உடற்பயிற்சி செய்யும்போது உடலுக்கு பொருத்தமான ஆடையை அணிய வேண்டும். தளர்வான, இறுக்கமான உள்ளாடைகளை அணிவது உடற்பயிற்சிக்கு இடையூறாக அமையும். அதோடு ஆரோக்கியத்தையும் பல வழிகளில் பாதிக்கவைத்துவிடும். தினமும் உடற்பயிற்சி செய்யும் பெண்கள் உள்ளாடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பொருத்தமற்ற பிரா அணிவது மார்பகங்களின் வடிவத்தையும், தோற்றத்தையும் பாதிக்கும். மார்பகங்கள் தளர்வடைவது, வலி ஏற்படுவது போன்ற பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். உடற்பயிற்சி செய்வதற்கென்றே பிரத்யேக பிராக்கள் இருக்கின்றன. அத்தகைய ‘ஸ்போர்ட்ஸ் பிரா’ அணிவதன் அவசியம் பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பார்ப்போம்.
தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் ஸ்போர்ட்ஸ் பிரா அணிவதுதான் நல்லது. மார்கபங்களின் வடிவத்தை சீராக பராமரிக்க இது உதவும். கடினமான உடற்பயிற்சிகளை செய்யும்போது மார்பக தசைகள் விரிவடைவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த சமயத்தில் பொருத்தமற்ற பிரா அணிவது மார்பகத்தில் வலியை அதிகப்படுத்தும். ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது இத்தகைய பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
ஜூம்பா, ஜாக்கிங், நடைப்பயிற்சி, ஏரோபிக்ஸ் போன்ற உடல் இயக்க செயல்பாடுகளின் போது மார்பகங்களின் இயக்கம் அதிகரிக்கும். அசவுகரிய மாகவும் இருக்கும். அப்போது ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது மார்பகங்களின் இயக்கத்தை சீராக்கும்.
உடற்பயிற்சியின்போது உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளிப்படும். சருமத்திற்கு போதுமான காற்றோட்டம் கிடைப்பதற்கும் இடையூறு ஏற்படும். ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது உடலில் இருந்து வியர்வையை வெளியேற்ற உதவும். காற்றோட்டத்திற்கு ஏற்ப சருமத்தை குளிர்ச்சியாகவும், வறட்சியாகவும் வைத்திருக்க உதவும்.
உடல் இயக்க செயல்பாடுகளின்போது மார்பக திசுக்கள் பாதிப்புக்குள்ளாகும். பெரும்பாலும் மார்பக வலி பிரச்சினையை ஏற்படுத்தும். ஆதலால் உடற்பயிற்சி செய்யும்போது வலியை குறைப்பதற்கு ஸ்போர்ட்ஸ் பிரா அணிவதுதான் நல்லது. அவை வழக்கமான பிராக்களை போல் மார்பகங்களை இறுக்குவதில்லை. அணிவதற்கு சவுகரியமாக இருக்கும்.
வழக்கமான பிராக்களில் இருக்கும் எலாஸ்டிக், ஹூக்குகள் ரத்த ஓட்டத்திற்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய சூழலில் உடற்பயிற்சி செய்யும் பெண்கள் ஸ்போர்ட்ஸ் பிரா அணிவது நன்மை பயக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ரத்த ஓட்டத்திற்கும் உதவும். எந்த அசவுகரியமும் இல்லாமல் நீண்ட நேரம் அணியலாம்.
ஸ்போர்ட்ஸ் பிரா வாங்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்வதும் அவசியம். மார்பகத்திற்கு ஏற்ற சரியான கப் அளவு கொண்ட ஸ்போர்ட்ஸ் பிராவை தேர்ந்தெடுப்பது முக்கியமானது.
ஸ்போர்ட்ஸ் பிராவை தேர்ந்தெடுக்கும்போது அதன் பட்டைகளை சரிபார்க்க வேண்டும். இறுக்கமாகவும், மெல்லியதாகவும் இல்லாமல் மென்மையாக இருக்க வேண்டும். கடினமான உடற்பயிற்சிகளுக்கு பரந்த பட்டையுடன் கூடிய பிராவை தேர்ந்தெடுக்கவேண்டும். நடைப்பயிற்சி அல்லது யோகா போன்ற செயல்களுக்கு, சாதாரண ஸ்போர்ட்ஸ் பிராவை வாங்கலாம்.