தேவையான பொருட்கள் :
இட்லி மாவு – ஒரு கப்
கடுகு, மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
உடைத்த முந்திரிப் பருப்பு – 10
வாழை இலை – 2 (டிபன் சாப்பிட பயன்படுத்தப்படும் வாழை ஏடு)
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக உடைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உடைத்த மிளகு – சீரகம், கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, இஞ்சித் துருவல், பச்சை மிளகாயை போட்டு தாளித்து இட்லி மாவுடன் கலக்கவும்.
வாழை இலைகளை தொன்னைகளாகச் செய்து அவற்றினுள்ளே லேசாக எண்ணெய் தடவி மாவை ஊற்றி அவற்றை ஆவியில் வேக வைக்கவும்.
இது வாழை இலை மணத்துடன் சுவையாக இருக்கும்.
பரிமாறும் வரை இட்லி தொன்னையிலே இருக்கட்டும்.
குறிப்பு: வாழை இலைகளை 15 செ.மீ. நீளம் 10 செ.மீ. அகலம் கொண்ட துண்டுகளாக வெட்டி எடுக்கவும். இரண்டு துண்டுகளை ஒன்றன்மீது ஒன்றாக நீள வாக்கில் வைத்து மையப் பகுதியிலிருந்து கணக்கிட்டு இரண்டு முனைகளையும் முக்கோணம் போல மடிக்கவும். பார்ப்பதற்கு டைமன்ட் வடிவம் போல இருக்கும். பிறகு முக்கோணமாக கிடைத்த பாகங்களை உள்பக்கமாக சிறு முக்கோணமாக மடியுங்கள். பார்ப்பதற்கு அறுங்கோண வடிவம் கிடைக்கும். இப்போது இரண்டு முனைகளில் இருக்கும் சிறுமுக்கோணங்களை உள்பக்கத்துடன் சேர்த்துப் பிரித்து ‘டூத் பிக்’ அல்லது கனமான குச்சியால் குத்துங்கள். இப்போது தொட்டி போன்ற நீள்வடிவ தொன்னை கிடைக்கும்.