கொரோனா பரவலை தடுக்க உடற்பயிற்சி நிலையங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், ஜூன் மாதம் முதல் அவ்வப்போது பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி வருகிறது.

அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 29-ந் தேதி சில புதிய தளர்வுகளை அறிவித்தது. அதில் உடற்பயிற்சி (ஜிம்) மற்றும் யோகா பயிற்சி நிலையங்களை ஆகஸ்டு 5-ந் தேதி முதல் திறக்கலாம் என்று கூறி இருந்தது.

இந்த நிலையில், அங்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* நோய் கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள உடற்பயிற்சி நிலையங்கள், யோகா பயிற்சி நிலையங்களை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்க வேண்டும்.

* பயிற்சி நிலையங்களுக்கு வரும் ஒவ்வொரு நபரும் 4 சதுர மீட்டர் பரப்பளவை பயன்படுத்தும் வகையில் இடவசதி செய்து கொடுக்க வேண்டும். அதற்கேற்ப உபகரணங்களை மாற்றி அமைக்க வேண்டும்.

* நோய்த் தொற்று அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

* அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும். அனைவரும் ஒரே வாசல் வழியாக செல்ல மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

* கிருமி நாசினி திரவம் பயன்படுத்த வேண்டும்.

* 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு குறைவான குழந்தைகள், கர்ப்பிணிகள், நாள்பட்ட நோய் உள்ளவர்களை உடற்பயிற்சி கூடத்துக்குள் அனுமதிக்கக்கூடாது.

* பயிற்சி நிலையத்தின் உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் வருகை தருவோர் அனைவரும் தங்கள் செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* உடற்பயிற்சி கருவிகளில் பயிற்சி மேற்கொள்ளும் முன், ஆக்சிமீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவை பரிசோதிக்க வேண்டும். ஆக்சிஜன் அளவு 95 சதவீதத்துக்கு குறைவாக இருப்பவர்களை பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது. அப்படி யாருக்காவது ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தால், அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

* நீச்சல் குளங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். நீராவி குளியலுக்கு அனுமதி கிடையாது.

* சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வெவ்வேறு நேரங்களில் பயிற்சிக்கு வருமாறு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தலாம்.

* யோகா பயிற்சிக்கு வருபவர்கள் கூடத்துக்கு வெளியிலேயே காலணிகளை விட்டுவிட வேண்டும்.

* உறுப்பினர்கள் விரும்பினால், அவர்களுக்கு தனித்தனியாக நேரம் ஒதுக்கலாம்.

* கூடத்தில் குளிர்சாதன வசதியை பயன்படுத்தும்பட்சத்தில் வெப்ப நிலை 24 முதல் 30 டிகிரி செல்சியசுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

* வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* நெரிசலின்றி வந்து செல்வதற்கு வசதியாக ஒரு யோகா வகுப்புக்கும் அடுத்த யோகா வகுப்புக்கும் இடையே 15 முதல் 30 நிமிட இடைவெளி இருக்க வேண்டும்.

மேற்கண்ட அம்சங்கள் அதில் இடம் பெற்று உள்ளன.

Related Posts

Leave a Comment

Translate »