வெறுமனே, “இத்தனை ரூபாய் வாடகை. 5 மாதம் முன்பணம்“ என்று வாய் வார்த்தையில் இப்போது பேசி வீட்டை வாடகைக்குவிட முடியாது. 20 ரூபாய் முத்திரைத் தாளிட்ட பத்திரத்தில் இரு தரப்பும் வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது நடைமுறைக்கு வந்துவிட்டது. அதுபோன்ற ஒப்பந்தத்தில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்களின் பட்டியல் இது.
இரு தரப்பினரும் வயது, விலாசம், பான் எண் போன்றவற்றை குறிப்பிட வேண்டும். வாடகைதாரர் மாதச்சம்பள வேலையில் இருந்தால், நிறுவனம், பதவி இவற்றையும் குறிப்பது நலம். வாடகையை நெப்ட் வழியாகத்தான் அனுப்புகிறார்கள். அதற்குத் தேவையான விவரங்களைக் கொடுத்துவிடுங்கள். ஆனால் சில வீடுகளில், வாடகையை வயதான பெற்றோர் கணக்கில் வரவு வைக்க கோருவார்கள். இதுபோன்ற சமயத்தில், அக்ரிமென்டிலும் இதுதொடர்பான தெளிவான விளக்கங்கள் இருக்க வேண்டும்.
உங்களின் வீட்டில் என்னென்ன அறையில் என்னென்ன அறைக்கலன்கள் உள்ளன என்பது ஒப்பந்தத்தின் பட்டியலில் இடம்பெற வேண்டும். அவை யாவும் இயங்கும் நிலையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். வாடகைக்கு வீட்டை விடும் முன், சொத்து வரி, மின் கட்டணம் போன்றவற்றை குறித்த காலத்தில் செலுத்துங்கள்.
11 மாசத்துக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். வாடகை உயர்த்தப்படும் போன்ற வாசகங்கள் பொதுவாக ஒப்பந்தத்தில் இடம்பெறும். இவற்றைச் சில வாடகைதாரர்கள் மறுக்கலாம். விவாதித்து முடிவு எடுங்கள். வாடகைக்கு விட்ட பின்னர், ஏதாவது ஒரு சாக்கு வைத்துக் கொண்டு அடிக்கடி வீட்டைப் போய்ப் பார்ப்பது பண்பல்ல. வாடகைக்கு இருப்பவருக்கு தர்மசங்கடம் ஏற்படும். ஏதாவது சிக்கல் என்றால் மட்டும் வாடகைக்கு விட்ட வீட்டைக் கண்காணிப்பது நல்லது.
வீடு, குடித்தனத்துக்காகத்தான், தொழில் நோக்கத்துக்காக இல்லை என்பதை மிகத் தெளிவாக ஒப்பந்தத்தில் குறிப்பிடுங்கள். தையல், டியூஷன் போன்றவை செய்தொழிலில் வரும். ஆனால் ஜெராக்ஸ் மெஷின் வைத்துக் கொள்வது, துணிகள் வாங்கி விற்பது போன்றவை வியாபாரமாகக் கருதப்படும் வாய்ப்புகள் உள்ளன. திருமணம் ஆகாத மூன்று, நான்கு பேர் வீட்டில் சேர்ந்து தங்குகிறார்கள் என்றால், ஒப்பந்தத்தை யார் பேரில் போட வேண்டும். யார் பொறுப்பு என்பதை கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
வாடகைக்கான இடம் சற்று பெரியதாக இருந்தால், ஓர் அறையை மட்டும் உள் வாடகைக்கு விட வாய்ப்பு உண்டு. இதற்கான விதியும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும். காலம் வேகமாக மாறிவருகிறது. அடுத்த வீட்டில் இருப்பவர்கள்கூட யாரென்று தெரியாத நிலைமை இருந்து வருகிறது. எனவே புது நபருக்கு வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன்பு, எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்வது அவசியம்.