பல தாய்மார்களுக்கு வரும் கேள்வி இது. பசும்பால் கொடுப்பதில் தவறு என்ன இருக்கிறது. அதைத் தானே எங்கள் பாட்டி காலத்தில் இருந்து கொடுத்து வருகிறார்கள். பசும்பால் சிறிய குழந்தைக்கு பொருத்தமானது அல்ல. உடல்நலத்துக்கு கேடு. அவற்றைப் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
ஒரு வயது முடியாத குழந்தைகளால் பசும் பாலை செரிக்க முடியாது. புரோட்டீனும் தாதுக்களும் அதிக அளவில் இருப்பதால் குழந்தைகளுக்கு பசும்பாலை செரிக்கும் தன்மை இருக்காது. இதனால் சிறுநீரக பாதிப்புகள் வரலாம். சில குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுபோக்கு பிரச்னையும் வரக்கூடும். பசும்பாலில் உள்ள அதிக அளவு புரோட்டீன் மற்றும் தாதுக்கள், குழந்தைகளின் சிறுநீரகத்துக்கு ஓவர் லோட் வேலையாக மாறும்.
பசும்பாலில் சரியான அளவு இரும்புச்சத்து, விட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகள் சரியான அளவில் இருக்காது. இதனால், குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும். மேலும், விட்டமின் சி, இ, காப்பர் சத்து குறைபாடு ஏற்படலாம். பசும்பாலில் உள்ள புரோட்டீன், குழந்தையின் செரிமான மண்டலத்தைப் பாதிக்கும். சில குழந்தைகளுக்கு, மலத்தில் ரத்தம் வெளியேறும் அபாயம்கூட நேரலாம். வளரும் குழந்தைகளுக்கு, ஆரோக்கியமான கொழுப்பு உடலில் சேராமல் போகலாம்.
பசும்பாலில் உள்ள விலங்கின புரோட்டீன், சிறிய குழந்தைகளின் உடல்நிலைக்கு ஏற்றது அல்ல. 6-12 மாத குழந்தைகளுக்கு, அதிக அளவில் இரும்புச்சத்து தேவை. பசும்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இச்சத்து உடலில் சேராமல் தடை ஏற்படும். குழந்தைக்கு நீங்கள் அன்றாடம் தரும் காய்கறி மற்றும் பழ ப்யூரி, அசைவ உணவுகள் மூலம் கிடைக்கும் சத்துகள், கீரைகள் மூலம் கிடைக்கும் சத்துகள் போன்றவை உடலில் சேராமல் பசும்பால் தடுத்துவிடும். குழந்தைக்கு இரும்புச்சத்து குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை ஆகியவை வரலாம்.
ஒரு வயதுக்கு மேல், பசும்பால் கொடுக்கலாம். கால்சியம், புரதம், விட்டமின் டி ஆகியவை இருப்பதால் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவும். 1-3 வயது குழந்தைகளுக்கு கொழுப்பு நிறைந்த பால் தரலாம். 4 வயதுக்கு மேல், கொழுப்பு நீக்கப்படாத பால் தரலாமா எனத் தங்களின் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனைக் கேளுங்கள். ஏனெனில், சர்க்கரை நோய், உடல்பருமன் ஆகியவை மரபியல் வழியாக உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இருக்கிறதா எனத் தெரிந்து கொள்வது நல்லது.