கொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி?

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சாதாரண நோய் அறிகுறிகள் தென்பட்டாலே பயமடைந்துவிடுவது பொதுவாக மனிதர்களின் இயல்பு. அந்த பயம் எல்லைமீறி மனக்குழப்பம் உருவாகும்போது அது பீதியாக மாறிவிடும். மனிதர்களுக்கு பீதி உருவாகிவிட்டால் அவர்கள் பதற்றமடைந்து நிலைதடுமாறிவிடுவார்கள். இல்லாததை எல்லாம் தனக்கு இருப்பதாக கருதிக்கொண்டு அதிர்ச்சியில் உறைந்துபோய் விடுவார்கள். அதன் மூலம் அவர்கள் மனநலமும், உடல்நலமும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகிவிடும். அப்படிப்பட்ட பீதியான சூழ்நிலையை உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த வைரஸ் வரலாற்றை ஆராய்ந்தால் அதன் தாக்குதல் உலகில் ஏதாவது ஒருபகுதியில் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. நாம் நவீன மருத்துவத்தின் மூலம் அவைகளை கட்டு்ப்படு்த்தியிருக்கவே செய்கிறோம். இன்னொருபுறம் பார்த்தால் சாதாரண சளிக்காய்ச்சலுக்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பாதிக்கப் படுகிறார்கள். அதில் மூன்று லட்சம் முதல் 6 லட்சம் பேர் ஆண்டுக்கு மரணமடைகிறார்கள். மட்டுமின்றி புற்றுநோய், இதயநோய், சர்க்கரை நோயாலும் பெருமளவு மரணம் ஏற்படத்தான் செய்கிறது.

இ்ந்த நிலையில் கொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி? என்ற கேள்வி எழுகிறது. உலக சுகாதார அமைப்பு, ‘சர்வதேச அவசர நிலையாக’ இதனை அறிவித்தது இதில் சுட்டிக்காட்டப்படுகிறது. ‘இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதி இல்லாத நாடுகளுக்கு அந்த வசதியை அளிப்பதற்காகத்தான்’ இந்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதனால் அதை நினைத்து பீதியடைய வேண்டியதில்லை. அதே நேரத்தில் காய்ச்சல், ஜலதோஷம், நிமோனியா போன்றவை சில நாட்களுக்கு மேல் நீடித்து மூச்சுத்திணறலாக மாறினால் மட்டும்தான் உடனே கவனிக்கவேண்டும். நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் தொற்றாகும்.

வைரஸ் நோய்கள் சுவாச உறுப்புகள் தொடர்புடையதாக இருப்பதால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றாமல் இருக்க கவனம் செலுத்தவேண்டும். நாம் பேசும்போது உமிழ்நீர் பிசிறுகள் வெளிப்படும். அதனை டிராப்லெட் (droplet) என்போம். ஒருவர் மூலம் இன்னொருவருக்கு ‘டிராப்லெட் இன்பெக்‌ஷன்’ ஏற்படாமல் இருக்க மூக்கு, வாய் பாதுகாப்பு அவசியம். பேசும்போதும், தும்மும்போதும் கவனம் தேவை. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் செல்வதையும் தவிர்க்கலாம்.

பொதுவாக வைரஸ் கிருமிகள் உடலில் புகுந்தால், உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி அதை எதிர்க்கும். அதையும் மீறி அந்த வைரஸ் கிருமிகள் உடலை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை அறிய முன்பெல்லாம் சில நாட்கள் காத்திருந்து பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது. இப்போது அதற்காக காத்திருக்க வேண்டியதில்லை. ‘பி.சி.ஆர்’ என்ற நவீன பரிசோதனைமுறை எல்லா இடங்களிலும் உள்ளது. அதன் மூலம் உடனே கொரோனா போன்ற வைரஸ் பாதிப்புகளை கண்டறிந்துவிடலாம். கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக கண்டுபிடித்தால்கூட அது 100-ல் 2 பேருக்குதான் அதிக பாதிப்பை உருவாக்கும். இதன் தாக்குதலை முறியடிக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன.

வைரஸ் நோய்கள் தாக்காமல் இருக்க எடுக்கவேண்டிய பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

வைரஸ் நோய்கள் தொற்றாமல் இருக்க மூக்கையும், வாயையும் மூடிக்கொள்ளும் மாஸ்க் அணிவது வழக்கத்தில் உள்ளது. இதில் கவனிக்கத் தகுந்த விஷயம் என்னவென்றால், மூன்று அடுக்குகளை கொண்ட மாஸ்க்குகள் மட்டுமே முழுமையான பாதுகாப்பு அளிக்கும். எல்லாவித மாஸ்க்குகளும் முழுபாதுகாப்பு அளிப்பதில்லை என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்.

நோயாளி மட்டும் மாஸ்க் அணிந்தால் போதாது. அவரை பராமரிப்பவரும், அவரை சந்திக்க செல்பவர்களும் மாஸ்க் அணிவது அவசியம்.

வீட்டில் வைரஸ் தாக்கிய நோயாளிகள் இருந்தால் அவர்கள் பயன்படுத்திய டவல், டிஸ்யூ, பாத்திரங்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பொது இடங்களில் போடக்கூடாது. பாதுகாப்பானமுறையில் அப்புறப்படுத்தவேண்டும். நோயாளிகளை பராமரிப்பவர்கள் அதன் பின்பு கைகளை நன்றாக சோப்பிட்டு கழுவவேண்டும்.

லேசான சுடுநீரில் உப்புகலந்து அவ்வப்போது வாயை கொப்பளிப்பது வைரஸ் உடலுக்குள் பரவுவதை ஓரளவு தடுக்கும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள், காய்கறிகளை சுத்தமாக கழுவி சாப்பிடவேண்டும். உணவில் உப்பை குறைப்பது சுவாசப் பகுதியில் ஏற்படும் நெருக்கடிகளை குறைக்கும். ஊறுகாய், உப்பில் ஊறவைத்த இதர உணவுப் பொருட்கள், டின்னில் அடைத்துவைத்திருக்கும் பதப்படுத்திய உணவுகளையும் தவிர்த்திடுங்கள்.

பொது இடங்களில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல் போன்றவைகளை தவிர்த்திடவேண்டும்.

மனிதர்கள் எச்சில் துப்பும்போது அதில் 10 முதல் 12 மணி நேரம் வரை வைரஸ்கள் உயிரோடு இருக்கும். நோயாளிகள் இருக்கும் அறையில் உள்ள உலோகங்களிலும் வைரஸ் காணப்படும். அதனால் அவைகளை தொட்டாலும் உடனே கைகளை நன்றாக கழுவவேண்டும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை அத்தியாவசியம் இருந்தால் மட்டும் சந்திக்கசெல்லுங்கள். நோயாளி களிடம் இருந்து நோய் பரவுவதை அதன் மூலம் தடுக்கமுடியும். அதுமட்டுமின்றி நோயாளிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களையும் அதன் மூலம் தடுக்கலாம்.

உணவு சாப்பிடுவதற்கு முன்பும்- பின்பும் கைகளை நன்றாக கழுவுவதோடு, கைகளில் ஈரத்தன்மை இல்லாத அளவுக்கு உடனே துடைப்பதும் அவசியம். அதுபோல் கழிவறைக்கு போகும் முன்பும்- பின்பும் கைகளை சோப்பிட்டு கழுவி நன்றாக துடைத்திடவேண்டும்.

வளர்ப்பு பிராணிகளிடம் கவனமாக இருங்கள். நெருங்கிப்பழகவேண்டாம். அதுபோல் பொதுவாகனங்களில் செல்லும்போதும், பொது இடங்களில் செல்லும்போதும் கவனம் தேவை.

பாதுகாப்பான, சூடான உணவுகளை மட்டும் உண்ணுங்கள். அசைவ உணவுகளை குறிப்பிட்ட காலத்திற்கு தவிர்ப்பது நல்லது. முடிந்த அளவு வீட்டில் உணவு தயாரித்து சாப்பிடுங்கள். உங்கள் வாழ்விடப் பகுதிகளையும் சுத்தமாக வைத்திருங்கள்.

வைரஸ் நோய்களை பற்றிய தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பெருமளவு பரவுகின்றன. அவைகளை அப்படியே நம்பி பீதி அடையவேண்டாம். அதே நேரத்தில் உங்களுக்கு ஏதாவது ஒருவிதத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதை அலட்சியம் செய்யவேண்டாம். டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள். மாறாக சுய மருத்துவம் மேற்கொள்ளும் எண்ணத்தில் மருந்துகடைகளில் (டாக்டரின் பரிந்துரையின்றி) மருந்துகளை வாங்கி சாப்பிடாதீர்கள்.

எந்த வைரஸ் நோயும் தாக்காத அளவுக்கு உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ள முடியும். அந்த பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடியுங்கள். நம்பிக்கையோடு இருங்கள். அதே நேரத்தில் எப்போதும் விழிப்புடன் செயல்படுங்கள்.

Related Posts

Leave a Comment

Translate »