உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரசை அழிக்க எந்த மருந்துகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், மக்களே கொரோனா நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். உணவு பழக்க வழக்கத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி? என்று யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் முக்கிய பங்காற்றுகிறது. நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக இயற்கை பானம் தயாரித்து குடிக்கலாம். இந்த பானம் தயாரிப்பது மிகவும் எளிமையானது.
அரை துண்டு நாட்டு நெல்லிக்காய், கால் துண்டு தோல் நீக்கிய இஞ்சி, 20 துளசி இலைகள், கால்துண்டு எலுமிச்சை, கால் ஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றை சாறு எடுத்து 250 மில்லி தண்ணீரில் கலந்து பருக வேண்டும். பெரியவர்களுக்கு 250 மில்லியும், சிறியவர்களுக்கு 100 மில்லியும் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 வேளைகள் குடிக்கலாம்.
இதேபோன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூடான பானம் தயாரித்து குடிக்கலாம். 10 துளசி இலைகள், கால் டீ ஸ்பூன் மிளகு, அரை டீ ஸ்பூன் அதிமதுரம், கால் டீ ஸ்பூன் மஞ்சள் பவுடர் ஆகியவற்றை 250 மில்லி தண்ணீரில் கலந்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த தண்ணீர் வற்றி 50 மில்லி அளவுக்கு மாறிய பிறகு குடிக்க வேண்டும். பெரியவர்கள் 50 மில்லியும், சிறியவர்கள் 20 மில்லியும் குடிக்கலாம். ஒரு நாளைக்கு 2 வேளை பருகலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
இதுதவிர தினமும் 30 நிமிடங்கள் யோகாசனம், பிரணாயாமம் மற்றும் தியானம் செய்ய வேண்டும். காலை, மாலை நேரங்களில் சிறிதளவு உப்பு கலந்த மிதமான வெந்நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். மிதமான சூடான பாலில் சிறிதளவு மஞ்சள், மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும். தினமும் காலை 10 மணிக்கு முன்பாகவும், மாலை 4 மணிக்கு பிறகும் 10 முதல் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்க வேண்டும். கீரை, காய்கறிகள், பழங்கள் அதிகம் சாப்பிடலாம். சமையலில் ரசம் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
பொறிக்கப்பட்ட உணவுகள், மைதா மாவில் தயாரிக்கப்பட்ட உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் தவிர்க்கப்பட வேண்டும். நொச்சி, ஓமம், கற்பூரவள்ளி ஆகியவற்றில் ஏதாவது ஒரு இலையை போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம்.
இந்த முறைகளை தொடர்ச்சியாக பின்பற்றி வருவதன் மூலம் கொரோனா வைரசில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.