சிறு குழந்தைகளை கொண்ட தாய்மார்கள், புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள், குழந்தை பிறக்க போகும் தாய்மார்கள் என அனைத்து தாய்களுக்குமே ஏராளமான கேள்விகளையும், குழப்பங்களையும் இந்த கொரோனா ஏற்படுத்தி விட்டது. இந்த கொரோனாவில் இருந்து என் குழந்தையை எப்படி பாதுகாப்பது என்பது தான் அநேக தாய்களின் ஒரே கேள்வி. மேலும், இது போன்ற தருணங்களில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது பாதுகாப்பானதா என்றும் பல தாய்மார்கள் வினவுகின்றனர்.
தாய்ப்பாலின் அவசியம்
தாய்ப்பால் கொடுப்பதற்கு ஆதரவாக பல்வேறு சான்றுகள் உள்ளன. கோவிட்-19 தொற்றுநோய் பரவலின் போது அனைத்து தாய்மார்களும், தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம் என்று உலக சுகாதார அமைப்பானது பரிந்துரைத்துள்ளது. குழந்தை பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். இது, குழந்தையின் வளரச்சிக்கு உதவுகிறது. இன்றுவரை, தாய்ப்பால் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் கோவிட்-19 பரவுகிறது என்பது நிரூபிக்கப்படவில்லை.
தாய்ப்பால் கொடுப்பது புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு நோய்வாய்ப்படாமல் பாதுகாப்பதோடு, வளரும் குழந்தைகளையும் பாதுகாக்க உதவுகிறது. தாய்ப்பாலானது, தொற்று நோய்களை எதிர்க்க உதவுகிறது. ஏனெனில், இது தாயிடமிருந்து ஆன்டிபாடிகளை நேரடியாக, குழந்தைகளுக்கு வழங்குவதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும். நீங்கள் ஒரு குழந்தையைப் பெறப் போகிறீர்கள் என்றால், நீங்கள் பாதுகாப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
சர்வதேக நோய் தொற்று பரவல் காலங்களில் புதிய மற்றும் குழந்தை பேற்றை எதிர்பார்த்து காத்திருக்கும் தாய்மார்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான கேள்விகளையும், அதற்கான பதில்களையும் இப்போது பார்ப்போம்…
தொற்றுநோய்களின் போது தாய்ப்பால் கொடுப்பது பாதுகாப்பானதா?
சந்தேகமே வேண்டாம், முற்றிலுமாக பாதுகாப்பானது. தாய்ப்பாலானது, ஆன்டிபாடிகளை குழந்தைகளுக்கு வழங்குகிறது, இது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஊக்கத்தை அளிப்பதோடு, பல தொற்றுநோய்களிலிருந்தும் குழந்தையை பாதுகாக்க உதவுகிறது. குழந்தையை வெளியே கொண்டுசெல்ல நேர்ந்தால் கூட, தாய்ப்பாலில் உள்ள ஆன்டிபாடிகள் மற்றும் உயிர்-செயலில் உள்ள காரணிகள் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிராக போராடக்கூடும்.
உங்கள் குழந்தைக்கு 6 மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான வயது என்றால், பிரத்தியேகமான முறையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தை 6 மாதங்களுக்கு மேல் ஆனாலும், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான திட உணவுகளுடன் சேர்த்து, தாய்ப்பாலை கொடுப்பதையும் தொடரவும்.
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் என் குழந்தைக்கு கோவிட்-19 பரவுமா?
கோவிட்-19 தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து தாய்ப்பால் குறித்து பரிசோதித்து தான் வருகின்றனர். இன்று வரை, கோவிட்-19 ஆனது தாய்ப்பால் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பரவுவதாக தெரியவில்லை.
கோவிட்-19 இருந்தால் அல்லது இருப்பதாக சந்தேகித்தால், தாய்ப்பால் கொடுக்கலாமா?
கண்டிப்பாக கொடுக்க வேண்டும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர வேண்டியது அவசியம். அதாவது, முகமூடி அணிவது, சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுதல் அல்லது உங்கள் குழந்தையைத் தொடுவதற்கு முன்னும் பின்னும் ஆல்கஹால் சார்ந்த சானிடைசர் உபயோகித்தல் மற்றும் வழக்கமாக நீங்கள் தொட்ட மேற்பரப்புகளை சுத்தம் செய்தல், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் ஆகியவை இதில் அடங்கும். உங்கள் மார்பகங்களை கழுவி, தாய்ப்பால் கொடுத்த பிறகு அவற்றை மூடி வைக்கவும். ஒவ்வொரு முறை பால் கொடுக்கும் போதும் மார்பகங்களை கழுவ வேண்டிய அவசியமில்லை. தும்மல் அல்லது இருமல் வேளைகளில் மட்டும் சற்று சுத்தமாக பார்த்துக் கொள்ளவும்.
குழந்தையைப் பாதுகாக்க உதவும் பிற நடவடிக்கைகள்:
* இருமல் அல்லது தும்மல் வரும் வேளைகளில் டிஸ்யூ பேப்பர் பயன்படுத்திவிட்டு, உடனடியாக அதனை அப்புறப்படுத்திடவும்.
* நீங்கள் கைகள் தொட்ட மேற்பரப்புகளை எல்லாம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்திடவும்.
* முடிந்தவரை முகமூடி அணிந்துக் கொள்வது நல்லது.
* குழந்தையை உங்கள் படுக்கையிலிருந்து குறைந்தது 6 அடி தூரத்திலோ அல்லது முடிந்தால் வேறு அறையிலோ வைத்திருங்கள்.
* தாய்ப்பால் கொடுக்காத போது, ஆரோக்கியமாக உள்ள குடும்ப உறுப்பினரையோ அல்லது உறவினரையோ குழந்தையை பராமரிக்க செய்யுங்கள்.
குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா?
உங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்தே ஆக வேண்டும். உங்கள் குழந்தை கோவிட்-19 அல்லது வேறு ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்க வேண்டியது முக்கியம். தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்திடலாம். மேலும், உங்கள் ஆன்டிபாடிகள் தாய்ப்பால் மூலம் உங்கள் குழந்தைககு அனுப்பப்படுகின்றன. இது நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராட உதவிடும்.