நோய்களுக்கு விடைகொடுக்க தினமும் நடைபயிற்சி செய்யலாமே…

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கடலூர் நகரின் இதயம் போன்ற பகுதியில் அண்ணா ஸ்டேடியம் உள்ளது. கடலூர் நகர மக்களின் உடல் தகுதியை பேணுவதற்கும், அநேக விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது அண்ணா ஸ்டேடியம்.

அதிகாலை 4 மணிக்கெல்லாம் தன் வாசல் கதவுகளை ஆர விரித்து விளையாட்டு வீரர்களையும், நடைபயிற்சியாளர்களையும் வரவேற்க தொடங்கி விடுகிறது.

நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் நடைபயிற்சியாளர்களும், விளையாட்டு வீரர்களும் அண்ணா ஸ்டேடியத்துக்கு வரத்தொடங்குகின்றனர். காலை 6 மணிக்கெல்லாம் அண்ணா விளையாட்டு அரங்கின் இருவாயில்களிலும் கஞ்சி மற்றும் மூலிகை சூப் வியாபாரிகள் கடை விரிக்கத் தொடங்குகின்றனர். இங்கு பல்வேறு விதமான பாரம்பரிய தானியங்களின் கஞ்சிகள், மூலிகை சூப்புகள் விற்கப்படுகிறது. நடைபயிற்சி மேற்கொள்கிறவர்கள், பயிற்சியை முடித்துக்கொண்டு மூங்கில் அரிசி கஞ்சி, ஆளிவிதை கஞ்சி, கற்றாழை சூப், ஆவாரம்பூ சூப், பருத்திப்பால், உளுந்து கஞ்சி, மாப்பிள்ளை சம்பா அரிசி கஞ்சி, வெந்தயக்கஞ்சி, கொள்ளு கஞ்சி, குதிரை வாலி அரிசி கஞ்சி, கருப்புக்கவுனி கஞ்சி போன்றவற்றை அருந்திச்செல்கின்றனர்.

இந்தியாவில் நகரங்களைக்காட்டிலும் கிராமங்களே அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் அன்றாடம் வயல்காட்டுக்கு சென்று மண்வெட்டி பிடித்து வேலை செய்வதால் உடலுக்கு போதுமான உழைப்பு கிடைத்து விடுகிறது. ஆனால் நகர்புறங்களில் அலுவலக வேலை செய்கிறவர்களுக்கு உடல் உழைப்பு இல்லாததால் உடல் எடை கூடுதல், சர்க்கரை வியாதி, இதயநோய் போன்ற உடற்கோளாறுகள் ஏற்படுகிறது. எனவே அலுவலகங்களில் வேலை செய்கிறவர்கள், போதிய உடலுழைப்பு இல்லாதவர்கள் நோயின்றி வாழவேண்டுமானால் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது அவசியமாகும்.

கடலூர் அண்ணா ஸ்டேடியத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள் உள்ளதால் இந்த சூழலில் நடைபயிற்சி செய்யும் போது நமக்கு சுத்தமான பிராணவாயு கிடைக்கிறது. இதனால் நம் உடல் சுறுசுறுப்பாகிறது. உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. நடை, நோய்க்கு தடை என்று சொல்வார்கள். எனவே ஒவ்வொருவரும் தினமும் நடைபயிற்சி செய்ய வேண்டும். சர்வலோக நிவாரணியாக உள்ள நடைபயிற்சியை அனைவரும் மேற்கொள்ளலாம் என்றார்.

நடைபயிற்சியை முறையாக செய்வது எப்படி? என்று அக்குபஞ்சர் மற்றும் மூலிகை டாக்டர் ரவியிடம் கேட்டோம். இதோ அவர்….

கடற்கரைகள், பூங்காக்கள், மைதானங்கள் மற்றும் மரங்கள் உள்ள இடங்களில் நடப்பது நல்லது. அதிகாலையில் நடக்கிறவர்கள் அரை லிட்டர் தண்ணீர் குடித்து விட்டு நடக்க ஆரம்பிக்கலாம். உகந்த ஆடைகளை அணிந்துகொண்டு, இரு கைகளையும் வீசியபடி, நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கி பார்த்தபடி நடக்க வேண்டும்.

வெறும் காலால் நடப்பது மிக நல்லது என்றாலும் நாம் நடக்கும் இடத்தில் கற்கள், முட்கள் கிடந்தால் கால்களில் குத்தி காயம் ஏற்பட்டு விடும். எனவே சாதாரண காலணி அல்லது இறுக்கமில்லாத ஷூ அணிந்து நடக்க வேண்டும். அப்போது தான் பாதம் அழுந்தும் போது, பாதத்தின் அடியில் உள்ள நரம்பு முடிச்சுகள் தூண்டப்படும். புதிதாக நடைபயிற்சிக்கு வருபவர்கள் நடக்கும் தூரத்தை சிறிது, சிறிதாக அதிகரிக்க வேண்டுமே தவிர ஆர்வக்கோளாறால் முதல் நாளே பல கிலோ மீட்டர் தூரம் நடக்கக்கூடாது. ஒரு கையில் செல்போன் வைத்து பேசிக்கொண்டு நடப்பதையும், நாலைந்து பேர் சேர்ந்து பேசிக்கொண்டு செல்வதையும் நடைபயிற்சி என்று சொல்ல முடியாது. ஏனெனில் பேசிக்கொண்டு நடந்தால் நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறையலாம்.

அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரையுள்ள நேரமே நடப்பதற்கு மிக மிக உகந்த நேரமாகும். ஏனெனில் அந்த நேரத்தில் தான் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். மேலும் அப்போது நம் நுரையீரல் நன்றாக வேலை செய்யும். அதிகாலை 5 மணிக்குள் நடக்க முடியாதவர்கள் 5-6 மணிக்குள் நடக்கலாம். காலையில் நடக்க முடியாதவர்கள் மாலை 6-7 மணிக்குள் நடக்கலாம். தினமும் 45 நிமிடங்கள் நடந்தால் போதுமானது.

சிலர் எட்டு போட்டு நடக்கலாம் என்கிறார்கள். எட்டு போட்டு நடப்பதை விட குறுக்கும், நெடுக்குமாக நடப்பது நல்லது. ரிஷிகளும், முனிவர்களும் குறுக்கும், நெடுக்குமாகத்தான் நடந்தார்கள். இதனை பாம்பு நடை என்று சொல்வார்கள். இப்படி நடக்கும் போது கூடுதலாக கணையத்துக்கும் பயிற்சி கிடைப்பதால் இன்சுலீன் நன்றாக சுரக்கும். ஒரு சிலர் வீடுகளில் ‘டிரெட்மில்’ பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு மூட்டு வலி வரும் அபாயம் உள்ளது. எனவே இயற்கையோடு இணைந்த வகையில் நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை செய்வதே உடலுக்கு ஆரோக்கியமானது.

Related Posts

Leave a Comment

Translate »