மனிதனுக்கு என்று தனி அடையாளத்தை தருவது பேச்சுத் திறன்தான். அதை தெளிவாக உச்சரிக்க பற்கள் உதவுகிறது. பற்களின் அணிவகுப்பை வெள்ளைச் சிப்பாய்களின் அணிவகுப்பு என்று கூறலாம். சத்தான உணவை அரைத்து, சக்தியை உடல் உறிஞ்சிக்கொள்ள உதவுவதுதான் இந்த வெண் சிப்பாய்களின் வேலை.
பற்களில் பால் பற்கள், நிரந்தர பற்கள் என இரண்டு வகை உண்டு. பால் பற்கள் விழுந்தபின் பற்கள் முளைக்கும் என்றாலும், பால் பற்களைப் பேணிக் காப்பது முக்கியம். அதுவே பின்னால் உருவாகப்போகும் நிரந்தரப் பற்களுக்கு அடிப்படை.
சிறு குழந்தைகளுக்கு பற்களை மென்மையாகவும், அரை வட்டமாகவும் தேய்த்து விடுவது அவசியம். குழந்தைகள் இதை பழகிக் கொண்டபின் அவர்களாகவே தேய்த்துக்கொள்ளச் சொல்ல வேண்டும்.
பெரியவர்கள் பல் தேய்க்கிறேன் என்று அழுத்தமாகத் தேய், தேய் என்று தேய்த்துவிடுவார்கள். இதனால் ஐம்பது வயதுக்குள் அரை பல்லுக்கு மேல் தேய்ந்து போய்விடும். பின்னர் எது சாப்பிட்டாலும் கூசும். முன்னும், பின்னும், உள்ளும், புறமும் மேலும் கீழுமாகவே பல்லைத் துலக்க வேண்டும்.
சிறு வயதில் இருந்தே பற்களை பாதுகாக்க குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இரவில் சர்க்கரை போட்ட பாலைக் குடித்துவிட்டு அப்படியே தூங்கச் செல்லக் கூடாது. வாயில் தங்கிவிடும்.
மீதமுள்ள பாலின் சர்க்கரை பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும். பற்கள் சொத்தை ஆவதும் இதனால் நடைபெறும். இதைத் தவிர்க்க, தூங்கச் செல்லும் முன் பல் துலக்க வேண்டும். இந்தப் பழக்கத்தால் பல் சொத்தையைப் பெரும்பாலும் தவிர்த்துவிடலாம்.
‘ஐஸ் கிரீம்’, ‘ஜில்’ தண்ணீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்ளக்கூடாது. அப்படியே சாப்பிட்டாலும் பல்லில் படாமல் கவனமாக சாப்பிட வேண்டும். எலுமிச்சையை அதிகம் உட்கொண்டாலும், பல்லின் மேல் பூச்சாக உள்ள ‘எனாமல்’ பாதிக்கப்படும். இதனால் பற் கூச்சம் ஏற்படும். சூடான உணவு உண்ட உடன் ஜில்‘ உணவு சாப்பிடுவது பல்லுக்கு பெருங்கேடு. வாயில், குறிப்பாக ஈறில் ஏற்படும் நோய்த்தொற்று வேறு பல பிரச்சினைகளைக் கொண்டு வரலாம். அதில் இதயக் கோளாறுகளும் மாரடைப்பும் அடக்கம். எனவே, ஈறு, பற்களின் ஆரோக்கியம் பேணப்படும் பட்சத்தில், அது நிச்சயமாக ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் அடிப்படையாக இருக்கும்.