கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பால் கை கழுவுவது பற்றிய விழிப்புணர்வு பெருகி இருக்கிறது. சாப்பிடும் சமயத்தில் மட்டுமே கை கழுவுவதில் அக்கறை கொள்பவர்கள், இப்போது எந்த வேலையை செய்து முடித்தாலும் உடனே கைகளை கழுவுவதற்கு பழகிவிட்டார்கள். கைகளை தூய்மையாக வைத்துக்கொள்வதுபோல் கை விரல் நகங்களை சுத்தம் செய்வதற்கும் மறக்காதீர்கள் என்பது சுகாதார அதிகாரிகளின் வேண்டுகோளாக இருக்கிறது. ‘விரல் நகங்களின் இடுக்குகளில் கிருமிகள் தங்கி இருந்து நோய் தொற்றுகளை பரப்பக்கூடும்’ என்கிறார்கள்.
இதுகுறித்து தோல் மருத்துவர் டோரிஸ் கூறுகையில், “கைகளை கழுவும்போது மேற் பரப்பில் படிந்திருக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட கிருமிகள் வெளியேறும். அந்த சமயத்தில் விரல் நகங்கள் தூய்மையாக பராமரிக்கப்படாவிட்டால் அவற்றுக்குள் அந்தக் கிருமிகள் நுழைந்துவிடும். நூற்றுக்கணக்கான பாக்டீரியாக்கள், சில வைரஸ் கிருமிகள் உயிர்வாழ்வதற்கு விரும்பும் பகுதியாக விரல் நகங்கள்தான் இருக்கின்றன. ஆதலால் கைகளை சுத்தம்செய்யும்போது விரல் இடுக்குகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்கிறார்.
கொரோனா போன்ற வைரஸ் கிருமிகள் பரவும் இந்த நேரத்தில் நகங்களை நீளமாக வளர்ப்பது நல்லதல்ல என்றும், சுகாதார அதிகாரிகள் கூறுகிறார்கள். ‘‘குறுகிய நகங்களை விட நீண்ட நகங்களுக்குள்தான் அழுக்குகள் எளிதில் படிந்துவிடும். அவைதான் பாக்டீரியாக்கள் உயிர்வாழ்வதற்கான சவுகரியமான இடமாக திகழ்கின்றன. இதனால் எளிதாக தொற்றுகள் பரவுவதும் சாத்தியம்தான். நகங்களை வெட்டும்போது காயமோ, வலியோ ஏற்படுவதற்கு இடம்கொடுக்கக்கூடாது. அத்தகைய வெட்டு காயங்களில் கிருமிகள் எளிதில் படிந்துவிடும். நோய் தொற்றுகளை விரைவாக பரப்புவதற்கும் அவை வழிவகை செய்துவிடும். நகத்தை வெட்டும்போது தசையையொட்டிய பகுதி வெளியே தெரியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நகத்தின் இடுக்கில் படந்திருக்கும் வெள்ளை பரப்பை முழுவதுமாக நீக்கிவிடவும்கூடாது. குறைந்தபட்சம் ஒன்று முதல் 2 மில்லி மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். அப்போதுதான் நகத்தையொட்டிய சதைப்பகுதிக்கு பாதிப்பு நேராது’’ என்றும் சொல்கிறார்கள்.
நகங்களில் பாலிஷ் போட்டிருந்தால் அவற்றை அப்புறப்படுத்துவதும் நல்லது. நகங்கள் உலர்ந்தோ, நொறுங்கி போகும் தன்மையுடனோ இருந்தால் அவற்றின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவது அவசியம். அரிசி, ஓட்ஸ் போன்ற கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு பொருட்கள், ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்திருக்கும் வாழைப்பழங்கள், கிவி, திராட்சை போன்ற பழ வகைகள், கீரைகள் உள்ளிட்டவற்றை சாப்பிடுவது நகங்களை வலுப்படுத்தும்.