ஆன்லைன் கல்வியில் உள்ள சில பிரச்சினைகள்

by admin

கொரோனாவால் கோடிக்கணக்கான மாணவ- மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது. யுனஸ்கோவின் அறிக்கை, உலகம் முழுக்க 150 கோடி பேரின் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறது. அதில் 30 கோடி பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் வீடுகளிலே உட்கார்ந்து பொழுதைப் போக்குவதைவிட, ஏதாவது ஒரு விதத்தில் புதிய கல்வியை ஆன்லைன் வழியாக கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். பிரபலமான கல்வி நிலையங்களில் நேரடியாக சென்று கல்வி கற்கும்போது பயணம், தங்குமிடம், கட்டணம் போன்றவைகளுக்காக அதிக பணம் செலவு செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அத்தகைய கல்வியை இப்போது ஆன்லைனில் கற்க அதிக பணம் செலவாகாது. வீட்டில் இருந்தே படிக்கலாம் என்பன போன்ற சவுகரியங்கள் இருந்தாலும், இந்த ஆன்லைன் கல்வியில் சில பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

ஆன்லைன் வழியாக கல்வி கற்க விரும்புகிறவர்கள் முதலில் வீட்டில் அதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்யவேண்டும். அந்த இடத்தில் தேவையான சவுகரியங்கள் இருப் பது அவசியம். இதற்கென்று தனி அறை இருந்தால் நல்லது. அந்த அறை சத்தமின்றி நிசப்தமாக இருக்கவேண்டும்.

உலகம் முழுக்க பல நாடுகளில் ஆன்லைன் கோர்ஸ்கள் இருந்தாலும், பொதுவாக அதனை மூன்று வகையாக பிரித்துவிடலாம்.

ஒன்று: ஒரு வாரம் முதல் 4 மாதங்கள் வரையிலான கால அளவைக்கொண்டது. அதில் இடம் பெறும் ஓப்பன்கோர்ஸ்களை ஆயிரக்கணக்கானவர்கள் கற்பதுண்டு. இதனை கற்று முடித்த பின்பு ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை கொடுத்தால் சான்றிதழும் வழங்குவார்கள். ஆனால் வேலை தரும் பல்வேறு நிறுவனங்கள் இத்தகைய சான்றிதழ்களை அங்கீகரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு: இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் பாடங்கள் நடத்துகின்றன. கல்லூரிகளில் சேர்ந்து படிப்பது போன்ற டிகிரி, டிப்ளமோக்களை இதிலும் கற்கலாம். ஆன்லைன் வகுப்புகளுக்கான வருகைப்பதிவேடு, பாடம் நடத்துதல், பரீட்சை வைத்தல், திறனாய்வு செய்தல் போன்றவை இதில் இடம்பெறும். கட்டணமும் வசூலிப்பார்கள். இந்த பட்டங்கள் அங்கீகாரத்திற்குரியது. ஆனால் எல்லா தொழில்நிறுவனங்களும் இதனை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்வதற்கில்லை.

மூன்று: சில தொழில் நிறுவனங்களும், தொழிற்பயிற்சி அமைப்புகளும் ஆன்லைன் சான்றிதழ் வகுப்புகள் நடத்துகின்றன. அதில் சிறப்பாக பயிற்சி பெறுபவர்களை அந்த நிறுவனங்களே வேலைக்கு சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

உலகம் முழுக்க தற்போது ஆன் லைன் வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதில் உங்களுக்கு பொருத்தமானவற்றை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். நீங்கள் கேள்விப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்களில் உள்ள சிறந்த பாடங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. இதில் சேர்ந்து படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், கட்டணம் அதிகமாக இருக்கக்கூடும்.

நீங்கள் ஏற்கனவே ஏதாவது ஒரு துறைசார்ந்த கல்வியை நேரடியாக கற்றிருப்பீர்கள். அதில் கூடுதலாக கற்றுக்கொள்ளும் விதத்தில் சில ஆன்லைன் கோர்ஸ்கள் நடக்கும். கம்ப்யூட்டர், குவாலிட்டி மேனேஜ்மென்ட், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட்ஸ் போன்றவைகளில் அவர்கள் சான்றிதழ் கல்வியை வழங்குவார்கள். அந்த துறை சார்ந்து வேலை தேட விரும்புகிறவர்களுக்கு இந்த சான்றிதழ்கள் கைகொடுக்கும்.

ஏராளமான நிறுவனங்கள் இலவசமாகவே ஆன்லைன் சான்றிதழ் கல்வியை வழங்குகிறார்கள். அதில் சிறந்ததை தேர்ந்தெடுத்து கற்கலாம். ஆனால் கோர்ஸ் முடிந்து சான்றிதழை கேட்கும்போது அதற்கு கட்டணம் வசூலிப்பார்கள். அதை கவனத்தில் கொண்டு படிப்பை தேர்ந்தெடுங்கள். பணம்கொடுத்து கற்க முன்வரும்போது, அந்த கோர்ஸ் பற்றிய ‘ரிவீவ்வை’ படித்துப்பார்த்து முடிவெடுங்கள். 

Visits:

Related Posts

Leave a Comment

Translate »