டீன்-ஏஜ் பெண்கள் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் பொழுதை போக்குவதால், ஆண்களை விட மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவதாக ஒரு ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. அந்த ஆய்வில் 40 சதவீத இளம்பெண்கள், சமூக வலைத்தளங்களில் ஆண்களை விட அதிக நேரம் செலவிடுவதாகவும், அப்படி தாங்கள் பகிரும் தகவல்களுக்கு லைக்கோ, கருத்துகளோ யாரும் பதிவிடவில்லை என்றால் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த மன அழுத்தம் காரணமாக, சமூக வலைத்தளங்களில், அவர்கள் மன அழுத்தத்தை குறிப்பிடும் ‘எமோஜி’ குறியீடுகளை அதிகம் பகிர்வதும் தெரியவந்திருக்கிறது. வாட்ஸ் ஆப்பில் தாங்கள் பதிவிடும் ஸ்டேட்டஸ்களை யாரும் பார்க்கவில்லை என்றாலும், பெண்களின் மனநிலை இப்படி கவலைக்குரியதாக மாறுவதாக சொல்கிறார்கள்.
லண்டன் பல்கலைக்கழகம் மேற்கொண்ட இந்த ஆய்வில், 11 ஆயிரம் டீன்-ஏஜ் பெண்கள் பங்கேற்றிருக்கிறார்கள். ஐந்தில் இரண்டு டீன்-ஏஜ் பெண்கள் தினமும் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக சமூகவலைத்தளங்களில் தங்கள் நேரத்தை செலவிடுகிறார்கள். ஆனால் ஆண்களில் ஐந்தில் ஒருவர்தான் சமூக வலைத்தளத்தை பொழுதுபோக்குக்காக தேர்ந்தெடுப்பது தெரியவந்துள்ளது.
ஆய்வை நடத்திய குழுவுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் வோன் ஹெல்லி இதுபற்றி கூறும்போது, “டீன்-ஏஜ் வயது ஆண்களை காட்டிலும் பெண்களுக்குத்தான் மன அழுத்தம் மற்றும் அதை சார்ந்த அறிகுறிகள் அதிகமாக காணப்படுகிறது. தினமும் அதிக நேரத்தை சமூக வலைத் தளங்களில் செலவிடுவதால் படிப்படியாக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். மன அழுத்தமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது” என்கிறார்.
மன அழுத்தம் மட்டுமின்றி தூக்கமின்மைக்கும் சமூக வலைத்தளங்கள் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக 14 வயதுக்குட்பட்டவர்கள் அதிக அளவில் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். அதிலும் 40 சதவீதம் பெண்கள் தான் என்ற ஆய்வின் முடிவு அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் இருக்கிறது. அதே நேரம் சமூக வலைதளங்களால் தூக்கமின்றி தவிக்கும் ஆண்களின் எண்ணிக்கை வெறும் 28 சதவீதம் தான் என்பதும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செல்போனை பக்கத்தில் வைத்துகொண்டே தூங்குவதால் சமூக வலைத்தளங்களில் இருந்து ஏதேனும் தகவல்கள் பரிமாறப்பட்டால் உடனே எழுந்துவிடுகிறார்கள். பின்பு அதிலேயே நேரத்தை செலவிடுவது தூக்கத்தை தாமதப்படுத்துகிறது. இதனால் படிப்பில் கவனச் சிதறல், மன அழுத்தம் போன்ற பாதிப்புகளும் அதிகரிக்கின்றன. இரவில் எந்த நேரமாக இருந்தாலும் தகவல் பகிர்வதும், ஸ்டேட்டஸ் போடுவதும் தூக்கத்திற்கு தடை போடுவதாக அந்த ஆய்வு முடிவு குறிப்பிடுகிறது.
தாங்கள் பதிவிடும் புகைப்படங்கள், ஸ்டேட்டஸ்களுக்கு யாரும் கருத்து பகிரவில்லை என்றால், தாங்கள் அழகாக இல்லையோ என்கிற வருத்தம் பெண்களிடம் தலைதூக்குகிறது. இதனால் அவர்கள் மனச்சோர்வு அடைகிறார்கள். எந்த விஷயத்திலும் நாட்டம் கொள்ளாமல் இருக்கிறார்கள். அது மன அழுத்தமாக மாறி தற்கொலை முயற்சியை தூண்டுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே செல்போன் உபயோகிப்பதையும், சமூக வலைத் தளங்களில் நேரத்தை செலவழிப்பதையும் குறைத்துக்கொள்வதே நம் வாழ்க்கைக்கு நல்லது.