமாக பொறுத்திருந்தே உடற்பயிற்சி செய்யத் தொடங்க வேண்டும். இல்லையென்றால் அது உங்கள் உடலை பாதிக்கக் கூடும்.
தூக்கம் (Sleep)
நீங்கள் மிக முக்கியமாகப் போதிய தூக்கத்தைப் பெற வேண்டும். எனினும் பிரசவத்திற்குப் பின் அதாவது குழந்தை பிறந்ததும் தூக்கம் என்பது அனைத்து தாய்மார்களுக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு கனவாக மட்டுமே இருக்கும். இருப்பினும் நீங்கள் முடிந்த வரை அவ்வப்போது நன்கு தூங்க வேண்டும். இதனால் உங்கள் உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைக்கிறது.ஏனென்றால் சரியான தூக்கம் கிடைக்காத பட்சத்திலும் உடல் எடை அதிகரிப்புக்கு வாய்ப்பு அதிகமாம்.இதை தாய்மார்கள் அலட்சியம் செய்யக் கூடாது.
நடைப்பயிற்சி (Walking)
நேரம் கிடைக்கும் போது நீங்கள் நடைப் பயிற்சி செல்வது மற்றொரு நல்ல முயற்சியாக இருக்கும். நீங்கள் நடக்கும் போது உங்கள் உடல் ஆரோக்கியத்தோடு இருக்கும்.உடல் எடை குறைவதோடு, உங்கள் மனமும் புத்துணர்ச்சி பெறும்.இந்த வழியில் நீங்கள் உங்கள் தொப்பையைக் குறைக்க முயற்சி செய்யலாம்.
இனிப்பு வேண்டாம் (Avoid sweets)
இனிப்பு மிட்டாய்கள்,இனிப்பு பலகாரங்கள்,சர்க்கரை போன்றவற்றை முடிந்தளவு சாப்பிடாமல் இருப்பது நல்லது.இனிப்புப் பண்டங்கள் உடை எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.அதனால் தாய்மார்கள் நாவைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது சாலச் சிறந்தது.