எலும்பு மூட்டு சிதைவு நோயால் ஏற்படும் குறைபாடுகளை தடுக்கும் வழிமுறைகள் குறித்து சோழமண்டலம் எலும்பியல் சங்க தலைவர் பேராசிரியர் டாக்டர் நீலகிருஷ்ணன், செயலாளர் டாக்டர் நடராஜன் ஆகியோர் கூறுகையில், இந்தியாவில் 2012-ம் ஆண்டு முதல் ஆகஸ்டு 4-ந் தேதி எலும்பு மூட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு எலும்பு மூட்டு சிதைவு நோயால் ஏற்படும் குறைபாடுகளை தவிர்ப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த இந்திய எலும்பியல் சங்கம் மற்றும் தமிழ்நாடு எலும்பியல் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மூட்டு சிதைவு என்பது முழங்கால், கணுக்கால், முதுகெலும்பு ஆகிய பகுதிகளில் சிதைவு மட்டுமின்றி, வலியையும் உண்டு பண்ணுகிறது. இதை தவிர்க்கும் வகையில் ஆகஸ்டு முதல் வாரத்தில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தும், மருத்துவமனைகளில் விளம்பர பதாகைகள் வைத்தும், பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
எலும்பு மூட்டு சிதைவு நோய் பாதிக்காமல் இருக்க அனைவரும் சராசரி உடல் எடையை பராமரிப்பது அவசியம். தினமும் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. போதுமான விட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ள ஆரோக்கியமான உணவு வகைகளை உண்பது, உடற்பயிற்சிகள் மூலம் தசைகளின் வலிமையை மேம்படுத்துவது, மூட்டுகளை அதிகமாகவும், தவறாகவும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவரிடம் சிகிச்சையும், ஆலோசனையும் பெற வேண்டும். விளையாட்டு மற்றும் பணிகளின்போது காயங்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் மூட்டு சிதைவு ஏற்படுவதை தவிர்க்க வழிவகை செய்யலாம். குறிப்பாக சுய மருத்துவம் மற்றும் நாட்டு மருத்துவத்தை தவிர்க்க வேண்டும் என்றனர்.