கொரோனாவால் ஏற்பட்ட மாற்றம்: வேலைக்கு செல்வது அம்மா.. வீட்டைக் கவனிப்பது அப்பா..

by admin

அம்மா என்றால் வீட்டில் இருந்து குழந்தைகளை வளர்க்கவேண்டும். அப்பா வெளியே சென்று வேலை செய்து வருமானம் ஈட்டவேண்டும் என்பது முந்தைய நியதியாக இருந்தது. பின்பு அந்த நிலைமாறியது. அப்பா, அம்மா இருவருமே வெளியே சென்று வேலை செய்தனர். இருவர் வருமானத்தில் குடும்பம் இயல்பாக நடந்துகொண்டிருந்தது. அந்த இயல்புநிலையை கொரோனா தலைகீழாக மாற்றிவிட்டது. கொரோனா நோய்த்தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டாலும், அதனால் ஏற்பட்ட வேலையிழப்பு அபாயகரமானதாக இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பெண்கள் பெருமளவு இந்த தற்காலிக வேலையிழப்பில் இருந்து தப்பித்து வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். ஆண்கள் வேலையிழப்பில் சிக்கியிருக்கிறார்கள்.

இதனால் இப்போது பல வீடுகளில் அம்மாக்கள் வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். அப்பாக்கள் வீடுகளில் இருந்து குழந்தைகளை கவனித்துக்கொண்டு, குடும்பத்தையும் நிர்வகிக்கிறார்கள். இது தற்காலிகமான நிலைதான் என்றாலும், ஆண்கள் கடந்த மூன்று மாதங்களில் அதற்கு தயாராகிவிட்டார்கள் என்பது பெண்களின் கருத்தாக இருக்கிறது. “கொரோனா தாக்கம் தொடங்கியதும் சில மாதங்களாக குடும்பத்தினர் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிக்கிடந்தோம். அப்போது குடும்பத்தை நன்றாக புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் கிடைத்தது. சமையல் அறை வேலை, வீட்டை நிர்வகித்தல், குழந்தைகளை பராமரித்தல் போன்ற வேலைகளை அம்மா மட்டுமே செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை என்பதை எல்லோருமே புரிந்துகொண்டு முழுமனதோடு ஒத்தாசை செய்ததால், குடும்பத்தில் உள்ள அனைவருமே எல்லா வேலைகளுக்கும் பழகிக்கொண்டார்கள். அதனால் பெண்களாகிய நாங்கள் இப்போது வேலைகளுக்கு சென்றாலும், குடும்பத்தை கணவர் கவனித்துக்கொள்கிறார்” என்று குடும்பத்தலைவிகள் மகிழ்ச்சியாக சொல்கிறார்கள்.

கொரோனாவால் இந்தியாவில் உருவாகியிருக்கும் இந்த மாற்றம் வளர்ந்த நாடுகளில் முன்பே ஏற்பட்டுவிட்டது. இங்கேயும், முன்பே சிலர் இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர், புகழ்பெற்ற எழுத்தாளர் சேதன் பகத். வங்கியில் பணிபுரிந்து வந்த அவர் பணியை விட்டுவிட்டு தன் இரட்டை குழந்தைகளை பராமரிக்க வீட்டோடு இருந்துவிட்டார். ஓய்வு நேரத்தில் கதைகள் எழுதத் தொடங்கினார். அவருடைய மனைவி உயர்ந்த பதவியில் இருந்ததால், அவரால் குடும்பத்தை கவனித்துக்கொள்ள நேரம் ஒதுக்க முடியவில்லை.

சூழ்நிலைக்கு ஏற்றபடி நல்ல இல்லத்தரசராக மாறிக்கொண்ட சேதன் பகத் தன்னை ஒரு சிறந்த ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ என்று கூறி மகிழ்கிறார். அதை எல்லோரிடமும் பெருமையாக சொல்கிறார். அந்த உண்மையை ஒத்துக்கொள்வதில் தனக்கு தாழ்வுமனப்பான்மை ஒன்றும் இல்லை என்றும் கூறுகிறார்.

இவரைப்போன்ற பிரபலமான மனிதர்கள் மட்டுமின்றி, இன்றைய சராசரி ஆண்கள்கூட மகிழ்ச்சியுடன் இல்லத்தரசர் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால் சில ஆண்களுக்கு இதில் வெளியே இருந்து வேறுமாதிரியான நெருக்கடிகளும் ஏற்படத்தான் செய்கின்றன. பெங்களூருவை சேர்ந்த கேசவ் சொல்கிறார்:

“கொரோனாவால் நான் வேலையை இழந்துவிட்டேன். ஆனால் என் மனைவியோ மீண்டும் வேலைக்கு சென்றுகொண்டிருக்கிறார். ‘வேலை இல்லாமல் போனதை பற்றி கவலைப்படாதீர்கள். எனது சம்பளத்தில் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியும். இப்போது எந்த கவலையும் இன்றி குடும்பத்தை கவனித்துக்கொள்ளுங்கள்’ என்றார். எனக்கு அதுவும் சரியாகப்பட்டது. நான் இப்போது சமையல் உள்பட எல்லா வேலைகளையும் செய்துகொண்டு, என் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்.

ஆனால் உறவினர்களில் சிலர் ‘மனைவி சம்பாத்தியத்தில் சாப்பிடுகிறவன் என்ற பெயர் வந்துவிடுவதற்குள் வேறு வேலையை பார்த்து சென்றுவிடு. நீ வீட்டில் எவ்வளவுதான் உழைத்தாலும் அது கணக்கில் வராது. என்றாவது ஒருநாள் உன் மனைவியும், குழந்தைகளும்கூட உன்னை தரம்தாழ்த்தி பேசும்’ என்று பயமுறுத்துகிறார்கள். ஆயிரம்தான் இருந்தாலும் சம்பாதிக்கிறவங்க தான் வீட்ல பெரியவங்க. உன் மனைவி எஜமானர் போலவும் நீ வேலைக்காரன் போலவும் ஆகிவிடுவாய் என்றும் சொல்கிறார்கள். ஆனால் நான் அதை எல்லாம் கவனத்தில் கொள்வதில்லை. இப் போது நான் மட்டுல்ல, எங்கள் குடும்பமே மற்ற குடும்பத்தைவிட மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார், கேசவ்.

அம்மாக்கள்தான் குடும்ப நிர்வாகத்தை கவனிக்கவேண்டும் என்பது காலங்காலமாக பின்பற்றப்படும் கருத்தாக இருக்கிறது. அதில் அவர்கள்தான் தனித்திறமை பெற்றவர்கள் என்றும் நம்பப்படுகிறது. அதனால், அதை இப்போது அப்பாக்கள் செய்கிறார்கள் என்கிறபோது வித்தியாசமாக பார்க்கப்படுகிறது.

“ஒவ்வொரு குடும்பத்தையும் சிறப்பாக உருவாக்குவது அவரவர் பொறுப்பு. தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு நமது குடும்ப நிலவரம் புரியாது. சிலர் நம்மை விமர்சிப்பதையும், சிலர் பாராட்டுவதையும் நாம் கருத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. நமது வாழ்க்கைக்கு எது முக்கியமோ அதை மட்டுமே கவனத்தில்கொண்டு செயல்படவேண்டும்” என்று குடும்ப நல ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Visits:

Related Posts

Leave a Comment

Translate »