குழந்தைகளுக்கு ‘டேபிள் மேனர்ஸ்’ பழகுங்கள்

by admin

நம் வீட்டில் பெற்றோருடன் சாப்பிடுவதற்கும், வெளி இடங்களில் பலர் முன்னிலையில் சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நம் வீட்டில் ஆடி-ஓடி, உருண்டு-புரண்டு உணவு சாப்பிட்டாலும் அதில் தவறில்லை. ஆனால் வெளி இடங்களில், அதுவும் பலர் முன்னிலையில் உணவு சாப்பிட ஒரு வரைமுறை இருக்கிறது. அதைதான் ‘டேபிள் மேனர்ஸ்’ என்கிறார்கள். உறவினர்களோடும், பள்ளி நண்பர்களோடும், தெரியாத நபர்களோடும் உணவு சாப்பிடும்போது, பல விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். அவை என்னென்ன? என்பதை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்வோம்.

உணவு மேஜைக்கு சுத்தத்தோடு வரவேண்டும்

டேபிள் மேனர்ஸின் முதல் விதியே சுத்தம் பற்றியதுதான். நமக்கான ‘உணவு அழைப்பு’ வரும்போது, கை-கால்களை சுத்தமாக கழுவுவதோடு, முகத்தையும் கழுவி வரவேண்டும். சாப்பிடும் உணவிற்கும், உணவு சமைத்தவருக்கும் நாம் அளிக்கும் மரியாதையாக இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒற்றுமையாக துணி விரிப்பை விரியுங்கள்

இது மிகவும் முக்கியமான பழக்கம். உறவினர் வீட்டு உணவு விருந்தில் இருப்பதாக நினைத்து கொள்ளுங்கள். 15 நபர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் நிலை வந்தால், விருந்து ஏற்பாட்டாளர் இருக்கையில் அமர்ந்து, துணி விரிப்பை விரிக்கும் வரை காத்திருங்கள். அவருக்கு பிறகுதான், நாம் நம் மடியில் துணி விரிப்பை விரித்து சாப்பிட தயாராக வேண்டும். இது விருந்து ஏற்பாட்டாளருக்கு நாம் வழங்கும் மரியாதை.

வாய் திறந்து உணவை மெல்லக்கூடாது

நம் வீட்டில் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் பொது இடத்திலும், விருந்து நிகழ்ச்சியிலும் அடுத் தவர் முன்னிலையில் வாயை திறந்து மெல்லக்கூடாது. அது அடுத்தவர்களை அவமரியாதை செய்வதுபோல கணக்கிடப்படும்.

பிறர் பேசுவதை இடைமறித்து பேசாதீர்கள்

‘டைனிங் டேபிள்’ விருந்தில் பலருடன் சாப்பிடும்போது, சில சமயங்களில் பேச வேண்டிவரும். அப்படி ஒரு சூழ்நிலை உருவானால், அடுத்தவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்து பிறகு பேசுங்கள். ஏனெனில் டேபிள் மேனர்ஸில், பிறர் பேச்சை இடைமறித்து பேசு வது, அநாகரிகமாக பார்க்கப்படும். அதனால்தான், காத்திருந்து பேசும்படி கூறுகிறோம்.

வேண்டிய உணவை கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்

உங்களுக்கு பிடித்த உணவு பலகாரம் ஒன்று, நீங்கள் அமர்ந்து உண்ணும் இடத்திற்கு வெகு தொலைவில் இருந்தால், பக்கத்தில் இருப்பவர்களிடம் அதை எடுக்க சொல்லி சாப்பிடவேண்டும். எல்லோர் முன்னிலையிலும், எழுந்து சென்று எடுத்து வந்து சாப்பிடுவது தவறான பழக்கமே.

சாப்பிட்டப்பின் துணி விரிப்பை நாற்காலியில் வைக்கவேண்டும்

சாப்பிடுவதற்கு முன்பு நம் மடியில் விரித்த துணி விரிப்பை, சாப்பிட்டு முடித்த பிறகு நாம் அமர்ந்திருந்த நாற்காலியில்தான் போடவேண்டும். சாப்பாட்டு தட்டிலும், உணவு மேஜையிலும் துணி விரிப்பை போடுவது தவறு.

நாற்காலியை பின்னால் இழுத்து போடுங்கள்

சாப்பிட்டு முடித்தபின், கை கழுவ தயாராகிவிட்டால், உங்கள் நாற்காலியை பின்னால் நகர்த்தி, எழுந்திருங்கள். அப்போதுதான், நீங்கள் சாப்பிட்டு முடித்தீர்கள் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த முடியும்.

சாப்பிட்ட தட்டை நாமே எடுக்கவேண்டும்

இதுதான் முக்கியமான பழக்கம். ஏனெனில் நாம் சாப்பிட்ட தட்டை நாமே எடுத்து செல்லும் பண்பை குழந்தைகளிடம் வளர்ப்பது நல்லது. ஒரு சில மேலை நாடுகளில், குழந்தைகளையே சாப்பாட்டு தட்டை எடுத்து செல்ல சொல்கிறார்கள். ஒரு சில நாடுகளில் சாப்பிட்ட தட்டை குழந்தைகளே கழுவி வைக்கிறார்கள். அதனால் நம் குழந்தைகளிடம், தட்டை கழுவும் இடத்தில் கொண்டு போய் போடும் பழக்கத்தையாவது வளர்க்கவேண்டும்.

இவை டேபிள் மேனர்ஸின் ஒருசில பண்புகள்தான். இதுபோக நிறைய பண்புகள் இருக்கின்றன.

எப்படி ஸ்பூனை உபயோகிப்பது?, இறைச்சி உணவுகளை கூர்மையான கத்தி கொண்டு சாப்பிடுவது எப்படி?, விதவிதமான அளவுகளில் இருக்கும் ஸ்பூன்களை எது, எதற்கு பயன்படுத்தவேண்டும், ஸ்பூனில் சிந்தாமல் சாப்பிடுவது எப்படி?, நூடுல்ஸ் சாப்பிடும் முறை போன்றவற்றை பின்வரும் நாட்களில் தெரிந்து கொள்வோம். 

Visits:

Related Posts

Leave a Comment

Translate »