கொரோனாவிலிருந்து முதியோர்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கொரோனாவை தடுக்கவோ, குணப்படுத்தவோ எந்த மருந்தும் இல்லை. முதியவர்கள் கொரோனா தொற்றிலிருந்து எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது என்று பார்க்கலாம்.

கொரோனா உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான உயிரை பலி வாங்கிக்கொண்டு இருக்கிறது. இது முதியோர்களை அதிகம் தாக்குகிறது. பாதிக்கப்பட்ட 70 சதவிகிதத்தினர் 60 வயதைக் கடந்தவர்களே. இதற்கு முக்கிய காரணம், முதியவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பது தான். முதுமையில் ஏற்படும் நீரிழிவு நோய், ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், சிறுநீரகம் பாதிப்பு மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. மேலும் நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளினாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புண்டு. உதாரணம்: ஸ்டீராய்டு, புற்றுநோய்க்கான மருந்துகள். சத்துணவு குறைவும் நோய் எதிர்ப்பு சக்தி குறைய ஒரு காரணமாகும்.

இந்நோய்க்கு என்று குறிப்பிடும்படியான அறிகுறிகள் ஏதுமில்லை. ஆரம்பத்தில் உடல் வலி, சோர்வு, தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் ஒரு சில நாட்கள் இருக்கும். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து லேசான காய்ச்சலும் தொண்டை வலியும் ஏற்படும், பசி குறையும். சுமார் ஒரு வாரத்திற்கு பின்பு தொண்டை வலி அதிகரிக்கும். உடல் சோர்வு மிகவும் அதிகரிக்கும். இந்த சமயத்தில்தான் காய்ச்சல் அதிகரித்து குளிரும் ஏற்படும். சிலருக்கு பசி குறையும். வயிற்றுப்போக்கும் ஏற்படும். இதற்கு அடுத்தகட்டமாக மூச்சுத்திணறல் ஏற்படும். நுரையீரல் பாதிக்கப்பட்டு, மூச்சு விடுவதில் அதிக சிரமம் ஏற்படும்போது வென்டிலேட்டர் பொருத்தி சிகிச்சை தரப்படும்.

கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தவர்களின் சராசரி வயது 78 ஆக உள்ளது. இறந்த முதியவர்களில் 83 சதவீதம் பேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் இருந்துள்ளது.

இந்நோயைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ எந்த மருந்தும் இல்லை. முதியவர்கள் கொரோனா தொற்றிலிருந்து எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது:

* ஊரடங்கு இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவசியமில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். நிறைய பேர் கூடும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லாமல் தவிர்க்கலாம். அவசியம் போக வேண்டும் என்றால் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

* கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு போகக் கூடாது. எங்கு இருந்தாலும், சமூக இடை வெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

* வெளியே போய்விட்டு வீட்டிற்குள் வந்தவுடன் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.

* முதியவர்கள் தங்கள் பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி பேசுவதையும், முத்தமிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

* கை குலுக்குவதை தவிர்க்கலாம். மற்றவர்களிடம் பேசும்போது மூன்று அடி தூரம் விலகி நின்றே பேய் வேண்டும்.

* வெளி உணவுகள், குளிர்ச்சியான பழ பானங்கள், குளிர் சாதனப்பெட்டியில் வைத்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* அசைவ உணவை சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் முழுமையாக சுத்தப்படுத்தி புதிதாக இருக்க வேண்டும்.

* தற்போது வெயில் காலம் ஆரம்பித்து விட்டதால் முதியோர்கள் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். மிதமான சூட்டில் அடிக்கடி தண்ணீர் பருக வேண்டும்.

* முதுமையின் காரணமாக தாக உணர்ச்சி சிறிது குறைந்தே இருக்கும். இதனால் முதியோர்கள் போதுமான தண்ணீர் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீரானது அவசியம் பருக வேண்டும். இதயநோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீர் பருக வேண்டும்.

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, கொட்டை வகைகள், பாகற்காய், தேன், காளான், பூண்டு, இஞ்சி, தயிர், மிளகு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* பிராணாயாமம், தியானம் தொடர்ந்து செய்ய வேண்டும்.

* தினமும் சிறிது உடற்பயிற்சி செய்வது அவசியம். முக்கியமாக பக்கவாதம், உதறுவாதம் என்கிற பார்க்கின்சன்ஸ் நோய் மற்றும் மூட்டு நோய் உள்ளவர்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

* தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அரை மணி நேரம் உடலில் வெயில் படுமாறு உட்கார வேண்டும். இதன்மூலம் வைட்டமின் டி சத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக: சைவ உணவுகளில் பால், தயிர், வெண்ணெய், பாலாடைக் கட்டி மற்றும் பால் அதிகமாக எடுத்துக் கொள்ளவும். சிறுதானிய வகைகளை (ராகி, கம்பு, சோளம், வரகு, தினை) உணவில் சற்று சேர்த்துக் கொள்ளலாம். மீன், மீன் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், காளான் முதலியவற்றை முடிந்தளவிற்கு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* நீரிழிவு நோய் உள்ளவர்கள், சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

* கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை போன்ற அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை தள்ளிப்போட வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகளை முதியோர் தவறாமல் கடைபிடித்தால் கொரோனா வைரஸ் நோய் முதியவர்களிடம் நெருங்கவே முடியாது!

Related Posts

Leave a Comment

Translate »