குழந்தைகள் எப்போது அழும் என்று யாருக்கும் தெரியாது. ஏன் அழுகின்றன என்ற காரணமும் பலருக்கு புரியாது. அதனால் சில நேரங்களில் குழந்தையின் அழுகைக்கான காரணம் தெரியாமல் அம்மாக்களே தவித்துப்போவார்கள். பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டும் குழந்தை அழுகையை நிறுத்தாதபோது, என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய் பரிசோதிக்கும் சூழ்நிலைகூட ஏற்பட்டுவிடும்.
ஆனால், பதற்றமடையாமல் குழந்தையின் அழுகையை நிதானமாக கவனித்தால், தாயாலே காரணத்தை எளிதாக கண்டறிந்துவிட முடியும். குழந் தைக்கு அழுகைதான் மொழி. தகவல் தொடர்புக்கான மாற்றுவழி எதுவும் அதற்கு தெரியாததால், தனக்கு தெரிந்த அழுகை மொழி மூலமே தனது பசி, வலி, அசவுகரியம், நோய் போன்ற பலவற்றையும் குழந்தை வெளிப்படுத்தும். உற்றுக் கவனித்தால் அழுகை மூலம் குழந்தை வலியுறுத்தும் காரணத்தைக் கண்டறிந்து விடலாம்.
குழந்தையின் அழுகைக்கு பெரும்பாலும் பசிதான் காரணமாக இருக்கிறது. அழுகையோடு கை விரலை வாய்க்குள் கொண்டு செல்வது, பால்குடிப்பதுபோல் நாக்கை துழாவுவது போன்றவைகளை செய்தால் அப்படியே குழந்தையை அள்ளி எடுத்து மார்போடு அணைத்து பால் புகட்டினால் போதும், குழந்தை பசியாறி அழுகையை நிறுத்திவிடும்.
போதுமான அளவு குழந்தைகள் தூங்காவிட்டாலும் அழுதுகொண்டிருக்கும். அப் போது தாலாட்டு பாடியபடி லேசாக தட்டிக்கொடுத்தால் தூங்கிவிடும். எழுந்து நடந்து தோளில் போட்டு தட்டிக்கொடுத்தாலும் உடனே தூங்கும். தொட்டிலில் இட்டு பாடிக்கொண்டே ஆட்டினாலும் சீக்கிரமாக தூக்க நிலைக்கு சென்றுவிடும்.
சிறுநீர் கழித்து ‘டயாபர்’ நன்றாக நனைந்து தொங்கி அசவுகரியத்தை ஏற்படுத்தினாலும் அழும். உடனடியாக அந்த டயாபரை மாற்றிவிட்டால் அழுகை நின்றுபோகும்.
பால் குடித்து முடிந்ததும் வாயு மேல்எழும்பி வரும் தொந்தரவாலும் குழந்தைகள் அழும். பால் குடித்த உடனே குழந்தையை கீழே கிடத்தாமல், தோளில் படுக்கவைத்து தட்டிக்கொடுத்தால் ஏப்பம் வெளியேறி அழுகை நீங்கிவிடும்.
குழந்தை நிறுத்தாமல் தொடர்ந்து அழுதால், வாயுவால் வயிற்றுவலி ஏற்பட்டிருக்கும் என்பதை உணர்ந்துகொள்ளலாம். அப்போது வாயுத் தொந்தரவைப் போக்கும் மருந்தை குழந்தைக்கு புகட்டவேண்டியதிருக்கும். அதை கொடுத்த பின்பும் அழுகை நீடித்தால், மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறவேண்டும்.
பற்கள் வெளிப்படும்போது சில குழந்தைகள் அசவுகரியத்தை உணரும். அதனாலும் அழுவதுண்டு. நான்கு மாதத்தில் இருந்தே பற்கள் முளைக்கத் தொடங்கும். அப்போது கையில் கிடைப்பதை எல்லாம் வாய்க்கு கொண்டுசென்று கடிக்க முயற்சிக்கும். இந்த தருணத்தில் சுத்தமான காட்டன் துணியால் குழந்தையின் ஈறுகளை துடைத்துவிட்டுக் கொண்டிருக்கவேண்டும். குழந்தைகள் கடிப்பதற்கு ஏற்ற பொம்மைகளையும் வாங்கித்தருவது நல்லது.
மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு குழந்தையை கொண்டுசெல்லும்போது திடீரென்று அழுதால் அந்த சூழ்நிலை குழந்தைக்கு பிடிக்கவில்லை என்பதை உணருங்கள். போதுமான அளவு காற்று கிடைக்காமல் இருக்கலாம். அதிகமான சத்தம் இருந்துகொண்டிருக்கலாம். அதனால் குழந்தை அழும்போது முடிந்த அளவு சீக்கிரமாக அந்த பகுதியில் இருந்து வெளியேறிவிடுங்கள்.
குழந்தை தனிமையை உணர்ந்தாலும் திடீரென்று அழும். அது விளையாடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி தாய் வெளியேறிவிட்டால் உடனே அழும். தாய் அருகில் இருப்பதை உணர்த்தினால் அந்த அழுகை நின்றுவிடும். தொடுதலாலோ, சத்தத்தினாலோ தான் அருகில் இருப்பதை குழந்தைகளுக்கு தாய்மார்கள் உணர்த்திக்கொண்டே இருக்கவேண்டும்.
தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதையும் குழந்தை அழுகையால்தான் வெளிப்படுத்தும். எவ்வளவு ஆறுதல்படுத்தியும் விடாமல் தொடர்ச்சியாக, உச்சமான சத்தத்துடன் குழந்தை அழுதுகொண்டிருந்தால் நோயால் குழந்தைக்கு அசவுகரியம் ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். காய்ச்சல், வாந்தி, எடைகுறைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும் குழந்தையை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தவேண்டும்.