சிறுகுழந்தைகளும் கொரோனாவை பரப்பும் ஆபத்து இருக்கிறது

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

வாஷிங்டன் :

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, இப்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.75 கோடி பேரின் உடல்களில் புகுந்து விட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக உலகளவில் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்காவின் ஆன் அண்ட் ராபர்ட் எச்.லூரி குழந்தைகள் ஆஸ்பத்திரியின் விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு நடத்தி வந்தனர்.

இந்த ஆய்வின் முடிவுகள், ஜமா பீடியாட்ரிக்ஸ் பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள மிக முக்கிய விஷயம், கொரோனா வைரஸ் தொற்றை பெரியவர்கள் போலவே சிறுகுழந்தைகளும் பரப்புவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்பதுதான்.

இதுபற்றி விஞ்ஞானிகள்கூறும்போது, “எங்கள் ஆய்வுகள், 5 வயதுக்கு உட்பட்ட சிறுகுழந்தைகளுக்கு லேசானது முதல் மிதமானது வரை கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறபோது, பெரியவர்களுடன் ஒப்பிடுகையில், இவர்களின் மூக்கில் கொரோனா வைரஸ் மரபணு பொருள் அதிகமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆய்வுக்குழுவின் தலைவரும், குழந்தை தொற்று நோய் நிபுணருமான டாக்டர் டெய்லர் ஹீல்ட் சார்ஜென்ட் கருத்து தெரிவிக்கையில், “இது பெரியவர்களிடம் காணப்படுவதை விட குழந்தைகளால் வைரஸ் அதிகமாக பரவலாம் என்று காட்டுகிறது. இது முக்கியமான பொது சுகாதார தாக்கங்களை கொண்டுள்ளது. குறிப்பாக பள்ளிக்கூடங்களை மீண்டும் திறப்பதற்கான பாதுகாப்பு குறித்த விவாதங்களின்போது கவனிக்கப்பட வேண்டியதாகும்” என்று கூறினார்.

இந்த ஆய்வின்போது, அறிகுறிகள் தோன்றிய முதல் வாரத்துக்குள் லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்புள்ளவர்களை ஆராய்ந்துள்ளனர்.

5 வயதுக்கு குறைவான குழந்தைகள், 5 வயது முதல் 17 வயது வரையிலானவர்கள், 18 முதல் 65 வயது வரையிலான பெரியவர்கள் என 3 குழுவினரின் மூக்கில் காணப்பட்ட கொரோனா வைரஸ் மரபணு பொருட்களின் அளவை ஒப்பிட்டனர்.

இது குறித்து டாக்டர் டெய்லர் ஹீல்ட் சார்ஜென்ட் கூறுகையில், “எங்கள் ஆய்வானது, சிறு குழந்தைகளும் பெரியவர்களைப்போலவே கொரோனா வைரஸ் தொற்றை பரப்புவதை நிரூபிப்பதற்காக நடத்தப்படவில்லை. ஆனால் அதற்கான சாத்தியம் உள்ளது. இந்த வைரஸ் பற்றி நாம் தொடர்ந்து கற்றுக்கொள்வதால் பரவுவதைக் குறைப்பதற்கான முயற்சிகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

இநத ஆய்வு, கொரோனா வைரஸ் மரபணு பொருட்களை கண்டறிவதற்குத்தான் நடத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறினர்.

தொடர்ந்து அவர்கள் கூறும்போது, “சிறு குழந்தைகள் கொரேனா வைரஸ் தொற்றினை பொதுமக்களிடையே பரப்புவதில் முக்கியமானவர்களாக உள்ளனர். குழந்தைகள் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றை கொண்டிருக்கிறபோது, தொற்றை பரப்புவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது” என்கிறார்கள்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறபோது, சிறு குழந்தைகளின் நடத்தை, பழக்க வழக்கம் மற்றும் பள்ளிகளில், பகல்நேர பராமரிப்பு மையங்களில் அவர்கள் ஆக்கிரமித்துள்ள நெருக்கமான பகுதிகள் கொரோனா வைரஸ் தொற்றை பரப்புவது பற்றிய கவலையை எழுப்புகின்றன; கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைக்கும்போது, நோய்த்தடுப்பு முயற்சிகளை குறிவைக்க இந்த குழந்தைகள் முக்கியமானவர்களாக இருப்பார்கள் என்பதுவும் விஞ்ஞானிகளின் கருத்தாக அமைந்துள்ளது.

பெரியவர்களைப் போலவே சிறு குழந்தைகளும் கொரோனா வைரஸ் தொற்றை பரப்புவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

Related Posts

Leave a Comment

Translate »