இன்றைக்கு நம்மில் பெரும்பாலானோர் கட்டற்ற இணைய இணைப்புடன் கூடிய உயர்ரக ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறோம். பிறரை தொடர்புகொள்ள, மின்னஞ்சல் பார்க்க என்பது போன்ற அத்தியாவசிய செயல்பாடுகளை தாண்டி, காலை கண் விழிப்பதில் தொடங்கி, உணவருந்தும்போது, பயணத்தின்போது, இரவு தூங்க செல்வதற்கு முன்புவரை என ஒரு நாளின் பெரும் பகுதியை சமூக வலைதளங்களில் செலவிடுகிறார்கள்.
இவற்றின் அதீத பயன்பாடு, வாசிப்பை இன்று பெருமளவு குறைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் விளைவாக கவனச் சிதறல், தொடர்ந்து பத்து வரிகளுக்கு மேல் வாசிக்க இயலாமை என்பது போன்ற சிக்கல்கள் வாசிப்பில் ஏற்படுகின்றன. மேலும், இன்றைக்கு எந்தவொரு தகவலையும் சில வினாடி நேரத்தில் எடுத்துவிடக்கூடிய நிலையில் நாம் இருந்தாலும், அது குறித்த ஆழ்ந்த அறிவையும் புரிதலையும் பெற்றிருக்கிறோமா என்பது கேள்விக்குரியாகும்.
இத்தகைய சிக்கல்கள் இருந்தாலும், இணையத்தை வாசிப்பு களமாக நாம் மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு தேவை வாசிப்பில் நம்முடைய விருப்பத்தையும் தேர்வையும் கண்டு அடைவதே. கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், நேர்காணல், மொழிபெயர்ப்பு இன்னும் பிற என பல்வேறு வகைப்பாடுகளால் ஆன கட்டுரைகள் தினமும் ஆயிரக்கணக்கில் எழுதப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகின்றன. இவற்றுள் பெரும்பாலானவை இலவசமாகவே வாசிக்க கிடைக்கின்றன.
எனவே சமூக வலைதளங்களையும் தாண்டி இணையத்தின் பயன்பாடு அளப்பரியது; எல்லையற்றது, சமூக வலைதளங்களையும்கூட நாம் பயன்படுத்தும் விதத்தை பொறுத்து பயனுள்ளவையாக மாற்றிக்கொள்ள முடியும்.