இந்தியாவில் பெண்களும், சிறுவர்- சிறுமியர்களும் ரத்தசோகையால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் அதிக சோர்வு, உற்சாகமின்மை, எதிலும் கவனமற்றபோக்கு போன்றவை தோன்றும். ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது அன்றாட வேலைகளைகூட செய்யமுடியாமல் தடுமாறிப்போகிறார்கள். அவர்களது உடலில் போதுமான அளவு சத்துக்கள் இல்லாததால் பல்வேறு நோய்கள் தாக்கும் சூழ்நிலைகளும் உருவாகிறது. ரத்தசோகையை போக்குவதற்கு மருந்து, மாத்திரைகள் உட்கொண்டாலும் சத்துணவுகளை சாப்பிடுவதே சிறந்தது. ரத்தசோகைக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும் உணவுகளில் ‘முட்டை முருங்கை இலை ஆம்லெட்’ குறிப்பிடத்தக்கது. அதனை தயார்செய்து சுவையுங்கள்.
தேவையான பொருட்கள்
முட்டை – 3
முருங்கை கீரை – 1 கைப்பிடி
பால் – 2 மேஜைகரண்டி
பெரிய வெங்காயம் – 1
ப.மிளகாய் – 3
இஞ்சி – சிறிய துண்டு
தேங்காய் துருவல் – 3 மேஜைகரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
கரம்மசாலா தூள் – சிறிதளவு
மஞ்சள் தூள், மிளகு தூள் – தேவையான அளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
முருங்கை கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
பாலில் முட்டையை உடைத்து ஊற்றி நுரைவரும் அளவுக்கு நன்றாக அடித்து கலக்குங்கள்.
பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி போன்றவைகளை சிறிதாக நறுக்குங்கள்.
நறுக்கிய பொருட்களோடு தேங்காய் துருவல், சீரகம் போன்றவைகளை சேர்த்து மிக்சியில் போட்டு அரையுங்கள்.
அரைத்த மசாலாவில் முருங்கை இலை, மசாலா தூள் சேருங்கள். அத்துடன் மீதமிருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து மீண்டும் லேசாக மிக்சியில் ஓடவிடுங்கள். அதில் முட்டை கூழையும், உப்பையும் சேர்த்து நன்றாக கலக்குங்கள்.
*தோசைக் கல்லை சூடாக்கி கலவையை ஊற்றி ஆம்லெட்டாக சுட்டு சுவையுங்கள்.