பச்சிளம் குழந்தைகளை தூக்கி கொஞ்சு பவர்கள் பெரும்பாலும் இடதுபுற தோளில்தான் குழந்தைகளை அரவணைப்பார்கள். தாயும் குழந்தையை இடது புற தோள்பட்டையில்தான் வைத்திருப்பார். குழந்தைகளும் அதைத்தான் விரும்பும். குழந்தைகளை அப்படி இடதுபுறத்தில் தூக்கி வைப்பவர்கள் பெரும்பாலும் வலது கை பழக்கம் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். குழந்தையை தூக்குவதற்கு வலது கையை பயன்படுத்தினாலும் வலது தோள்பட்டையில் அரவணைப்பதில்லை. அது குழந்தையை வைத்திருப்பதற்கு சவுகரியமாக இருக்காது என்று கருதினாலும் அறிவியல் ரீதியாக அதற்கு காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது.
1960-ம் ஆண்டிலேயே ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றிய ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள். 40 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 72 சதவீதம் பேர் இடது தோள்பட்டையில்தான் குழந்தைகளை வைத்திருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வலது கை பழக்கம் கொண்டவர்கள். அவர்களுடைய மூளையின் செயல்பாடுகளை ஆராய்ந்ததில் அது உணர்வு ரீதியான பந்தத்தை வெளிப்படுத்துவது கண்டறியப்பட்டது. கர்ப்ப காலத்திலேயே பாதுகாப்பான மற்றும் உணர்வு ரீதியான தொடர்பை தாய்க்கும், சேய்க்கும் இடையே உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிப்பதும் தெரியவந்துள்ளது.
அதாவது இதயம் உடலின் இடது பகுதியில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் தாயின் இதயத் துடிப்பு தெரியும். அந்த துடிப்புடன் நெருக்கமாக இருக்க விரும்பும். குழந்தை அழும்போது தாய் தூக்கி இடது பக்கத்தில் வைக்கும்போது சில நிமிடங்களில் அமைதியாகி விடும். இடது தோள்பட்டையில் சிறிது நேரம் வைத்திருந்தால் தூங்கியும் விடும். தாயின் அரவணைப்பில் இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளும். தாயின் உணர்வுகளையும், சமிக்ஞைகளையும் புரிந்து கொள்ளும். அதுவே குழந்தையின் மொழி சமிக்ஞைக்கும் அடித்தளம் அமைத்து கொடுக்கும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.