அன்றாட பழக்க வழக்கத்தை மாற்றிய கொரோனா: டீ, காபிக்கு பதிலாக கபசுர குடிநீர்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கொரோனா வைரஸ் பீதியால் மக்கள் உறைந்து போயிருக்கிறார்கள். எங்கே நமக்கும் கொரோனா வந்துவிடுமோ? எனும் அச்சத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்கள். இருமல், சளி, காய்ச்சல் பிரச்சினைகள் இருந்தால் வரவேண்டாம் என்று பல ஆஸ்பத்திரிகள் வெளிப்படையாக சொல்லிவிடுகின்றன. இதனால் லேசான காய்ச்சல், சளி, இருமல் வந்தால் கூட மக்கள் வெலவெலத்து போகிறார்கள்.

இதனால் ‘வருமுன் காப்போம்‘ என்ற அளவில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கையாண்டு வருகிறார்கள். காய்ச்சல், சளி பிரச்சினைகள் வராமல் தடுக்க சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சித்தரத்தை, தூதுவளை ஆடாதொடை போன்றவற்றை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி வைத்து பால் மற்றும் சுடுநீரில் கலந்து குடித்து வருகிறார்கள். இருமல், சளி, காய்ச்சல் வந்துவிடவே கூடாது என்பதில் மிகவும் மெனக்கெடுகிறார்கள்.

கொரோனா பீதி காரணமாக மக்களின் அன்றாட பழக்க வழக்கம் முற்றிலுமாக மாறி கிடக்கிறது. தினமும் காலை எழுந்தவுடன் காபி, டீ குடிப்பது பெரும்பாலானோரது வழக்கம். ஆனால் தற்போதைய சூழலில் காலை எழுந்தவுடனே கபசுர குடிநீர் குடிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அதேபோல பலர் நோய் எதிர்ப்பு சக்தியூட்டும் ஓமியோபதி மருந்துகளையும் உட்கொண்டு வருகிறார்கள். அதேபோல இடைஇடையே நொறுக்குத்தீனி சாப்பிடும் போக்கும் குறைந்துவிட்டது. தவிர்க்க முடியாமல் டீ குடிக்க நேரிடும் போதும் அதில் இஞ்சியின் சாறும் அதிகமாக இருக்குமாறு பார்த்து கொள்கிறார்கள்.

முருங்கை இலை சூப், கீரை சூப், மூலிகை சாறு போன்றவற்றையும் மக்கள் குடிக்க தொடங்கியிருக்கிறார்கள்.

அதேபோல கொரோனா என்பது சுவாசம் சார்ந்த பிரச்சினைகளை உருவாக்கும் என்பதால் யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவற்றையும் மக்கள் செய்ய தொடங்கி உள்ளனர். உடற்பயிற்சி கூடங்கள் மூலம் ஆன்லைன் வழியாகவும் இதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

அதேபோல உணவுமுறைகளிலும் மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தொடங்கியிருக்கிறார்கள். உண்ணும் உணவில் இஞ்சி, சுக்கு, மிளகு, பூண்டு, மஞ்சள் தூள் போன்றவற்றை அதிகமாகவே சேர்த்து கொள்கிறார்கள். ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி, கொய்யா, லிச்சி, குடைமிளகாய், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய், திராட்சை, மாம்பழம், பிராக்கோலி, முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற வைட்டமின்-சி நிறைந்த காய்கறிபழங்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆடாதொடை, வேப்பிலை சாறு, முருங்கைச்சாறு அடங்கிய மூலிகை கசாயமும் உணவுக்கு முன்பாக சாப்பிடுகிறார்கள். எப்படியாவது கொரோனா நம்மை அண்டவிடக்கூடாது, அந்தளவு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிவிட வேண்டும் என மக்கள் உடல்நலத்தில் அதீத அக்கறை காட்டி வருகிறார்கள். இதனால் நொறுக்குத்தீனிகளுக்கும், எண்ணெயில் பொறித்த உணவுகளுக்கும் தற்காலிக ஓய்வு கொடுத்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

Related Posts

Leave a Comment

Translate »