இரண்டாவது மாதத்தில் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு ‘மார்னிங் சிக்னெஸ்’ எனப்படும் காலைநேர சோர்வு ஏற்படும். வாந்தி, வயிற்றுவலி, அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு போன்றவை தோன்றும்.
இந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட சில உணவுகளின் மீது வெறுப்பும், சில உணவுகளின் மீது ஈர்ப்பும் ஏற்படும். வாந்தியால் சிலருக்கு உடல் எடை குறையும். உடல்எடை சிலருக்கு அதிகரிக்கவும் செய்யும்.
தலைவலி அவ்வப்போது தோன்றும்.
மார்பகங்களின் எடை அதிகரிக்கத் தொடங்கும்.
கர்ப்பிணிகளில் சிலரது சருமம் நன்றாக ஜொலிக்கும். சிலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றலாம்.
ஆறாவது வாரம் ஆகும்போது சிசுவின் இதயத் துடிப்பை கண்டறியலாம். அப்போது 140-150 என்ற கணக்கில் இதயத்துடிப்பு இருந்துகொண்டிருக்கும். சிசுவில் ரத்த ஓட்டம் தொடங்கும். நரம்புகள் வளரும்.
எட்டு வாரங்கள் ஆகும்போது சிசு ஆரஞ்சு பழ அளவில் வளர்ந்திருக்கும். சிசுவின் மூளை, நரம்பு மண்டலம், இதய தசைகள், எலும்புகள் உருவாகத் தொடங்கும்.
இரண்டு மாதம் கொண்ட சிசு 2.5 செ.மீ. நீளமாக இருக்கும்.
இந்த இரண்டாம் மாதத்தில்தான் பெரும்பாலானவர்கள் தாங்கள் கர்ப்பமாகியிருப்பதை உணர்கிறார்கள். இந்த காலகட்டத்தில் ‘எக்டோபிக் பிரெக்னன்சி’ என்பது குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. கருப் பைக்கு வெளியே கரு வளருவதே இந்த பாதிப்பு. இதில் 50 சதவீதம் அளவுக்கு ‘டியூபல் பிரெக்னன்சி’ உருவாகிறது. அதாவது கருக்குழாயிலே கரு தங்கி வளர்ந்துவிடும்.
அப்போது கரு வளர்ச்சியால் கருக்குழாய் வெடித்துவிட்டால் ரத்தப்போக்கு, அதிக வயிற்று வலி, ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து நினைவிழப்பு உருவாகுதல் போன்றவை ஏற்படும். கர்ப்பிணியை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உள்ளாக்காவிட்டால் இறப்புகூட ஏற்படலாம்.
இரண்டாவது மாதத்தில் கர்ப்பிணிகள் மிக கவனமாக இருக்கவேண்டும். அலட்சியத்தால் ஒருவேளை கரு கலையும் சூழல் உருவாகும். இரண்டாம் மாதத்தில்தான் பெரும்பாலானவர்கள் அபார்ஷனால் பாதிக்கப்படுகிறார்கள்.
இரண்டாவது மாதத்தில் கர்ப்பிணிகள் பயணம் மேற்கொள்ளலாம்தான். ஆனால் சோர்வுதரக்கூடிய, உடலை குலுக்கக்கூடிய பயணம் மேற்கொள்ளக்கூடாது. இருசக்கர வாகன பயணம், ஆட்டோ பயணங்களை தவிர்த்துவிடலாம். பாதுகாப்பான முறையில் நீண்ட தூர பயணம் மேற்கொண்டாலும் இடைஇடையே ஓய்வு மிக அவசியம்.
ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள், அதனை நிறுத்தவேண்டியதில்லை. ஆனால் ஜிம் பயிற்சியாளரிடம் தான் கர்ப்பிணி என்பதை கூறிவிடவேண்டும். ஏற்கனவே அபார்ஷன் ஆகியிருந்தால் ஜிம் பயிற்சிக்கு செல்லாமல் தினமும் சிறிது நேரம் நடந்தால்போதும்.
கர்ப்பத்தின் இரண்டாவது மாதத்தில் இடைவெளிவிட்டு அவ்வப்போது குறைந்த அளவில் சாப்பிடவேண்டும். தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் பருகவேண்டும். உடலுக்கு தினமும் 5 மி.கி. போலிக் ஆசிட் தேவை. மார்னிங் சிக்னெஸ், வாந்தி போன்றவை இருந்தால் இஞ்சியை பயன்படுத்தலாம்.