கோடை மழை காலத்தில் பெண்கள் மின்விபத்துகள் ஏற்படாமல் தடுப்பது எப்படி?

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கோடை மழை காலத்தில் மின்விபத்துகளை தடுப்பது எப்படி? என்பது குறித்து மின்வாரிய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பி.செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மின்கம்பிகளை தொடக்கூடாது

தற்போது வெப்பச்சலனம் காரணமாக நெல்லை மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பலத்த காற்று, இடி- மின்னல் மற்றும் மழை காரணமாக ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க பொதுமக்களுக்கு கீழ்கண்ட பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

காற்று மற்றும் மழைக்காலங்களில் மின்கம்பிகள், மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அதுகுறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிப்பதோடு மின்வாரிய அலுவலர்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின்கம்பிகளை தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தகவல் தெரிவிக்க வேண்டும்

இடி- மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அடியிலோ தஞ்சம் அடைய வேண்டாம். காங்கிரீட் கூரையிலான கட்டிடங்களில் தஞ்சம் அடையுங்கள். பாதுகாப்பான கட்டிடங்கள் இல்லாத பட்சத்தில் தாழ்வான பகுதியில் தஞ்சம் அடையலாம். இடி- மின்னலின் போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, செல்போன் மற்றும் தொலைபேசியை பயன்படுத்தக்கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகில் இருக்கக்கூடாது.

மின்மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் மின்கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும்போது அதன் அருகே செல்லக்கூடாது. அதுகுறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மழையின் போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு இருக்குமாயின் அந்த பகுதியில் மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

மின்விபத்து ஏற்பட வாய்ப்பு

மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும். பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையதால் மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும்போது மரக்கிளைகள் மின்கம்பியில் பட்டு, மரம் வெட்டும் நபருக்கு மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

மின்கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின்கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல் தூண்களாக பயன்படுத்துவதோ, மின்கம்பங்கள், ஸ்டே வயர்கள் மற்றும் சர்வீஸ் பைப்புகளில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது. வீடுகள், மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் ஏற்படும் மின் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்க கூடாது. மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். மேலும் மின்தடையை நிவர்த்தி செய்ய 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்

தற்போது கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு விடுமுறையில் உள்ளதால் பொதுமக்கள் தங்கள் வீட்டு மாடியில் இருந்து பட்டம் பறக்க விடுகிறார்கள். அதில் சில பட்டங்கள் அறுந்து மேல்நிலை மின்கம்பிகளில் சிக்கிக் கொள்வதால் மின்தடை ஏற்படுவதுடன் மின்விபத்துகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகையால் பொதுமக்கள் தங்கள் வீட்டு மாடியில் இருந்து பட்டம் பறக்க விடுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் பாதுகாப்பின்றி இருக்கும் பழுதான மின்கம்பங்கள், தாழ்வாக இருக்கும் மின்கம்பிகள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மின்பகிர்வு பெட்டிகள் போன்றவற்றை படத்துடன் முழு முகவரியை குறிப்பிட்டு 8903331912 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தகவல் தெரிவித்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்.

மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து மின்விபத்துகளை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Posts

Leave a Comment

Translate »