வீட்டிற்குள்ளே முடங்கிக்கிடந்து மனமகிழ்ச்சியின்றி தவிப்பவர்களுக்கு உற்சாகத்தை தர சிறந்தது, ஷாப்பிங் தெரபி. ‘ஷாப்பிங் என்றால் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதுதானே? பொருட்கள் வாங்கும்போது கையில் இருக்கும் பணமெல்லாம் கரைந்துவிடும் அல்லவா? அது எப்படி மகிழ்ச்சி தரும்?’ என்ற கேள்விகள் பலருக்குள்ளும் எழும். ஆனால் ஷாப்பிங்கை கலையாக ரசித்து செய்யத் தெரிந்தவர்கள், தேவையற்ற பொருட்களை வாங்கிக்கொண்டு வந்து வீட்டிற்குள் திணிக்கமாட்டார்கள். பல இடங்களில் பார்த்து தேவையான ஒரு பொருளை தேர்ந்தெடுப்பார்கள். அதனை தேர்ந்தெடுக்கையில் அவர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கும். நன்றாக பொழுதுபோகும். பல மனிதர்களை காண்பார்கள். அன்றாட அனுபவங்களில் நிறைய விஷயங்களையும் கற்றுக்கொள்வார்கள்.
“இந்த உலகம் வித்தியாசமான மனிதர்களை கொண்டது. மாறுபட்ட அழகினை பெற்றது. நாம் பார்க்கும் ஒவ்வொரு இடமும், ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு மனிதர்களும் வித்தியாசமானவர்கள்தான். ஷாப்பிங்கில் அவை அனைத்தையும் ரசிக்கலாம்.. பார்க்கலாம்.. பேசலாம். அதன் மூலம் எங்களுக்குள் இருக்கும் மனஅழுத்தத்தை வெளியேற்றி மகிழ்ச்சியடைகிறோம்” என்று இன்றைய இளையதலைமுறையினர் சொல்கிறார்கள். மக்களின் மனஅழுத்தத்தை போக்கி, உற்சாகத்தை தருவதால் அதற்கு ‘ஷாப்பிங் தெரபி’ என்று பெயர்.
மனஅழுத்தம் நிறைந்த இடத்தில் இருந்து தப்பித்து மனதுக்கு பிடித்த இடத்திற்கு செல்ல சிலர் ஷாப்பிங்கை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த ரகத்தினர்தான் ஒரு பொருளும் வாங்காமல், கடைகடையாக சுற்றிப்பார்த்துவிட்டு ‘வின்டோ ஷாப்பிங்’ செய்வார்கள். கடையில் இருக்கும் புதிய பொருட்களையும், அங்கு வரும் வாடிக்கையாளர்களையும் பொழுதுபோக்கு மனோபாவத்துடன் கண்டுகளித்தபடி நடந்துகொண்டே இருப்பார்கள். இது மனதில் இருக்கும் கவலையையும், பிரச்சினைகளையும் தற்காலிகமாக குறைத்து மனதுக்கு இதமளிக்கும். மனதை பாரமாக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த பொழுதுபோக்கு ஷாப்பிங் அனுபவத்தை பெற்றால் மனது இதமாகிவிடும்.
திருமண காலகட்டத்தில் மணப்பெண்ணும் அவரது குடும்பத்தினரும் அடிக்கடி ஷாப்பிங்குக்கு நேரத்தை ஒதுக்குவார்கள். அப்போது அவர்களை உற்றுக்கவனித்தால் ஒரு உண்மைபுரியும். ஷாப்பிங்குக்கு கிளம்பும்போதே அவர்களிடம் உற்சாகமான மனநிலை வந்துவிடும். எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் அதை எல்லாம் ஓரமாய் தூக்கிவைத்துவிட்டு கலகலப்பாகிவிடுவார்கள். அதே உற்சாகமான மனநிலையோடு ஷாப்பிங் செய்வார்கள். அந்த ஷாப்பிங் அவர்களது புதிய வாழ்க்கைக்கு துணைபுரிவதாக அமைவதால் கூடுதல் மகிழ்ச்சியடைவார்கள். அடுத்து சில நாட்கள் சோர்வில்லாமல் உழைப்பதற்கான சக்தியையும் அந்த ஷாப்பிங்கில் இருந்து பெறுவார்கள்.
ஷாப்பிங் செய்து ஒரு புதிய உடை வாங்கும்போது அது தொடர்புடைய கலர்கலரான கனவுகள் மனதிற்குள் அணிவகுத்து வந்துபோகும். அந்த உடை அணிந்தால் எப்படி இருக்கும்? அந்த நிகழ்ச்சியில் தனது அழகு எப்படி எல்லாம் எடுப்பாக இருக்கும் என்பதை எல்லாம் நினைத்துப்பார்த்து மகிழத்தொடங்கிவிடுவார்கள்.
ஷாப்பிங் பலருடைய தன்னம்பிக்கையையும் உயர்த்துகிறது. வேலைக்கான இன்டர்வியூவுக்கு செல்வதற்காக ஷாப்பிங் செய்து புதிய உடைகளை வாங்குவார்கள். அந்த உடை அவர்களுக்கு அதிக மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் தர ஷாப்பிங்கே காரணமாக இருக்கிறது. பல நண்பர்களை ஒன்றிணைத்து சந்திக்கவைக்கும் இடமாகவும் பிரபலமான ஷாப்கள் அமைகின்றன.
ஷாப்பிங் மால்களை பொறுத்தவரையில் அவை கம்யூனிட்டி சென்டர்கள் போன்று அமைகின்றன. அவை ஷாப்பிங் அனுபவத்தை மட்டும் தராமல் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கும் நல்ல வாய்ப்புகளையும் உருவாக்கித்தருகிறது. அங்கிருந்து நண்பர்களோடு மணிக்கணக்கில் உரையாடுவது மனஅழுத்தத்தை போக்கும் நல்ல மருந்தாக இருக்கிறது. புதிய இடங்களுக்கு ஷாப்பிங் செய்யசெல்லும்போது அதிக நேரம் நடப்பார்கள். வித்தியாசமான பொருட்களையும், புதிய நபர்களையும் பார்த்துக்கொண்டே செல்லும்போது நடக்கும் தூரம் தெரியாது. அதனால் அது நல்ல உடற்பயிற்சியாகவும் அமைந்துவிடுகிறது. உடல் இயக்கம் அதிகரிக்கும்போது அது உடலுக்கும், மூளைக்கும் கூடுதல் உற்சாகத்தை தரும்.
பொருட்களை வாங்குவதற்காக ஷாப்பிங் செய்வது நல்லவிஷயம்தான். ஆனால் ஷாப்பிங் தரும் சுகத்திற்கு அடிமையாகிவிடக்கூடாது. அது ஒரு போதைப்பழக்கம் போன்று உருவாகிவிட்டால், அதில் இருந்து மீள்வது கடினம்.