நீதி – நன் நடத்தை / நன்றி உணர்வு
உப நீதி – பரிவு
ஒரு ஏழைச் சிறுவன் வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்று, பள்ளிக்கூடம் செல்ல வழி வகுத்துக் கொண்டிருந்தான். ஒரு நாள், பசி அதிகமாயிற்று. கையில் பத்து காசு தான் இருந்தது. பக்கத்து வீட்டில் ஏதேனும் சாப்பிடக் கேட்கலாம் என நினைத்துக் கொண்டு கதவைத் தட்டினான். ஒரு அழகான பெண் வெளியே வருவதைப் பார்த்ததும், எதுவும் கேட்கத் தோன்றவில்லை. உணவிற்கு பதிலாக குடிக்க ஒரு டம்ளர் தண்ணீர் கேட்டான். அவனுக்குப் பசி என்பதை கவனித்து, பெண்மணி உள்ளே சென்று, தண்ணீருக்கு பதிலாக ஒரு பெரிய டம்ளர் பால் எடுத்து வந்தாள். நிதானமாகக் குடித்து விட்டு, எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என விசாரித்தான். அதற்கு அந்தப் பெண் மென்மையாக, “அன்பான செயலுக்கு பணம் எதுவும் வேண்டாம் என, என் தாயார் கற்றுக் கொடுத்திருக்கிறார்” என்று கூறினாள்.
தன் மனமார்ந்த நன்றியைக் கூறிவிட்டு அச்சிறுவன் வீடு சென்றான். அந்தச் சிறுவன் தான் திரு. ஹோவர்ட் கெல்லி (Howard Kelly). அந்த வீட்டை விட்டுச் சென்றவுடன், மனதளவில் திடமான நம்பிக்கை வந்தது. அத்துடன் கடவுளின் மீதும், மற்ற மனிதர்கள் மீதும் நம்பிக்கை பெருகியது; விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் அதிகரித்தது.
பல வருடங்களுக்குப் பிறகு அதே பெண்மணியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. உள்ளூர் மருத்துவர்களுக்கு ஒரு புதிராக இருந்தது; ஆதலால் அப்பெண்மணியை ஒரு பெரிய நகர மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கிருந்த பல நிபுணர்கள் மருத்துவம் செய்ய முன் வந்தனர். டாக்டர் ஹோவர்ட் கெல்லியையும் அழைத்திருந்தார்கள். அப்பெண்மணி வந்த ஊரின் பெயரைக் கேட்டதும், டாக்டர் கெல்லியின் கண்களில் ஒரு புதிய ஒளி தோன்றியது .
தன் மருத்துவ உடையை அணிந்து கொண்டு, அவர் அப்பெண்மணியைப் பரிசோதிக்க உள்ளே சென்றார். பார்த்தவுடன் அப்பெண்மணியை அடையாளம் தெரிந்து கொண்டார். தன் அறைக்குச் சென்று, எப்படியாவது அப்பெண்மணியின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் எனத் தீர்மானம் செய்தார். அன்றிலிருந்து அதிக கவனம் செலுத்தி, அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டார். பல நாட்களின் சிகிச்சைக்குப் பிறகு, பெண்மணி உயிர் பிழைத்தார். மருத்துவமனை அதிகாரிகளிடம் மருத்துவப் பட்டியலை (medical bill) தன்னிடம் அனுப்பும்படி டாக்டர் ஹோவர்ட் கேட்டுக் கொண்டார். அந்த பட்டியலைப் பார்த்து விட்டு, ஏதோ எழுதி, தன் கையெழுத்தைப் போட்டார். பிறகு அப்பெண்மணியின் அறைக்கு அப்பட்டியல் சென்றது. பயந்து கொண்டே பெண்மணி கவரைப் பிரித்தார். தன் வாழ்நாள் முழுவதும் இந்தக் கடனை அடைப்பதிலேயே முடிந்து விடுமே என நினைத்தார். அதில் எழுதியிருந்த வார்த்தைகள் அவர் கவனத்தைக் கவர்ந்தது. “ஒரு டம்ளர் பால் கொடுத்ததால், சிகிச்சைக்குப் பணம் ஏதும் தர வேண்டாம் – டாக்டர் ஹோவர்ட் கெல்லி.”
அப்பெண்மணியின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அவர் இவ்வாறு பிரார்த்தனை செய்து கொண்டார் – “உங்கள் அன்பு இந்த அளவுக்கு மனிதர்களின் மனதிலும், அவர்கள் செய்யும் காரியங்களிலும் பரவி உள்ளது. கடவுளே நன்றி!!”
நீதி:
நாம் மற்றவர்களுக்கு உதவி செய்தால், பிரச்சனை என்று நமக்கு வரும் பொழுது கட்டாயமாக யாராவது நமக்கு உதவி செய்ய முன் வருவார்கள். உதவி செய்தவர்களை நாம் ஒரு நாளும் மறக்கக் கூடாது. எதிர்பார்ப்பு எதுவுமின்றி மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவ முயற்சி செய்து, அன்பைப் பரப்புவோம்.