சரும அழகை மெருகேற்றுவதில் பழங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பழங்களை சாப்பிடுவது மட்டுமல்ல. அவைகளை கூழாக அரைத்து முகத்தில் தடவியும் அழகுக்கு அழகு சேர்க்கலாம். எந்தெந்த பழங்கள் சருமத்திற்கு எப்படி பொலிவு சேர்க்கிறது என்று பார்ப்போமா!
வறண்ட சருமத்தை கொண்டவர்கள் வாழைப்பழங்களை பயன்படுத்தலாம். அதிலிருக்கும் பொட்டாசியம் மற்றும் ஈரப்பதம் வறண்ட மற்றும் சேதமடைந்த சருமத்தை சீர்செய்துவிடும். மேலும் வாழைப்பழங்களில் இருக்கும் வைட்டமின் ஏ, ஈரப்பதத்தை மீட்டெடுக்க உதவும்
முகப்பரு பாதிப்புக்கு ஆளானவர்கள் வாழைப்பழத்தை தவறாமல் பயன்படுத்த வேண்டும். வாழைப்பழத்துடன் கால் கப் தயிர், சிறிதளவு லவங்கப்பட்டை தூள், தேன் கலந்து நன்கு மசித்துக்கொள்ளவேண்டும். அதனை முகத்தில் தடவி, உலரவிட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இது முகப்பருவை போக்கும்.
ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சிட்ரிக் அமிலமும், வைட்டமின் சி சத்தும் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். சரும சுருக்கங்களை போக்கவும் உதவும். சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றி இளமையான தோற்றத்திற்கு வித்திடும். ஆரஞ்சு சருமத்திற்கு ஏற்ற சிறந்த மாஸ்ச்சரைசராகவும் செயல்படும் தன்மை கொண்டது. ஒரு ஆரஞ்சு பழத்தை தோலுரித்து கூழாக்கி அதனுடன் அரை டீஸ்பூன் மஞ்சளை சேர்த்து பிசைந்து முகத்திலும், கழுத்திலும் பூசி கால் மணி நேரம் கழித்து நீரில் கழுவி விடலாம். ஆரஞ்சு பழ தோலை உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தயிர் கலந்தும் முகத்தில் பூசி வரலாம்.
கரு வளையத்தை காக்க பப்பாளி பயன்படும். அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் இ, சி போன்றவை சருமத்திற்கு பாதுகாப்பு கவசமாக செயல்படும். பப்பாளியில் இருக்கும் பாப்பெயின் எனும் நொதி இறந்த செல்களை அழித்து சருமத்தை புதுப்பிக்க உதவும். பப்பாளி பழ துண்டுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து மிக்சியில் அடித்து அதனை முகம், கழுத்தில் பூசி, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த மசாஜ் இறந்த செல்களை நீக்கி சருமத்தை பொலிவாக்கும்.
சரும அலர்ஜி பாதிப்புக்குள்ளாகுபவர்கள் ஸ்ட்ராபெர்ரி பழத்தை பயன்படுத்தலாம். அதிலிருக்கும் வைட்டமின் சி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நான்கைந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை மிக்சியில் அரைத்து அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி காய்ந்ததும் வெது வெதுப்பான நீரில் கழுவவேண்டும்.
ஆப்பிளும் சருமத்தை பிரகாசிக்க செய்யும் தன்மை கொண்டது. தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர் வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். பாதி ஆப்பிளை மிக்சியில் விழுதாக அரைத்து அதனுடன் தேன் மற்றும் ஓட்ஸ் கலந்து சருமத்தில் பூசி வரலாம். அது சரும துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி பொலிவை உருவாக்கும்.