இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பல்வேறு கல்விமையங்கள் கற்றல் தொடர்பான விதவிதமான கோட்பாடுகளை சொல்கின்றன.
குழந்தைகளின் மூளை நரம்புகளை வரைபடமாக போட்டு, கல்வியாளர் மரியா மாண்டிசோரி, மதுல் ஹோவர்ட் கார்ட்னர் வரை பெயர்களை சொல்லி லட்சக்கணக்கான பிஞ்சு குழந்தைகளின் மேல் சுமைகளை ஏற்றுகின்றனர். கணிதம், காலிக்ராபி, ஓவியம், நுண்கலை என விதவிதமான பயிற்சிகளை அளித்து ஒரு தலைமுறையையே குழந்தை மேதைகளாக்க பெற்றோர் முயற்சி செய்கின்றனர்.
குழந்தைகளுக்கு விளையாட போதிய இடத்தை வழங்காததன் மூலம் திறந்தவெளி பற்றி அவர்கள் பெறும் அறிவையும், புறச்சூழலுக்கு ஏற்ப தன்னிச்சையாகச் செயல்படும் நரம்பு மண்டலம் குறித்த புரிதல், தொடுதல் மற்றும் உணர்வுரீதியான வளர்ச்சியை நாம் பறித்து விட்டோம். மணலில் விளையாடுவதற்கும், தண்ணீரில் குதித்தாடுவதற்கும், களிமண்ணை பிசைந்து விளையாடுவதற்கும் வழிகாட்டுதல்கள் எதுவும் அவசியம் இல்லை.
ஆனால் இந்த செயல்பாடுகள் ஆரோக்கியமான பலன்களை அதிகம் கொண்டவை. கோ-கோ, கபடி போன்ற விளையாட்டுகள் மூலம் சரியானது எது, தவறு எது என்பதை குழந்தைகள் அறிந்து கொள்கின்றனர். அத்துடன் துணிகர முயற்சிகளை எடுக்கவும், பிரச்சினைகளை தீர்க்கவும், அணி சேர்க்கவும், மற்றவர் மீது பிரியமாக இருக்கவும் கற்று கொள்கிறார்கள்.
அப்படியான விளையாட்டுகளில் ஈடுபடும் குழந்தைகள், தந்திரம் அற்ற புத்திசாலித்தனத்துடன் இருப்பார்கள். வன்முறை இல்லாத அதேவேளையில் துணிச்சலாக செயல்படுவதற்கு பயப்படாதவர்களாக இருப்பார்கள். சின்னச் சின்ன காயங்கள், வீக்கங்கள், அழுகை போன்றவை இல்லாத குழந்தைப் பருவம் குழந்தை பருவமே அல்ல. கீழே விழாமல் எப்படி எழுவதற்கு குழந்தைகள் கற்று கொள்வார்கள்?. அவரவர் கொண்டுவந்த பண்டங்களைத் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல், கருத்துகளை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல், அவர்களால் எப்படி சமூகத் திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும்?. பயிற்றுவிப்பதைவிட கலந்துரையாடல்களில்தான் சமூகத்திறன்கள் வளர்கின்றன.
பள்ளியைவிட அதற்கு வேறெந்த இடம் சிறப்பாக இருக்கமுடியும்?. சொந்தமாக ஒரு வாக்கியத்தை உருவாக்க முடியாத குழந்தைகள் எப்படி வளர்ந்து எல்லாவற்றையும் உள்நாட்டிலேயே உருவாக்கும் திறனைப் பெற போகிறார்கள்?. விளையாடுவதற்கான சுதந்திரம், அவரவர் இயல்புக்கேற்ப கல்வி கற்பதற்கான உரிமை எல்லாமே குழந்தைகளின் பிறப்புரிமைகள். குழந்தைகள் பகல் கனவு காணவும், கிறுக்கவும் செய்யலாம். ஆனால் அவர்கள் அந்த செயல்கள் மூலம் கற்கிறார்கள். அவர்கள் ஓடலாம், குதிக்கலாம், விழலாம், பரஸ்பரம் சண்டை போடலாம். அவர்கள் கற்கிறார்கள். அவர்களை கற்க விடுவோம். அவர்களை விளையாட விடுவோம்.