*மனித நுரையீரலின் தகவல்கள்:-*
மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் இன்றியமையாததாகும். இதில் உடலுக்கு மெயின் சுவிட்சு போல் செயல்பட்டு, காற்றை உள்வாங்கி, வெளிவிட்டு உடலுக்கு உயிர் சக்தியைத் தரும் மோட்டார்தான் நுரையீரல். வாயுப் பரிமாற்றம் (Exchange of gas) நுரையீரலின் முக்கிய பணியாகும்.மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதற்கும், வேறு சில வேதிப் பொருட்களை செயலிழக்கச் செய்வதும் இதன் மற்ற பணிகளாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்ஸிஜனை உள் எடுத்துக் கொள்வதற்கும் கார்பன்-டை- ஆக்ஸைடை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு மனிதன் 22,000 முறை மூச்சு விடுகிறான். கிட்டத்தட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறான்.
*நுரையீரலின் செயல்பாடு:-*
நுரையீரல் எவ்வாறு தன்னுடைய பணியை திறம்பட செய்கிறது என்பதைப் பார்ப்போம்.
மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று மூச்சுக் குழாய் (Trachea)வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக் குழாய் மார்புப் பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரலுக்குச் செல்கிறது.நுரையிரலுக்குள் நுழைந்தவுடன் மூச்சுக்குழல் ஒவ்வொன்றிலிருந்தும் கிளைகள் பிரியும். பின்னர் அவற்றிலிருந்து இன்னும் சிறு கிளைகள் என நிறைய பிரிவுகள் ஒரு மரத்தின் பெரிய கிளையிலிருந்து பரந்து பிரிந்து சின்னச்சின்ன தளிர்கள் வருவதுபோல் பிரிகின்றன. அதனாலேயே இதனை மூச்சுமரம் (Respiratory tree) என்று அழைக்கின்றோம். முதல் நிலை மூச்சுக் குழல் (Primary bronchi), இரண்டாம் நிலை மூச்சுக் குழல், மூன்றாம் நிலை மூச்சுக்குழல், மூச்சுக் குறுங்குழல் (bronchiole) என்று படிப்படியாகப் பிரிந்து கடைசியாக சின்னச் சின்ன பலூன்கள் மாதிரி தோன்றும் குட்டிக்குட்டி அறைகளுக்குள் இந்த குழல்கள் நீட்டிக் கொண்டிருக்கும். இவற்றை காற்று நுண்ணறைகள் (Alveoli) என்று அழைக்கிறோம். நாம் இழுக்கும் மூச்சுக்காற்று மூச்சு மரம் வழியாக காற்று நுண்ணறைகளுக்குள் வந்துவிடும்.
உடலில் பல பாகங்களிலும் இருந்து பயன்படுத்தப்பட்ட ரத்தம் இதயத்தின் வலது வெண்டிரிக்கலை அடையும். அங்கிருந்து நுரையீரல், தமணி மூலம் நுரையீரலுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. நுரையீரல் தமணியும், வலது கிளை, இடது கிளை, என்று இரண்டாகப் பிரிந்து இரண்டு நுரையீரலுக்கும் செல்கிறது. இதுவும் பலமுறை கிளைகளாகப் பிரியும். இப்படிப் பிரியும்போது காற்று நுண்ணறைகளின் பக்கத்தில் தமணிகளின் மிக மிகச் சிறிய கிளைகள் அமைந்திருக்கும். இந்தச் சின்ன தமணிக் கிளைகள்தான் தந்துகிகள் (Capillaries) எனப்படுகிறது.