காரணம் தெரியாத காய்ச்சல்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

காய்ச்சல்களின் அறிகுறி பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் தோன்றும். ஆனால், அவைகளில் பலவிதம் உண்டு. மலேரியா, டைபாய்டு, காசநோய், நுரையீரல் சளி, சிறுநீரில் கிருமி, புண் அல்லது சீழ் வைத்தல் போன்றவை காய்ச்சலுக்கு அதிக காரணமாகும். வைரஸ் நோய்களான டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், பறவை மற்றும் பன்றிக்காய்ச்சல் போன்றவையும் அதிகமாக காணப்படுகின்றன. காசநோய் நமது உடலில் எந்தப் பாகத்தை அல்லது மண்டலத்தை வேண்டுமானாலும் தாக்கலாம்.

அதனால், நீண்ட நாட்கள் காய்ச்சல் இருந்தால் அது காசாநோயாக இருக்கலாம். அதற்கான சோதனைகளை செய்துகொள்வது நல்லது. வெளியில் தெரியாமல் உடலுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோய், காசநோய் ஆகியவை நீண்டநாள் காய்ச்சலுக்கு முக்கிய காரணங்கள். இதய வால்வுகளில் பாதிப்பு வந்தாலும் அதனால் காய்ச்சல் வரும்.

ஒருவரின் உடலிலுள்ள வெப்பம் 38.3 டிகிரி செண்டிகிரேடுக்கு மேல், 3 வாரங்களைக் கடந்தும் தொடர்ந்து காய்ச்சல் இருந்துகொண்டே இருந்தால், 3 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து, எல்லா சோதனைகள் முடித்தும் காய்ச்சலுக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதை காரணம் தெரியா காய்ச்சல் என்று மருத்துவ உலகில் அழைக்கிறார்கள்.

மக்களில் பலரும் காய்ச்சலை மிக சாதாரணமாக நினைக்கிறார்கள். சில சமயங்களில் அது மிகவும் சிக்கலானதும், பல நாட்கள் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் எல்லா சோதனைகள் செய்தும் எளிதில் குணமாகாமல் மருத்துவர்களை திணறடிக்கும் காய்ச்சல்களும் உண்டு. பொதுவாக அனைவரும் காய்ச்சல் வந்தால் 3 அல்லது 4 நாட்களில் குணமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில கடினமான வியாதிகள் உடலுக்குள் இருந்தால் காய்ச்சல் எளிதில் குணமாகாது. ஒரு சிலர் பல நாட்கள் கடந்தபின்பே மருத்துவர்களை சென்று பார்க்கிறார்கள்.

அப்போது மருத்துவர்கள் எந்த பரிசோதனை செய்தாலும் சாதகமான பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில்லை. சரியான சிகிச்சை கொடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. வைரஸ்நோய் பாதிப்புகளுக்கு நோயின் அறிகுறிக்கு தகுந்த மாதிரிதான் சிகிச்சை தரப்படுவதால் காய்ச்சல் குணமாவதில் தாமதம் ஏற்படலாம் என்று காரணம் தெரியாத காய்ச்சலுக்கான விளக்கத்தை மருத்துவத்துறை சொல்கிறது.

Related Posts

Leave a Comment

Translate »