உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் ‘கோகோ’

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் சாக்லேட்டை ருசிப்பதற்கு விரும்புவார்கள். அதில் இருக்கும் கோகோவை அதிகமாக உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இயற்கையான கோகோ தூள் ஆரோக்கியமானதுதான். அதுதான் சாக்லேட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது என்றாலும் அதனுடன் சர்க்கரை அதிகமாக கலக்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது. அத்தகைய கோகோவில் கலோரிகளின் அளவும் அதிகமாகிவிடும். அதனால் ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட கோகோவை தவிர்த்துவிட்டு இயற்கையான கோகோ தூளை உபயோகிக்கலாம். அது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இயற்கையான கோகோ தூள் எந்த வகையில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்பது குறித்து பார்ப்போம்.

* ஒரு டேபிள்ஸ்பூன் கோகோ தூளில் 10 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன. கொழுப்பு ஒரு கிராமும், கார்போஹைட்ரேட் 3 கிராமும், புரதம் ஒரு கிராமும், நார்ச்சத்து 2 கிராமும் கலந்திருக்கின்றன. எந்தவொரு உணவுப்பொருளாக இருந்தாலும் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருந்தால் அது ஆரோக்கியமானதாக மதிப்பிடப்படுகிறது. கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் நார்ச்சத்தை பெற விரும்புபவர்கள் கோகோ தூளை தேர்ந்தெடுக்கலாம்.

* கோகோ பவுடரில் கேடசின் மற்றும் எபிகாடெசின் வடிவத்தில் பிளாவனாய்டுகள் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும், ரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கும், ரத்த நாளங்களை இலகுவாக்குவதற்கும் உதவக்கூடும்.

* கோகோவில் மெக்னீசியம், மாங்கனீஸ், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற ஏராளமான தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. அவை அனைத்தும் உடல் இயக்க செயல்பாட்டிற்கு இன்றியமையாதவை. தினமும் உடலுக்கு தேவைப்படும் இந்த தாதுக்களின் தேவையில் 3 முதல் 9 சதவீதத்தை ஒரு டேபிள்ஸ்பூன் கோகோ தூள் நிவர்த்தி செய்துவிடும். மெக்னீசியம், இதயத்தின் செயல்பாட்டை நிர்வகிக்க துணைபுரியும். எலும்புகளை வலுப்படுத்தவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை வளர்ச்சிதை மாற்றங்களுக்கு தூண்டவும் மாங்கனீஸ் உதவும். இரும்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும். ரத்த சிவப்பு அணுக்கள் உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கும். அதுபோல் துத்தநாகமும் புதிய ரத்த செல்களின் உற்பத்திக்கு உதவுவதோடு நோய் எதிர்ப்புசக்தியையும் மேம்படுத்தும் தன்மை கொண்டது.

* நிறைய பேர் சோகமாக இருக்கும்போது சாக்லேட் சாப்பிட விரும்புவார்கள். அது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த துணைபுரியும். சாக்லேட் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கோகோ பவுடரில் இருக்கும் ‘ஆண்டி டிப்ரஸன்’ பண்புகள்தான் இதற்கு காரணம். மேலும் கோகோ பவுடரில் பெனேதைலமைன் உள்ளது. அது மகிழ்ச்சியுடன் தொடர்புடையது. கோகோ பவுடர் இயற்கையாகவே எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டும். அவை மனச்சோர்வு மற்றும் சோகத்தை எதிர்த்து போராடும் மகிழ்ச்சியான ஹார்மோன்களின் செயல்பாட்டுக்கு உதவுபவை. சாக்லேட் சாப்பிடும்போது மனநிலை மேம்படுவதற்கான காரணம் இதுதான். ஒரு டேபிள்ஸ்பூன் கோகோ தூளில் 12 மில்லி கிராம் காபின் இருக்கிறது. இது காபியுடன் ஒப்பிடும்போது குறைவானதுதான். ஆதலால் இயற்கையான கோகோ தூளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சாக்லேட்டாக சாப்பிடாமல் கோகோ தூளுடன் பிரவுன் சுகர் கலந்து காபியாக தயாரித்து பருகலாம். கோதுமையுடன் கோகோ தூள் சேர்த்து கேக் தயாரித்தும் ருசிக்கலாம். 

Related Posts

Leave a Comment

Translate »