அடர்ந்த கூந்தல் என்பது பெண்களின் ஆசைக்கனவாக இருக்கிறது. ஆனால் முடி உதிர்வு பிரச்சினை கூந்தல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு விடுகிறது. முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு கூந்தல் வளர்ச்சிக்கு சில வகை விதைகள் துணைபுரிகின்றன. அவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் ஆரோக்கியத்துடன் கூந்தல் நலனும் மேம்படும்.
கருப்பு எள் மற்றும் வெள்ளை எள் இரண்டுமே கூந்தலுக்கு ஆரோக்கியமும், பளபளப்பு தன்மையும் ஏற்படுத்தக்கூடியவை. அவற்றுள் தாதுக்கள், வைட்டமின்கள், பாலி அன்சச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், கொழுப்பை குறைக்கும் பைட்டோஸ்டெரால் போன்றவை இருக்கின்றன. அவை இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டவை. ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் உதவும். அன்றாடம் சமைக்கும் காய்கறிகள், உணவுடன் எள்ளையும் சேர்த்துக்கொள்ளலாம். லட்டுக்களாக தயாரித்தும் சாப்பிட்டு வரலாம்.
சுற்றுச்சூழல் மாசுக்கள், நச்சுகளிடம் இருந்து கூந்தல் முடியை பாதுக்கும் தன்மை சூரியகாந்தி விதைக்கு இருக்கிறது. முடி வளர்ச்சிக்கும் வித்திடும். முடி அடர்த்தியை ஊக்குவிக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், துத்தநாகம், வைட்டமின் இ போன்றவைகளும் அதில் இருக்கிறது. ஆதலால் சூரியகாந்தி விதையையும் உணவில் சேர்த்துகொள்ளலாம். வீட்டில் நொறுக்குத்தீனியாக அதை சாப்பிடலாம்.
முடி பலம் இழந்து அறுந்து போவதை தவிர்க்க பூசணி விதையை பயன்படுத்தலாம். டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அளவு அதிகமாவதன் காரணமாக முடி உதிர்ந்து வழுக்கை தலை பிரச்சினையை எதிர்கொள்ளும் ஆண்கள் பூசணி விதையை தவறாமல் சிற்றுண்டியில் சேர்த்துக்கொள்வது நல்லது. மாலை நேரத்தில் டீயுடன் சேர்த்து சுவைக்கலாம்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆளி விதையில் அதிகம் உள்ளது. அது முடி உதிர்வதை கட்டுப்படுத்துவதோடு, கூந்தலின் வளர்ச்சிக்கும் உதவும். அதில் நார்ச்சத்துகள், புரதம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்றவைகளும் நிறைந்துள்ளன. உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கும் ஆளிவிதை பயனுள்ளதாக இருக்கிறது. சாலட்டுகளில் ஆளிவிதையை கலந்து சாப்பிடுவது கூடுதல் நன்மை தரும்.
வெந்தயத்தை விழுதாக அரைத்து கூந்தலில் தடவி மசாஜ் செய்து வரலாம். இதில் இருக்கும் புரதம், நியாசின், பொட்டாசியம், அமினோ அமிலங்கள் போன்றவை முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவும். சமையலிலும் வெந்தயத்தை அதிகம் சேர்க்கலாம்.
சியா விதைகளிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது கூந்தலை அடர்த்தியாக வளரச் செய்யும். செரிமானத்தையும் அதிகரிக்க செய்யும், இதய நோய், நீரிழிவு நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவும். ஓட்ஸ் உணவுடன் சியா விதைகளை சேர்த்து சாப்பிடலாம். இதனை தனியாக சாப்பிடுவதற்கு சிரமமாக இருந்தால் பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை கலந்தும் சாப்பிடலாம்.