சேமிப்பின் அவசியத்தை உணர்த்திய கொரோனா

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சேமிப்பு இல்லாத குடும்பம், கூரை இல்லாத வீடு. சிறு, துளி பெரு வெள்ளம். சேமிப்பு நம்முடைய பாதுகாப்பு. இப்படி அடுக்கடுக்கான முதுமொழிகள் சேமிப்பின் அவசியம் குறித்து நமக்கு உணர்த்துகின்றன. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது கை நிறைய சம்பாதித்து, நினைத்ததை உடனே வாங்குவது அல்ல. கடன் வாங்காமல் வாழ்வதே மகிழ்ச்சி மற்றும் நிம்மதியான வாழ்க்கை என்று கூறுவார்கள்.

செலவு போக தங்களுடைய வருமானத்தின் ஒரு பகுதியை சேர்த்து வைத்தால், அது எதிர்காலத்தில் திடீர் செலவுகளை ஈடுகட்ட உதவிக்கரமாக இருக்கும். வரவையும் தாண்டி செலவு செய்தால் குடும்பம் நடத்துவது கடினம். இதனால் தான் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மத்திய,மாநில அரசுகள் போட்டிப்போட்டு திட்டங்களை அறிவித்து வருகின்றன.

நடுத்தர மற்றும் உயர் வகுப்பினர் எதிர்கால தேவைகளுக்காக தங்களுடைய வருமானத்தின் குறிப்பிட்ட சில பகுதியை சேமித்து வருகிறார்கள். ஆனால் அன்றாடம் வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளிகளோ தங்கள் வருமானத்தில் குடும்பத்தை நடத்துவதே சிரமம் என்ற சூழலில், சேமிப்பு என்பது அவர்களை பொறுத்தமட்டில் வெறும் கானல் நீராகவே இருக்கிறது. தினந்தோறும் கிடைக்கும் வருமானத்தை வைத்து கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்தலாமே தவிர, சேமிப்பு என்பது எட்டாக் கனி தான்.

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில்கள் முடங்கி, மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழைகள் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். செலவுகளையும் ஈடுகட்ட முடியாமல் திணறி வருகிறார்கள். இதனால் தங்களிடம் இருந்த தங்க நகைகளை எடுத்துக்கொண்டு அடகு கடைகளுக்கும், வங்கிகளின் படிகட்டுகளிலும் ஏறி, இறங்கி வருகிறார்கள்.

பிள்ளைகளின் கல்வி கட்டணம், திருமண செலவு உள்பட எதிர்கால தேவைகளுக்காக சேமித்து வைத்திருந்தவர்கள் அந்த பணத்தை எடுத்து, ஊரடங்கு காலக்கட்டத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை ஓரளவுக்கு சமாளித்து வருகின்றனர். ஆனால் சேமிப்பு இல்லாதவர்களோ அரசு ஏதாவது நிவாரண உதவி அறிவிக்குமா? அந்த தொகையை வைத்து இன்னும் எத்தனை நாட்கள் குடும்பத்தை நகர்த்தலாம்? என்று மனக்கணக்கு போட்டு வருகிறார்கள்.

மேலும் சிலரோ அரசு சாரா அமைப்புகள் வந்து உதவி செய்யமாட்டார்களா? என்ற ஏக்கத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள். பசியும், பட்டினியுமாய் வாழ்க்கையும் உருகிக்கொண்டே செல்கிறது. கொரோனா பல படிப்பினைகளை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது. அந்தவகையில் சேமிப்பின் அவசியம் குறித்தும் உணர்த்தியிருக்கிறது. எனவே எதிர்காலத்துக்காக சிறு தொகையை சேமித்து வைத்தால், கண்டிப்பாக அது ஒரு நாள் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

Related Posts

Leave a Comment

Translate »