விவாகரத்து சுமூகமாக அமைய அது இரு தரப்பினருக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் விதிகளை அறிந்திருக்க வேண்டும். சட்டப்படி உங்கள் உரிமைகள் எவை மற்றும் அவற்றை கோருவதற்கான வழிகள் பற்றி அறிந்திருந்தால் விவாகரத்து போன்ற சிக்கலான நேரங்களில் பணம் பற்றி பேசுவது எளிதாக அமையும்.
ஒருவர் தனது துணைக்கு சட்டப்படி வழங்க கடமைப்பட்டுள்ள நிதி ஆதரவைத்தான் ஜீவனாம்சம் என்று அழைக்கிறார்கள். பிரிவதற்கு முன்பாகவும் தரப்படலாம் அல்லது பிரிந்த பிறகு பராமரிப்பு செலவுக்காகவும் பெறப்படலாம். இதைப் பெறும் உரிமை என்பது திருமண மற்றும் விவகாரத்து சட்டங்களின் முக்கிய அம்சமாகும்.
வேலைக்கு செல்வதால் ஜீவனாம் சம் பெற முடியாது என சொல்லி யாரேனும் ஏமாற்ற முயன்றால் அவர்கள் முகத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.சி) 125வது பிரிவை தூக்கி வீசவும். “பணிபுரியும் பெண்ணாக இருப்பது ஒரு பெண் ஜீவனாம்சம் பெறுவதில் இருந்து தகுதி இழக்கச் செய்யவில்லை என இந்தப் பிரிவு தெரிவிக்கிறது. ஆனால், வேலை மூலம் மட்டுமே தன்னை பராமரித்துக்கொள்ள முடியாது என்றும் தன் சம்பளத்தைவிட கணவரது சம்பளம் அதிகம் என்றும் அவர் நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டும்.
கணவரின் அந்தஸ்திற்கு ஏற்ப மனைவி வாழ வழிசெய்வதே இதன் நோக்கம்” என்கிறார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பர்னாலி பஸக். மதம், சாதி, இனம், படிப்பு ஆகிய பேதங்கள் இல்லாமல் எந்த ஒரு பெண்னும், தன்னை பராமரித்துக்கொள்ள முடியாவிட்டால், அவரது கணவரால் ஆதரவு அளிக்க முடியும் என்றால் அவரிடம் இருந்து பராமரிப்பு கோரலாம். “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சமூக நீதி வழங்குவதே இந்த பிரிவின் முக்கிய நோக்கம்” என்கிறார் பர்னாலி. விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்யாவிட்டாலும் கூட நீங்கள் பராமரிப்பு கோர தகுதி உடையவர்.
ஒரு ஆண் அவரது மனைவிக்கு பராமரிப்பு வழங்க முடியுமா என்பதை தீர்மானிக்க, நீதிமன்றம் அவரது சொத்துக்கள், வருமான வழிகள் ஆகியவற்றை பரிசீலிப்ப துடன், ஆதரவு அளிப்பதற்கான அவரது ஆற்றலையும் பார்க்கிறது. “எனது கட்சிக்காரர் ஒருவரது கணவருக்கு டேராடூனில் பல ஏக்கர் நிலம் மற்றும் சொந்த வர்த்தம் இருந்தது.
ஆனால் ஜீவனாம்சம் என வந்தபோது, அவர் நீதிமன்றத்தில் தன்னை செல்லாக்காசாக அறிவித்துக்கொண்டார். மற்றொரு வழக்கில் எனது கட்சிக்காரரின் கணவர் அதிக வருவாய் அளித்த தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வேலைக்கு போகும் தனது மனைவியிடம் இருந்து ஜீவனாம்சம் கோரினார். ஆண்கள் சொத்துக்களை தங்கள் பெயரில் வாங்காமல் பெற்றோர் பெயரில் வாங்கும் வழக்கத்தையும் வைத்துக்கொண்டு, தங்கள் பெயரில் சொத்து இல்லாமல் பார்த்துக்கொள்கின்றனர்” என்று சொல்கிறார் பர்னாலி.
ஜீவனாம்சம் போன்ற சிக்கலான விஷயத்தில் நீதிமன்றங்கள் மிகவும் கவனமாக எல்லா அம்சங்களையும் பரிசீலிக்கின்றன. இரு தரப்பினரும், தங்கள் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பட்டியலிட வேண்டும்.