சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை…

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நிலத்தில் முதலீடு செய்வதுதான் இன்றைக்கு நல்ல முதலீடாக கருதப்படுகிறது. ஆனால், அசையாத இந்த சொத்தை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. சொத்தின் உரிமையாளர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அந்த சொத்தை நேரடியாக வாங்க முடியாது. நீதிமன்றத்தின் அனுமதி கட்டாயம் தேவை.

அதிகாரம் பெற்ற முகவரிடம் (பவர்) சொத்து வாங்குவதாக இருந்தால், நிலத்தை அல்லது சொத்தை விற்பதற்கான அதிகாரம் அவருக்கு இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். சில நேரம் விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மட்டும் ஒருவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கலாம். எனவே, ஆவணத்தைக் கவனமாகப் படிக்கவும். அதிகாரம் கொடுத்தவர் உயிருடன் இல்லையென்றால், அந்த அதிகாரம் செல்லுபடியாகாது.

நிலத்தின் உரிமையாளர் உயிருடன் இல்லையென்றால், அனைத்து வாரிசுதாரர்களின் சம்மதத்துடன் சொத்து விற்கப்படுகிறதா என்று பார்க்கவும். வாரிசுச் சான்றிதழ் மூலம் யாரெல்லாம் வாரிசுகள் என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். வாரிசுதாரர்களில், சொத்துக்கு உரிமையுள்ளவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், உயர் நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் மூலம்தான் சொத்து பரிமாற்றம் நிகழ வேண்டும்.

எப்போதும் சொத்தின் மூல ஆவணத்தை மட்டுமே நம்ப வேண்டும். எனவே, மூல ஆவணத்தை பார்க்காமல் முன்பணம் செலுத்த வேண்டாம். மூல ஆவணம் இல்லை என்றால் சொத்து அடமானத்தில் வைக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது, மூல ஆவணம் அடமானத்தில் இருந்தாலும்கூட, நீங்கள் வாங்கும் வீட்டின் மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி, வரைபட அனுமதி உள்பட அனைத்து விதமான அனுமதிகளையும் சரிபார்க்க வேண்டும்.

அனுமதி பெற்ற வரைபடத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருந்தால், பின்னாளில் பிரச்சினைகள் எழும். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அரையடி அதிகம் இருந்தாலும் பிரச்சினைதான். பத்திரப்பதிவுக்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லது. விற்பனை ஒப்பந்தத்தில் முன்பணம், விற்பனைத்தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தையும் குறிப்பிட வேண்டும். அதேபோல வில்லங்கச்சான்றிதழ் 13 ஆண்டுகளுக்கு போதுமென்றாலும், 30 ஆண்டுகளுக்கு எடுத்துக் கொள்வது உத்தமம்.

பொதுவாக ஒரு சொத்து வாங்குவதற்கு முன், விற்பனை ஆவணம், மூல ஆவணங்கள், வில்லங்கச் சான்றிதழ், வாரிசு சான்றிதல், பட்டா, சொத்து வரி ரசீதுகள் ஆகியவற்றை உரிமையாளரிடம் இருந்து பெற்று சரிபார்க்க வேண்டும். சில சொத்துகள் மற்றும் உரிமையாளரை பொருத்து, கூடுதல் ஆவணங்கள் தேவைப்படலாம்.

Related Posts

Leave a Comment

Translate »