கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பணப் பற்றாக்குறை ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. கைநிறைய பணத்தைவைத்துக்கொண்டு மனம் குளிர செலவு செய்துகொண்டிருந்த குடும்பத்தலைவிகள் இப்போது பண கஷ்டத்தில் கைகளை பிசைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவான கோஷம் ஒன்று இப்போது நாடு முழுவதும் எழும்பியிருக்கிறது. ‘சமையல் அறையில் இருந்து வெளியே வாருங்கள்.. புதிய தொழில் தொடங்குங்கள்’ என்பதுதான் அந்த கோஷம். உழைக்கும் ஆர்வமும், சுறுசுறுப்பும் கொண்ட பெண்கள் சிந்தித்து இந்த புதிய தொழில்களை தொடங்க முன்வரலாம்!
1. சாக்லேட் மேக்கிங்: தற்போது ஆன்லைனில் சாக்லேட் மேக்கிங் மற்றும் கேக் மேக்கிங் வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதில் கலந்துகொண்டு குறிப்பிட்ட நாட்கள் பயிற்சி எடுத்தால் வீட்டில் இருந்தே சாக்லேட், கேக் போன்றவைகளை தயார்செய்து அக்கம்பக்கத்தினருக்கு விற்பனை செய்யலாம். இது பெண்களுக்கு ஏற்ற தொழில்.
2. வேர்க்கடலை மிட்டாய்: கொரோனாவால் மக்களிடம் இப்போது உணவு பற்றிய விழிப்புணர்வு உருவாகியிருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திமிக்க சிறந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்கிறார்கள். அந்த வகையில் வேர்க்கடலை மிட்டாய் மற்றும் எள்ளு உருண்டைகளுக்கு இப்போது மவுசு அதிகரித்திருப்பதோடு, பற்றாக்குறையும் நீடித்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இந்த இருவகை உணவுப் பொருட்களை எளிதாக வீட்டில் இருந்தே தயார் செய்து விற்பனை செய்யலாம். முதலில் குறைந்த அளவில் தயார் செய்து உங்கள் தெருவில் இருப்பவர்களுக்கு வழங்குங்கள். பின்பு படிப்படியாக இந்த தொழிலில் வளர்ச்சிபெறலாம்.
3. தேங்காய் சிப்ஸ்: இது அதிக லாபம் தரும் தொழிலாக இருக்கிறது. ஒன்றரை லட்சம் ரூபாய் செலவிட்டால் இந்த தொழிலுக்கு தேவையான கருவிகள் கிடைக்கும். உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் தேங்காய் சிப்ஸ்க்கு அதிக தேவை இருக்கிறது. 25 சதவீதத்திற்கு குறையாமல் இதில் லாபம் சம்பாதிக்க முடியும்.
4. ஐஸ் கியூப் தயாரித்தல்: வீட்டில் இருந்தபடியே ஐஸ் கியூப் தயார் செய்து விற்பனை செய்யலாம். இதற்கு ஒரு பிரீசர் போதுமானது. 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் போதும். வீட்டில் இருக்கும் பிரீசரை பயன்படுத்தியும் சிறிய அளவில் இந்த தொழிலை தொடங்கலாம்.
5. பாக்கெட் பிரைடு சிக்கன்: தற்போது ‘ரெடி டூ ஈட்’ உணவுகளை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். கோழி இறைச்சியை வாங்கி வீட்டு சமையல் அறையிலே சுவையாக பொரித்து ‘வீட்டு தயாரிப்பு’ என்று கூறி அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விற்பனை செய்யலாம். முதலில் சிறிய அளவில் இந்த தொழிலில் கால்பதித்தால் பின்பு படிப்படியாக முன்னேறி ‘கேட்டரிங்’ தொழிலில் இறங்கி விடலாம்.
6. ஆன்லைன் லஞ்ச்: ருசியாக சமைக்க தெரிந்தவர்களுக்கு ஏற்ற தொழில் இது. பிரபலமான ஓட்டல்களில் உள்ள உணவுகள் கூட மக்களுக்கு அலுப்புத்தர தொடங்கியிருக்கும் இந்த சூழலில், வீட்டுச் சாப்பாட்டினை விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதால், இந்த தொழிலில் இறங்குபவர்களுக்கு நிறைய வருமானம் கிடைக்கும். முதலில் உங்கள் வீட்டின் அருகிலும், பக்கத்திலுள்ள சந்திப்பிலும் ஒரு சிறிய போர்டு வைத்து அதில் உங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடுங்கள். தொடக்கத்தில் ஆர்டர் குறைவாக கிடைத்தாலும் சுவையான, ஆரோக்கியமான உணவை உற்சாகமாக தயார்செய்துகொடுங்கள். பின்பு பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் போன்றவைகளையும் பயன்படுத்தி தொழிலை வளர்க்கலாம்.
7. மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ்: கிழங்கின் தோலை நீக்கிவிட்டு நன்றாக கழுவி மெஷின் உதவியோடு சிப்ஸ் தயாரித்து, வறுத்தெடுக்கலாம். கவர்ச்சிகரமாக பேக்கிங் செய் தால் மக்கள் விரும்பி வாங்குவார்கள். தரமான எண்ணெய்யை பயன்படுத்தி ஆரோக்கியமாக இதனை தயாரித்தால் அதிகமாக விற்பனையாகும். இதில் அதிக லாபமும் கிடைக்கும்.