கைகளை கழுவுவதினால் நோய்த்தொற்று ஏற்படாமல் தற்காத்து கொள்ளலாம். மேலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்களை மற்றவர்கள் தொடும் முன்பும், பின்பும் கைகளை கழுவுவதன் மூலம் நோய்த்தொற்று பரவுவதை தவிர்க்கலாம்.
கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே அச்சப்படும் சூழ்நிலையில் தற்போது மக்கள் உள்ளனர். உலக நாடுகளையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கைகளை கை கழுவும் திரவம், சோப் போன்றவற்றை பயன்படுத்தி குறைந்தது 20 வினாடிகளுக்கு நன்றாக கழுவ வேண்டும் என்றும், கை கழுவும் முறைகள் பற்றியும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தொன்றுதொட்டு பல்வேறு நல்ல பழக்க வழக்கங்கள் நடைமுறையில் இருந்தன. ஆனால் நாகரிகம் என்ற பெயரில் அந்த பழக்க வழக்கங்களில் பலவற்றை மக்கள் மறந்தும், துறந்தும் விட்டனர். அதில் ஒன்றாக, வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வரும்போது, கைகள் மற்றும் கால்களை கழுவிவிட்டு வீட்டிற்குள் வரும் பழக்கத்தையும் கை கழுவி விட்டனர். தற்போது கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக அந்த பழக்கம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.
கைகளை கழுவுவதினால் நோய்த்தொற்று ஏற்படாமல் தற்காத்து கொள்ளலாம். மேலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்களை மற்றவர்கள் தொடும் முன்பும், பின்பும் கைகளை கழுவுவதன் மூலம் நோய்த்தொற்று பரவுவதை தவிர்க்கலாம். வீட்டில் வளர்க்கப்படும் நாய் போன்ற செல்லப்பிராணிகள், பறவைகள் போன்றவற்றை தொட்ட பின்பு கைகளை கண்டிப்பாக கழுவ வேண்டும் என்பது டாக்டர்களின் அறிவுறுத்தலாகும். வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கை கழுவுவதன் அவசியம் குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் எடுத்துக்கூறி, அதை பின்பற்ற செய்வது அவசியமாகும்.
கை கழுவுதலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலேயே ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 15-ந் தேதி உலக கை கழுவுதல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முறையாக கைகளை கழுவுவதோடு, அஜாக்கிரதையை தவிர்த்து விழிப்புணர்வோடு செயல்பட்டால் கொரோனா போன்ற நோய்த்தொற்றில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம். இதேபோல் தீய பழக்க வழக்கங்களையும் கை கழுவினால் உடல் மட்டுமின்றி, உள்ளமும் தூய்மையாகும் என்றால் அது மிகையாகாது.