குழந்தைளே செடியோடு விளையாடு இயற்கையோடு உறவாடு

by admin

வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகள் செடி, கொடிகளோடு விளையாடினால் எப்படி இருக்கும்…? அப்படி ஒரு பழக்கத்தை பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு பழக்கிவிட வேண்டும். விதை விதைப்பது, செடி வளர்ப்பது, வளர்ந்த செடியை பராமரிப்பது போன்ற பழக்கங்களினால், குழந்தைகளை உற்சாகப்படுத்தலாம். இந்த பழக்கம் குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டுவதோடு, பசுமையான பொழுதுபோக்காகவும் அமையும். பாடப்புத்தகங்களின் வழியே தாவர வகைகளை பற்றி தெரிந்து கொள்வதற்கும், வீட்டுத்தோட்டத்தில் செடி வளர்த்து புரிந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எப்படி என்கிறீர்களா…?

* எளிமையான செடிகளை தேர்ந்தெடுங்கள்

குழந்தைகளுக்கு இயற்கை பாடம் சொல்லி கொடுக்க, அதிகம் செலவழிக்க வேண்டியதில்லை. வீட்டு சமையலில் அதிகம் பயன்படுத்தும் தக்காளி, எலுமிச்சை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி போன்றவற்றை கொண்டே இயற்கை பாடம் நடத்தலாம். சமைத்தது போக மீதமிருக்கும் தக்காளி மற்றும் எலுமிச்சை விதைகளை, குழந்தைகளின் கையால் தோட்டத்தில் தெளித்துவிடுங்கள். அது ஓரிரு நாட்களில் செடியாக முளைத்துவிடும். கொத்தமல்லி, புதினா, இஞ்சி போன்றவற்றை நட்டு வைப்பதன் மூலம் செடிகளை வளர்க்கலாம். பப்பாளி, மாதுளை போன்ற பழவகைகளும் வெகு சுலபமாகவே வளரக்கூடியவை.

* அறிவியல் அறியட்டும்

சிறு தொட்டியில் மண் நிரப்பி, (கண்ணாடி தொட்டியாக இருப்பது சிறப்பு) அதில் குழந்தைகளை விதை நட செய்யுங்கள். ஒரு விதை எப்படி செடியாக முளைக்கிறது, எப்படி வேர் உருவாகிறது, வேர் வளர வளர செடி வளரும் ரகசியம், இலையின் வளர்ச்சி மாற்றம், நிற மாற்றம் இறுதியில் செடி பூ பூக்கும், காய் காய்க்கும் அதிசயம் போன்றவற்றை குழந்தைகளுக்கு கண் கூடாக காட்டுங்கள். இந்த பயிற்சி, தாவரம் பற்றிய முழு புரிதலை குழந்தைகளுக்கு உண்டாக்கும்.

அதற்கு முன்பாக மண் எப்படி உருவானது?, எந்தெந்த வகையான மணலில் செடிகள் செழித்து வளரும், செடி, மரம் வளர என்னென்ன தேவை? (வளமான மண், உரம், தண்ணீர், சூரிய வெளிச்சம்), நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் எப்படி உருவாகிறது? (மரம்தான் வெளியிடுகிறது), போன்றவற்றை குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். ஒரு சின்ன செடி, எவ்வளவு பாடங்களை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கிறது பார்த்தீர்களா…?

* செடிகளை வெட்டி, ஒட்டலாம்

காகிதங்களை மட்டுமல்ல, செடிகளையும் வெட்டி, ஒட்டி விளையாடலாம். ஆனால் அதற்கு பெற்றோரின் வழிகாட்டுதல் அவசியம். சிகப்பு நிற செம்பருத்தி பூக்கும் செடியில், திடீரென மஞ்சள் நிற பூ பூத்தால் எப்படி இருக்கும்?, இந்த அதிசயத்தையும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம். இருவேறு நிற செம் பருத்தி செடிகளின் தண்டுகளை வெட்டி, ஒன்றாக ஒட்டுவதன் மூலம் அவை ஒரே செடியாக வளர்ந்து, இருவேறு நிறங்களில் பூ பூக்கும். இந்த வெட்டு, ஒட்டு முறையில் பல செடிகளை வளர்த்து, வர்ணஜாலம் படைக்கலாம். மேலும் தாவர தண்டுகளில் ஒளிந் திருக்கும் தாவரவியல் பாடங்களையும் சுலபமாக கற்றுக்கொடுக்கலாம்.

* தோட்டத்தில் விளையாடுங்கள்

குழந்தைகள் விளையாட வேண்டிய மைதானங்களில், வீட்டுத்தோட்டமும் ஒன்று. மணல் பரப்பில் பள்ளம் தோண்டுவது, சிறு செடிகளை இடம்மாற்றி நடுவது, செடி-மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, பூக்களை பறித்து மணம் முகர்வது என இயற்கை எழிலோடு, குழந்தைகளை விளையாட விடுங்கள். வீட்டுத்தோட்டம் இல்லாதவர்கள், மாடித்தோட்டம், தொட்டி செடிகள் என குழந்தைகளை இயற்கையோடு பிசியாக வைத்திருக்கலாம்.

Visits:

Related Posts

Leave a Comment

Translate »