ஞாயிற்றுக்கிழமை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது..?

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

உலகம் முழுவதும் மனித மனங்கள் அநேகமாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. மனிதர்களின் முன்னுரிமைகள், ரசனைகள், விருப்பு வெறுப்புகளில் பெரிய வித்தியாசம் இல்லை. அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து ஆப்பிரிக்கா, ஆசியா வரை அப்படித்தான்.

எந்த பள்ளிக்கு போனாலும் சில கேள்விகளை நான் தவறாமல் கேட்பதுண்டு. அதில் ஒன்று உங்களுக்கு பிடித்த கிழமை எது?. மிகுந்த வாக்கு வித்தியாசத்தில் முதலிடம் பிடிப்பது எங்கேயும், எப்போதும் ஞாயிற்றுக் கிழமை!

இதே போன்று, அதிகம் பிடிக்காத கிழமை என்றால், இங்கும் போட்டி கடினமாக இல்லை. முதல் இடத்தில் நிற்பது திங்கட்கிழமை!

‘ஞாயிற்றுக்கிழமை வருவதும் தெரியல; போறதும் தெரியலை… வே…கமா ஓ…டிப்போயிருது.., திங்கட்கிழமை ஏன்தான் வருதோன்னு இருக்குது…’ பலரது முகங்கள் ஞாயிறு மதியமே கூட வாடிப் போய்விடும். ‘அடுத்த நாள் பாதிப்பு!’

இந்த போக்கு நம் நாட்டில் மட்டும்தான் இருக்கிறதா..? இல்லவே இல்லை. உழைப்புக்கு பெயர் பெற்ற நாடுகளில் கூட மனிதர்கள் விடுமுறை நாட்களையே அதிகம் நேசிக்கிறார்கள். ஏன் அப்படி…? முக்கிய காரணங்கள் இரண்டு. முதலில் குடும்பம். அடுத்து பணிச்சுமை. என்னதான் நாகரிக வளர்ச்சி, மாறுபட்ட கலாசாரம் என்றெல்லாம் சொன்னாலும், எல்லா மனிதர்களுக்கும் பாச உணர்வு இயல்பாகவே, குடும்பத்தில்தான் அமிழ்ந்து கிடக்கிறது.

ஒட்டுதல், உளமார பழகுதல், சுயமாக கருத்துகளை பகிர்ந்து கொள்ளல், ஆதரவாக நிற்றல் ஆகியன எல்லோருக்கும் பொதுவான குண நலன்கள். ஆனால் இதனை எல்லோரும் எல்லோருடனும் சமமாக வெளிப்படுத்துவது இல்லை. குறிப்பாக தனது கவலைகள், தோல்விகளை யாரும் பிற உறவுகளுக்கு மத்தியில் காண்பித்துக் கொள்ள விரும்புவதே இல்லை. இவற்றுக்கு எல்லாம் வடிகால் குடும்பம் மட்டுமே. அதனால்தான், குடும்பத்துடன் செலவிடுகிற நேரத்தை மனிதர்கள் ஆனந்தமாய் வரவேற்கிறார்கள்.

‘மத்த நாட்கள்ல நேரமே இருக்கறது இல்லை; நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிறதே அபூர்வம்.. ஞாயித்துக் கிழமைதான்… ஒன்னா சாப்பிடுவோம்… ஒன்னா வெளியில போயிட்டு வருவோம்.. அன்னைக்கு முழுக்க குழந்தைங்களோட மட்டும்தான் செலவு செய்வோம்…’

இதை சொல்கிறபோதே உணர்ச்சிகள் வந்து கொட்டும் பாருங்க… இதுதான் ஒவ்வொரு மனிதனின் இயல்பான சுயமான வடிவம். இயற்கையில் மனித மனம், ஈரம் நிறைந்தது; பிறரை அரவணைத்து செல்லக்கூடியது. அந்த ‘பிறர்’ யார்..? அதில் மற்ற பலரும் ஏன் வரக் கூடாது..? இது மட்டும் சாத்தியம் ஆனால், மனிதர்களுக்குள் வெறுப்பு, விரோதம் எல்லாம் மறைந்தே போகும். நம் நாட்டின் ஆகச் சிறந்த மிக வலிமையான ‘நிறுவனம்’ எது…? குடும்பம். எதற்கும் வளைந்து கொடுக்காத ‘ஆயுதம்’ எது..? குடும்ப உறவுகள். என்றைக்கும் மாறாத நிலையான உண்மை இது.

மேற்கத்திய நாடுகளில், இந்த அளவுக்கு வலுவாக இல்லை என்றாலும், முக்கியமான சமூக அலகாகத் தொடர்ந்து வருவது குடும்பம் மட்டுமே. அதனால்தான் வார இறுதி நாட்கள், பண்டிகைகள் மற்றும் ‘சிறப்பு’ நாட்கள் என்றால், குடும்ப உறுப்பினர்களுடன் இருப்பதையே உலக மக்கள் விரும்புகிறார்கள். இதற்கு பெரிதும் உதவுவது ஞாயிற்றுக்கிழமை. அடுத்து வருகிறது பணிச் சுமை, மன உளைச்சல். எவ்வளவு ஆனந்தமான ஆரோக்கியமான பணிச் சூழல் இருந்தாலும், அலுவலகம் என்பது அலுவலகம்தான். ‘வீடு’ ஆகி விடாது.

விதிகள், கட்டுப்பாடுகள், ‘பதில் சொல்ல வேண்டிய’ பொறுப்புகள், மேலதிகாரிகள், வாடிக்கையாளர்கள்… எல்லாம் சேர்ந்தது பணியிடம். அங்கே ‘சுகமாக’ இருக்கலாம்; ‘சுதந்திரமாக’ இருத்தல் இயலாது. தான் எங்கே தானாகவே இருக்க முடிகிறதோ… அங்குதான் மனம் லயிக்கும். எனக்கு மட்டும் வேண்டிய அளவு பணம் இருக்குன்னு வச்சுக்கயேன்… இங்கெல்லாம் நான் வரவே மாட்டேன்…’ என்று நினைக்காத நபர்கள், நம்மில் எத்தனை பேர்..? ஏதோ ஒரு தேவை, நிர்பந்தம் இருக்கிறது; அதனால் அலுவலகம் செல்கிறோம்; சம்பாதிக்க’ வேண்டி இருக்கிறது; அதனால் வேலைக்கு போகிறோம். கட்டாயத்தின் பேரில் செய்கிற எந்த காரியமும் மகிழ்ச்சியை தராது.

அந்த காரியத்தின் பயனை கொண்டுவந்து அனுபவிக்க வேண்டும். அப்போது தானாக மனம் குதூகலிக்கிறது. இதற்கு வழி கோலுகிறது ஞாயிற்றுக் கிழமை.

‘வேலை செய்யாமல் சோம்பேறியாக பொழுதை கழிக்கிற நாளை கொண்டாடுவது தவறு; எப்போது நாம் வேலை நாட்களை விரும்ப தொடங்குகிறோமோ…, அப்போதுதான் நாம் முன்னேறுவோம்…’ இப்படி எல்லாம் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். அறிவார்ந்த சொற்கள்தாம். ஆனால், ஆரோக்கியமானது அல்ல.

பணியில் இருந்து விடுதலை என்பது அவ்வப்போது கிடைக்கிற வலி நிவாரணம். அதானால்தான் வேலை நிறுத்தம், பணிக்கு வராதீர்கள் என்று சொன்னால் தொழிலாளர்கள், ஊழியர்கள், அலுவலர்கள் என்று அத்தனை பேரும், முழு ஒத்துழைப்பு தருகிறார்கள். ‘நூறு சதவீத வெற்றி’ இதனால்தான் சாத்தியம் ஆகிறது.

சற்றே மாறுபட்டு இப்படி சொல்லி பாருங்கள்: ‘கோரிக்கையை வலியுறுத்தி இரண்டு நாட்களுக்கு இங்கேயே பணியில் இருப்போம்.. யாரும் வீட்டுக்குப் போக மாட்டோம்..!’ என்று, சர்வ சத்தியமாக யாரும் ஆதரிக்க முன்வர மாட்டார்கள். ஞாயிறு தாக்கம் அத்தனை வலிமையானது. இதிலே சரி, தவறு என்று எதுவும் இல்லை. வீடு இயல்பானது; அலுவலகம் திணிக்கப் படுவது. மனம் முன்னதை விரும்புகிறது. அவ்வளவுதான்.

ஒரே ஒரு வேண்டுகோள்தான். மதுவில் இருந்து ஊர் சுற்றுதல் வரை பல்வேறு பொழுதுபோக்கு வழிகள் உள்ளன. இவை எதுவும் விடுமுறையை பயனுள்ளதாக ஆக்காது. மறுநாள் பணிக்கு ஊக்கத்தை அளிக்காது.

குடும்பத்துடன் ஆரோக்கியமாய் ஆனந்தமாய் செலவிட்டுப் பாருங்கள். ஞாயிற்றுக் கிழமையின் ஆனந்தம், அடுத்து ஆறு நாட்களுக்கும் உடன் வரும். வேறு என்ன வேண்டும்…?

Related Posts

Leave a Comment

Translate »