பயன்படுத்திய முக கவசங்கள், கையுறைகளை அகற்றுவது எப்படி?

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிற காலகட்டத்தில் பொது மக்களும் சரி, கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களும் சரி, அவர்கள் பயன்படுத்திய முக கவசங்கள், கையுறைகள், சுய பாதுகாப்பு உடைகளை பத்திரமாக அகற்றுவது மிகவும் முக்கியமானது.

கண்ட கண்ட இடத்தில் அவற்றை அகற்றி வீசுவது ஆபத்தில் கொண்டு போய் விட்டு விட வாய்ப்பு ஆகி விடும். இவற்றை பயன்படுத்தியபின்னர் எப்படி ஒழித்துக்கட்டுவது என்பது குறித்த வழிமுறைகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

வீடுகளில் பயன்படுத்தும் முக கவசங்கள்…

* பொதுவாக மக்கள் வீடுகளில் பயன்படுத்துகிற முக கவசங்கள், கையுறைகள் ஆகியவற்றின் (தொற்று இருந்தாலும், இல்லாவிட்டாலும்) மறுபயன்பாட்டை தடுக்க அவற்றை வெட்டி, ஒரு காகிதப்பையில் 72 மணி நேரம் வைத்து, பின்னர் உலர்ந்த திடக்கழிவுகளை ஒழித்துக்கட்டுவதுபோல அகற்ற வேண்டும்.

* வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்றவற்றில் பொதுமக்களிடம் இருந்து நிராகரிக்கப்பட்ட பி.பி.இ. என்னும் சுய பாதுகாப்பு உடைகளை தனியாக ஒரு குப்பைத்தொட்டியில் 3 நாட்கள் போட்டு வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு அவற்றை வெட்டி துண்டுகளாக்கி உலர்ந்த பொது திடக்கழிவுகள் போன்று அகற்றி விட வேண்டும்.

தொற்றுக்கு ஆளானவர்களின் பொருட்கள்…

* கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் மிச்சம் வைக்கிற உணவு மற்றும் வெற்று தண்ணீர் பாட்டில்களை உயிரிகழிவு பொருட்களுடன் சேகரிக்கக்கூடாது அவற்றை அவர்கள் பயன்படுத்துகிற பிற பொருட்களுடன் பாதுகாப்பாக பைகளில் கட்டித்தான், கழிவு பொருட்கள் சேகரிப்பவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பொதுவான திடக்கழிவு பொருட்களுக்கு மஞ்சள் நிற பையை பயன்படுத்த கூடாது. அது கொரோனா வைரஸ் உயிர் மருத்துவ கழிவுகளுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது.

* கழிவுகள் உருவாவதை தவிர்க்க முடிந்தவரை உணவுகளை வழங்குவதற்கு அகற்ற தேவையற்ற (நான்-டிஸ்பொஸபுள்) பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். பொருத்தமான முன்எச்சரிக்கையுடன் அவற்றை பயன்படுத்த வேண்டும், சுத்தம் செய்யப்பட வேண்டும், ஆஸ்பத்திரி வழிமுறைகள்படி கிருமிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

* ரெயில் பெட்டிகள் போன்ற தற்காலிக சுகாதார மையம் உள்ளிட்ட தனிமை வார்டுகளில், கழிவுகளை பிரித்து பராமரிக்க ஏதுவாக வெவ்வேறு வர்ண குப்பைத்தொட்டிகளை வைத்திருக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று கழிவு பொருட்களை அதற்கான பிரத்யேக குப்பைத்தொட்டியில் போட வேண்டும். கழிவுகளை அகற்றுவதற்கு இரட்டை மடிப்புள்ள பையை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் குப்பைத்தொட்டியில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.

* கொரோனா தனிமை வார்டுகளில் பயன்படுத்திய முகத்தை முழுமையாக மறைக்கிற பேஸ் ஷீல்டு, சுய பாதுகாப்பு உடைகள், கருவிகள் ஆகியவற்றை சிவப்பு நிற பையில் போட்டு வைக்க வேண்டும். அங்கு பயன்படுத்திய 3 மடிப்பு முக கவசங்கள், தலை மூடிகள், காலணி மூடிகள், லினன் கவுன் போன்றவற்றை மஞ்சள் நிற பையில் போட்டு வைக்க வேண்டும். கொரோனா பாதித்தவர்கள் பயன்படுத்திய முக கவசங்கள், திசு பேப்பர்கள், கழிப்பறை பொருட்கள் போன்றவை உயிரி மருத்துவ கழிவுகள் ஆகும். அவற்றை மஞ்சள் நிற பையில் போட்டு அகற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment

Translate »