சென்னை:
கொரோனா எனும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் தான் இன்றைக்கு உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனாவுக்கு பயந்து மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கிறார்கள். காற்றில் பரவ சாத்தியமுள்ள கொரோனா, நீரிலும் பரவிவிடுமோ என்ற அச்சத்தாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குடிநீரை காய்ச்சி வடிகட்டி அதன் பின்னரே குடிக்கிறார்கள்.
அதேபோல வீடுகளில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் (ஆர்.ஓ.) இருந்தாலும், அந்த நீரையும் காய்ச்சிய பின்னரே குடிக்கிறார்கள். சென்னையில் பெரும்பாலான வீடுகளில் 20 லிட்டர் கொண்ட குடிநீர் ‘கேன்’கள் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கொரோனா பீதி காரணமாக ‘கேன்’களில் உள்ள குடிநீரையும், சுடவைத்து அதன் பின்னரே மக்கள் பருகுகிறார்கள். அதேபோல காலையில் எழுந்ததும் மஞ்சள் தூள், மிளகு, இஞ்சி கலந்த சுடு தண்ணீர் குடிப்பதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். குடிக்கும் தண்ணீர் மூலம் எந்த பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மக்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். குழந்தைகளும் தப்பித்தவறி குளிர்ந்த நீர் குடிக்காதவாறு பெற்றோர் கண்காணிக்கிறார்கள்.
கொரோனா அறிகுறிகளில் முக்கியமானது தொண்டை வலி. தொற்று உள்ளிட்ட தொண்டை சார்ந்த பிரச்சனைகளை வெந்நீர் போக்கிவிடும் என்பதால், அனைத்து வீடுகளிலும் தற்போது வெந்நீர் குடிக்கும் பழக்கம் திரும்பியிருக்கிறது. குளிர்பானங்கள், ஜூஸ்கள் போன்றவற்றுக்குப் பதிலாக சூப், மூலிகை சாறு, கசாயம் போன்றவற்றை மக்கள் குடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போதுள்ள சூழ்நிலையில் வெந்நீர் தொண்டைக்கு இதமளிப்பதுடன், பாதுகாப்பு நடைமுறையாகவும் பார்க்கப்படுகிறது.