நகம் கடிக்கும் பழக்கம் சிறு வயது முதலே சிலரை விடாமல் துரத்தி வருகிறது. கோபம், வருத்தம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு என பல்வேறு உணர்ச்சி வெளிப்பாடுகளில் இருக்கும்போதும், ஏதாவது ஒன்றை பற்றி யோசித்துக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போதும் விரல்கள் தானாகவே வாய் இருக்கும் பகுதி நோக்கி காந்தத்தை கண்ட இரும்பு போல ஈர்க்கப்படுகிறது.
நிழல்போல தொடரும் நகம் கடிக்கும் பழக்கத்தை விட்டுவிடவேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொள்பவர்களும் உண்டு. ஆனால் வானவில்லின் வர்ணம் கொஞ்ச நேரம் இருப்பதுபோல அந்த பழக்கம் சிறிது நேரத்துக்கு பின்னர் தங்களை அறியாமல் மீண்டும் துளிர்விடுகிறது. அந்த பழக்கத்தை விட்டொழிப்பதற்கு கஜினி முகமது போல மீண்டும், மீண்டும் படையெடுப்பவர்களும் உண்டு.
நகம் கடிக்கும் பழக்கத்தில் இருந்து எப்படியாவது மீண்டுவிடவேண்டும் என்று நினைத்தவர்களுக்கு கொரோனா தக்க பாடம் புகட்டியிருக்கிறது. கொரோனாவுக்கு பயந்து நகம் கடிக்கும் பழக்கத்தை சிலர் கைவிட்டுள்ளனர். இன்னும் சிலர் அந்த பழக்கத்தை விடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். நகத்தை சுத்தமாக பராமரிப்பதற்கான உந்துகோலோக, நகம் கடிக்கும் பழக்கத்துக்கு கொரோனா முடிவுரை எழுதியிருக்கிறது என்று சொன்னால் மிகையல்ல.
இதேபோல தற்போது உமிழ்நீரை தொட்டு யாரும் ரூபாய் நோட்டுகளை எண்ணுவது இல்லை. அரசு அறிவித்த வழிமுறைகள் அனைத்தையும் முழுமையாக பின்பற்றினால் கொரோனாவுக்கும் முடிவுரை எழுதிவிடலாம்.