குழந்தைகளுக்கு பள்ளி பாடத்துடன், வாழ்க்கை பாடமும் அவசியம்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பள்ளி பாடத்துடன் வாழ்க்கை பாடத்தையும் சிறுவயது முதலே கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமானது. விளையாட்டுடன் தொடர்புபடுத்தியே வாழ்வியலை கற்றுக்கொடுக்கலாம். பொதுவாகவே குழந்தைகள் தண்ணீரை அதிகம் வீணாக்குவார்கள். தண்ணீரில் விளையாடுவது அவர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். அதை வீணாக செலவிடக்கூடாது என்பதை விளையாட்டு மனநிலையில் இருந்தே அவர்களுக்கு புரியவைக்கலாம்.

தினமும் வீட்டில் எவ்வளவு தண்ணீர் செலவிடப்படுகிறது. தேவையில்லாத விஷயங்களுக்கு எவ்வளவு வீணாகிறது என்பதை அவர்களை கொண்டே கணக்கிட வைக்கலாம். உதாரணமாக குடும்ப உறுப்பினர்கள் எவ்வளவு நேரம் குளிக்கிறார்கள். எத்தனை முறை கழிவறையை பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு முறையும் எவ்வளவு தண்ணீர் செலவிடுகிறார்கள் என்பதை குழந்தைகளை கொண்டு குறிப்பெடுக்க சொல்லலாம். ஒவ்வொரு நாளும் எவ்வளவு தண்ணீர் செலவிடுகிறார்கள்? முந்தைய நாளை விட அதிகமாக செலவிடுகிறார்களா? குறைத்துக்கொள்கிறார்களா? என்பதை குறிப்பெடுக்க சொல்லலாம். அதன் மூலம் குடும்பத்தினர் வீணாக தண்ணீர் செலவிடுவதை தவிர்க்க முடியும்.

வீட்டு தோட்ட செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல், காரை கழுவுதல் போன்ற வேலைகளில் குழந்தைகளை ஈடுபட வைக்கலாம். தண்ணீர் பயன்பாடு கொண்ட வேலை என்பதால் ஆர்வமாக ஈடுபடுவார்கள். அதன் மூலம் வீணாக அதிக தண்ணீர் செலவிடும் பழக்கத்தையும் கைவிட வைத்துவிடலாம். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு ஊக்கப்படுத்துவது போலவே, மழைநீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். மழை நீரை சேமிப்பதால் என்னென்ன நன்மைகளை அனுபவிக்கலாம் என்பதை விளக்கி புரியவைக்கலாம்.

வீட்டு தோட்டத்தில் செடிகள் வளர்க்கும் பணியிலும் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். அது அவர்களுக்கு படிப்புடன் கூடிய அனுபவக்கல்வியாகவும் அமையும். விதையை மண்ணில் ஊன்றுவது, அதற்கு தண்ணீர் ஊற்றுவது, அது செடியாக வளர்வது போன்ற நடைமுறைகளை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பாகவும் அமையும். செடி வளர்ப்பு, பராமரிப்பு போன்றவை குழந்தைகளுக்கு சிறந்த பொழுதுபோக்காகவும் மாறும்.

பொதுவாக குழந்தைகள் சாப்பிடும்போது காய்கறிகளை ஒதுக்கி வைப்பார்கள். சமையலுக்கு காய்கறிகள் நறுக்கும்போது குழந்தைகளை அருகில் அமர்த்தி ஒவ்வொரு காய்கறிகள் பற்றியும், அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துகள், அவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் விளக்கி புரியவைக்கலாம். அதன்மூலம் படிப்படியாக காய்கறிகளை ஒதுக்கி வைக்கும் சுபாவத்தை குறைத்துவிடலாம். சின்ன சின்ன சமையல் வேலைகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். சாப்பிட்ட தட்டு, அவர்கள் உபயோகிக்கும் பொருட்களை கழுவுவதற்கும் பழக்கப்படுத்தலாம்.

துரித உணவுகள், இனிப்பு பலகாரங்களை குழந்தைகள் விரும்பி சுவைப்பார்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் ருசிப்பார்கள். ஒருவாரம் முழுவதும் அப்படிப்பட்ட உணவுகளை எவ்வளவு உட்கொள்கிறார்கள் என்பதை அவர்களையே குறிப்பெடுக்க சொல்லலாம். அவற்றின் தீமைகளை விளக்கி புரியவைத்து மறுவாரம் அவற்றை சாப்பிடும் அளவை குறைக்க வைக்கலாம். நாளடைவில் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை படிப்படியாக புறக்கணிக்க பழகிவிடுவார்கள்.

பிளாஸ்டிக் பாட்டில்கள், பழைய காலணிகள், அட்டை பெட்டிகள் உள்பட வீட்டில் வீணாகும் பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்கலாம். இணையதளங்களில் மறுசுழற்சி பொருட்களைக்கொண்டு எப்படியெல்லாம் அழகழகான பொருட்களை தயார் செய்யலாம் என்பது பற்றிய வீடியோக்கள் ஏராளம் இருக்கின் றன. அவற்றை பார்வையிட வைத்து அதனுடன் அவர்களின் கற்பனை திறனையும் புகுத்தி மாறுபட்ட கலை பொருட்களை தயார் செய்வதற்கு பழக்கலாம். இந்த வழக்கம் அவர்களை சிறந்த கைவினை கலைஞர்களாக மாற்றும். வளரும்போது தேவையற்ற செயல்களில் கவனம் செலுத்துவதையும் தவிர்க்க உதவும். 

Related Posts

Leave a Comment

Translate »